யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், நான்கு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை – தும்பளை வீதியில் மணியாரம் சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையில் இருந்து தும்பளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், பருத்தித்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது பின்னால் வந்த மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் , மனைவி அவர்களுடைய 4 வயது மகன் உள்ளிட்டோர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் , அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏனையோர் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிசார் முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.