;
Athirady Tamil News

பழுதடைந்த வெங்காயம் விற்பனை செய்த வர்த்தகருக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

0
பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மொத்தமாக 10,000 ரூபா அபராதமும், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து நேற்று (19) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் (10.11.2026) சம்மாந்துறைப் பகுதியில் பழுதடைந்த வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, அதிகாரிகள் உடனடியாகச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கிலோ 250 கிராம் பழுதடைந்த வெங்காயம் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தின் பொது சுகாதாரப் பிரிவினரால்  ‘பி’ (B) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணைகளின்போது சந்தேகநபர் 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு நேற்று (19) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளுக்கும் நீதவான் பின்வரும் தண்டனைகளை விதித்துத் தீர்ப்பளித்தார்.

முதலாவது குற்றச்சாட்டு (பழுதடைந்த வெங்காயம் விற்பனை) குறித்த குற்றத்திற்காக 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாத காலச் சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.இரண்டாவது குற்றச்சாட்டு (மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை): இக்குற்றத்திற்காக மேலும் 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றிச் சட்ட நடவடிக்கை எடுப்பதும் தமது பிரதான கடமையாகும் என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.