;
Athirady Tamil News

ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு ; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடிச் சரிவு

0

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, காங்கிரஸில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிவடைந்துள்ளது.

ஈரான் – அமெரிக்கப் போர் முடிவுக்கு வருவதற்கான இராஜதந்திர வாய்ப்புகள் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைக்கான முக்கிய அளவுகோலான பிரென்ட் (Brent) வகை எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 95 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் சரிந்துள்ளதாகவும், அமெரிக்காவின் WTI வகை கச்சா எண்ணெயின் விலையும் 89 டொலர்களுக்கும் கீழ் சென்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதுடன், காங்கிரஸின் கட்டுப்பாடு அவர்களிடம் சென்றுள்ளது. இதனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டமூலங்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை முன்னெடுப்பதில் அரசியல் சவால்கள் அதிகரித்துள்ளன.

ஈரானுடனான போர் மற்றும் அதன் காரணமாக அதிகரித்த எரிபொருள் விலைகள் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தியதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து ஈரானுடனான போரைத் தொடர்வதா, தீவிரப்படுத்துவதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்பது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நெதன்யாஹூ தலைமையிலான கூட்டணி 53 ஆசனங்களைப் பெற்றிருந்தபோதிலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.

இதனால் அந்நாட்டிலும் அரசியல் கூட்டணி அமைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்பான எதிர்பார்ப்புகள் சர்வதேச எரிசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

எனினும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு தொடர்ந்து நீடிக்குமா என்பது ஈரான் – அமெரிக்கப் போர் தொடர்பான அடுத்தகட்ட முன்னேற்றங்கள், எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தே அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.