;
Athirady Tamil News

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு: தாழ்நில பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்கவும்

0
வடக்கு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் மழைக்கான வாய்ப்புள்ளமையால், வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளமையால் ,தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா  அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 14ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.
அது, இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகரும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதால் நாட்டின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக  வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, தெற்கு, வடமேற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 250 மி.மீ. மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை எதிர்வரும் நாட்களில் வடக்கு,மத்திய, சப்ரகமுவா, தெற்கு, மேற்கு, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதனால் நிலம் முழு ஈரப்பதக் கொள்ளளவை எட்டி விடும். இத்தகைய சூழலில் எதிர்வரும் 14 அன்று உருவாகவுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மிகக் கனமழை கிடைக்கும் போது,  வடக்கு, மேற்கு, வட மேற்கு ,மத்திய, தெற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தம் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ஆகவே தாழ்நிலப் பகுதிகளும், வழமையாக வெள்ளம் நிற்கும் பகுதிகளிலும், எதிர்வரும் 18ஆம் திகதி வரையில், விசேட அவதானம் செலுத்த வேண்டும்.கனமழை மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கும் விழிப்பூட்ட வேண்டும்.
அத்துடன் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
You might also like

Leave A Reply

Your email address will not be published.