;
Athirady Tamil News

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

0

கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’   போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நிந்தவூர் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் விசேட கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை வழிமறித்த பொலிஸார், அவர்களைச் சோதனைக்குட்படுத்தினர்.

இச்சோதனையின் போது, குறித்த சந்தேக நபர்கள் வசம் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவுக்கமைய, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலில்  அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயணவின் நெறிப்படுத்தலில், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.எஸ். நிசாந்த வெதகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (19) சம்மாந்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.