;
Athirady Tamil News

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

0

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய அரசியல் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (29) மாலை  நேரில் சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பின் போது, சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவர் எதிர்கொண்டுள்ள சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் அவரது குடும்பத்தினருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக இதுவரை பல்வேறு தூதரக மற்றும் அரச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முயற்சிகள் குறித்தும் இதன்போது குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அனோஜன் மிக விரைவில் விடுதலையாகித் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்காக, சாத்தியமான அனைத்து சட்ட ரீதியான மற்றும் அரசாங்க மட்டத்திலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாகப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். மேலும், அவரது விடுதலைக்காக உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ் இக்கட்டான சூழ்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ஆறுதலையும் வழங்கி, அவர் விடுதலையாகும் வரை தொடர்ந்து பாடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.