;
Athirady Tamil News

நாட்டைக் கட்டியெழுப்ப தேவைப்படும் ஆரோக்கியமான அரசியல் போட்டி!

0

2026 நவம்பர் 18ஆம் திகதி வரையிலான இலங்கையின் அரசியல் சூழலை உன்னிப்பாக அவதானிக்கும்போது, பாராளுமன்ற அரசியலில் ஒரு கவலைக்குரிய போக்கைக் காண முடிகின்றது. அதாவது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிக்க வேண்டும் என்ற அரசியல் மனநிலை சில எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மேலோங்கியிருப்பதாகவே தெரிகின்றது.

எதிர்க்கட்சிகளின் அரசியல் பொறுப்பு என்பது அரசாங்கத்தை எதிர்ப்பது மட்டுமல்ல; நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றுத் திட்டங்களை முன்வைப்பதுமாகும்.

2022ஆம் ஆண்டுக்கு முன்னரான அரசியல் மனநிலையிலிருந்து இன்னும் விடுபடாத சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதற்காக விமர்சிக்கின்றோம் என்ற தெளிவுகூட இல்லாமல் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் இந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

அரசாங்கத்தின் மீது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகப் புத்திஜீவிகள் மத்தியிலும் கருத்துக்கள் பரவலாக வெளிப்படுகின்றன. 2024 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும் ஏனைய எதிர்க்கட்சிகள் 26 ஆசனங்களையும் பெற்றிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்மை, தலைமைத்துவப் போட்டிகள் மற்றும் உள் முரண்பாடுகள் அவர்களின் அரசியல் பலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகக் கொள்கைகளை விமர்சிக்கும் உறுப்பினர்கள், அதற்குப் பதிலாகத் தமது தரப்பில் நடைமுறைச் சாத்தியமான மாற்றுத் திட்டங்களை முன்வைக்கத் தவறுவது ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரிடையேயும் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கிடையில் காணப்படும் அரசியல் போட்டிகளும் முரண்பாடுகளும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியாகச் செயற்படுவதற்குத் தடையாக உள்ளன. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் அரசியல் அணுகுமுறை தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே அதிருப்தி நிலவுவதாகவும், கொள்கை அரசியலைவிடக் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் சிலர் தமது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பின்னணியில், அண்மைய வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆற்றிய உரை பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்தகால அரசாங்கங்களின் செயற்பாடுகளைப் பெருமைப்படுத்தியும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், அரசாங்கத்தின் தேர்தல் கால வாக்குறுதிகளை விமர்சித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் ரீதியாகவும், நடைமுறைச் சாத்தியத்தின் அடிப்படையிலும் அறிவு ரீதியாகவும் ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்

பல தசாப்தங்களாக நாட்டின் பொருளாதாரத்தைப் நெருக்கடிக்குள் தள்ளி, மக்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதித்த கடந்தகால ஆட்சியாளர்களின் அரசியல் பதிவுகளை மறந்துவிட்டு, இன்று மக்கள் வழங்கிய மாற்றத்திற்கான ஆணையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கத்திடம் அனைத்தையும் ஒரே இரவில் மாற்றிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது? நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் அடித்தளமிட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கு காலமும், திட்டமிடலும் அவசியம் என்பதை மறந்துவிட முடியாது.

இதில் இன்னும் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால், குற்றம்காணும் அதே கட்சியின் தலைமைத்துவம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை வரவேற்றும் ஆதரித்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. அப்படியானால், ஒரு புறத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை விமர்சிக்க, மறுபுறத்தில் கட்சித் தலைமைத்துவம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரிப்பது எத்தகைய அரசியல் நிலைப்பாடு?

ஒரே கட்சியிலிருந்து இருவேறு அரசியல் செய்திகள் கொண்டு செல்லப்படுவது மக்களின் அரசியல் தெளிவைக் குழப்புவதுடன், தலைமைத்துவத்தின் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.

அத்தோடு, கடந்த கால அரசாங்கங்களில் பாதைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், கட்டடங்கள் என்ற பெயரில் வியாபார அபிவிருத்திகளுக்காக வெளிநாடுகளிடம் கடன் பெற்று, ஒட்டுமொத்தமாகச் செலவிடப்பட்ட பணத்தில் அரைவாசிக்கும் மேல் திருடப்பட்ட கலாசாரத்திற்கு இரண்டு வருடங்களாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான அரசியல் தரப்பினரே இன்று எந்தவிதமான தெளிவான மாற்றுத் தீர்வுகளுமின்றி அரசாங்கத்தை விமர்சிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரிசேகர் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கும் சமூக வலைத்தளங்களில் நடுநிலையான சிந்தனையாளர்கள் மத்தியில் வரவேற்பிருக்கின்றது.

