16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!
நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அவருக்கு மாதாந்தக் கொடுப்பனவொன்றை வழங்கப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை உலமா கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பில் இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், 15 வயதுடைய பெண் ஒருவர் திருமணம் முடித்தாலோ அல்லது முடிக்காமலோ உறவில் ஈடுபட்டால் அவருக்குத் தண்டனை இல்லை என்பதும், மாறாக அவருக்கு அரசு உதவி செய்யும் என்பதும் தெளிவாகிறது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட அப்பெண் 18 வயது பூர்த்தியாகும் வரை திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம், அவரின் குழந்தைக்கு இழைக்கப்படும் அநியாயமாகவே நாம் பார்க்கிறோம். இன்னும் ஐந்து வருடங்களில் அக்குழந்தை பாடசாலை செல்லும் போது, சமூகத்தில் ‘தந்தை இல்லாத பிள்ளை’ என்ற அவப்பெயரைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.
திருமண வயது 18 என்பது நடைமுறைக்குப் பொருந்தாத சட்டமாக உள்ளது என்பதை இத்தகைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. தற்போதைய இணைய யுகத்தில் 12 வயதிலேயே சிறுவர்கள் காதலில் விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, 18 வயது என்ற திருமண வயதை மாற்றி, 16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்றுவது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு 15 அல்லது 16 வயதானால் அவளைச் சிறுமி என அழைப்பது தமிழ் பாரம்பரியத்திற்கும் மாற்றமானதாகும். ‘பதினாறும் நிறையாத பருவ மங்கை’ எனத் தமிழ் இலக்கியங்களே கூறுகின்றன. இவ்விடயத்தில் இஸ்லாமியச் சட்டமே காலத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஒரு பெண் பருவமடைந்தவுடனும், ஆண் வயதுக்கு வந்தவுடனும் அவர்களுக்குக் கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என இஸ்லாம் கூறவில்லை; மாறாக அதனை ஒரு விருப்பத்தெரிவாகவே வழங்கியுள்ளது. இன்றைய காலச்சூழலில் அதன் தேவை நன்கு உணரப்படுகிறது.
எனவே, திருமண வயது தொடர்பான சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வரப்படாவிட்டால், சட்டத்திற்குப் பயந்து குகைகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் குழந்தைகள் வீசப்படும் அவல நிலையே தொடர்ந்தும் ஏற்படும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்” என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது