;
Athirady Tamil News

ஈரானின் 2 படகுகளை அழித்த அமெரிக்க ராணுவம்- மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

0

வாஷிங்டன்:

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா இயக்கி வந்த ஆளில்லா கடல் டிரோனை கைப்பற்ற முயன்றதாக கூறி, ஈரானின் 2 சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டள அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், ஈரானின் சிறிய படகுகள் அமெரிக்காவின் ஆளில்லா கடல் வாகனத்தை கைப்பற்ற முயன்றதாகவும், இதையடுத்து அமெரிக்க படைகள் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா கடல் டிரோன், சுமார் 8 மீட்டர் நீளமுடைய ‘செயில்டிரோன்’ வகையைச் சேர்ந்தது. இது தானாக இயங்கக்கூடியது என்றும், கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தை கண்காணிக்க அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு பல ஆண்டுகளாக இதனை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாண கடற்பகுதியில் 2 மீன்பிடி படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் சில மீனவர்கள் காணாமல் போனதாகவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் நீருக்கடியில் இயங்கும் டிரோன் ஒன்றை ஈரான் கடற்படை கைப்பற்றியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்திருந்தது. அந்த டிரோன் பழைய மாடல் என்றும், அதில் ரகசிய தகவல்களை சேகரிக்கும் கருவிகள் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.