ஏனெனில், மக்கள் இன்று அரசியல் மேடைப் பேச்சுகளை மட்டும் கேட்க விரும்பவில்லை. தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்படுவதற்கான திட்டங்களையும் செயற்பாடுகளையும் எதிர்பார்க்கின்றனர்.

நிச்சயமாக, அரசாங்கத்தை விமர்சிப்பது எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமையும் கடமையுமாகும். அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோருவதும் அவசியமானவை. ஆனால், ஒரு கொள்கையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், அதன் நோக்கத்தை ஆராயாமல், அதற்குப் பதிலாக மாற்றுத் திட்டமொன்றையும் முன்வைக்காமல் வெறுமனே அரசியல் மேடைக்காக விமர்சிப்பது ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி அரசியலாகாது.

குறிப்பாக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பொருளாதார உறுதிப்படுத்தல் நிலையிலிருந்து பொருளாதார மாற்றத்தை நோக்கி நகரும் திட்டமாக அரசாங்கம் விளக்கியுள்ளது. இந்நிலையில், அதன் நடைமுறைச் சாத்தியக்கூறுகள், நிதி ஒதுக்கீடுகள், வருமானப் பயன்பாடு மற்றும் மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து ஆதாரபூர்வமாகக் கேள்வி எழுப்புவதே எதிர்க்கட்சியின் உண்மையான பொறுப்பாகும்.

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பதை மட்டும் விமர்சிப்பதற்குப் பதிலாக, அந்த வருமானம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எவ்வாறு பயன்படுத்தப் படப்போகின்றது என்று கேட்க வேண்டும். அதேவேளை, ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அதற்கும் அரசாங்கத்திடம் பதில் கோர வேண்டும்.

ஒருபுறம் அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று குற்றஞ்சாட்டிவிட்டு, மறுபுறம் நிதியைச் சேமித்து வைத்திருப்பதையே தவறு என்று சித்தரிப்பது அரசியல் வாதங்களின் தெளிவின்மையையே வெளிப்படுத்துகின்றது. விமர்சனம் என்பது முரண்பாடுகளின் தொகுப்பாக அல்லாமல், உண்மைகளையும், தீர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

2024 பொதுத் தேர்தலில் 159 பாராளுமன்ற ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றி வெறுமனே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான மக்கள் ஆதரவு அல்ல. ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அரச நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த வேண்டும், இனவாதத்தையும், மதவாதத்தையும் கடந்த புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற மக்களின் ஆழமான எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும்.

அந்த வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வரலாற்றுப் பொறுப்பையும் கொண்டுள்ளது.

2026 நவம்பரில் அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று கூற முடியாது. பொருளாதார நிவாரணங்கள், வேலைவாய்ப்புகள், அரசியலமைப்பு மாற்றங்கள், நிர்வாக மறுசீரமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன.

அவற்றை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திடம் கேள்வி கேட்பதும், வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதும் அவசியமானவை. ஆனால், பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட சீர்கேடுகளை இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்ற நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பை அரசியல் ஆய்வாக முன்வைப்பது நியாயமானதல்ல.

எனவே, இன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் கேட்க வேண்டிய ஐந்து முக்கியமான கேள்விகள் உள்ளன.

01). அரசாங்கத்தை விமர்சிக்கின்றீர்களே, அதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உங்களுடைய மாற்றுப் பொருளாதாரத் திட்டம் என்ன?

02). ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறீர்களே, கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

03). மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க வேண்டும் என்கிறீர்களே, அதற்குத் தேவையான நிதி எங்கிருந்து பெறப்படும் என்பதை விளக்க முடியுமா?

04). ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களே, அவற்றை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கடந்தகால ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

05). நாட்டை முன்னேற்ற வேண்டும் என்கிறீர்களே, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை அரசியல் கண்ணோட்டத்திற்கு அப்பால் தேசிய நலன் என்ற அடிப்படையில் மதிப்பிடத் தயாரா?

இந்த ஐந்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை வழங்குவதில்தான் ஓர் எதிர்க்கட்சியின் உண்மையான அரசியல் முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் வெளிப்படுகின்றன.

இறுதியாக, இலங்கை மக்கள் இன்று எதிர்பார்ப்பது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான அரசியல் சண்டையல்ல; மாறாக, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரோக்கியமான அரசியல் போட்டியாகும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழலற்ற நிர்வாகம், பொறுப்புக்கூறல், பொருளாதார மறுமலர்ச்சி, அரசியல் தலையீடுகள் அற்ற சட்டத்தின் ஆட்சி மற்றும் இன, மத பேதங்களைக் கடந்த தேசிய ஒற்றுமை ஆகிய இலக்குகளை அடைவதற்கு விமர்சனங்களும் ஆலோசனைகளும் அவசியம். ஆனால், அந்த விமர்சனங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவனவாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தை விமர்சிப்பதைவிட, 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய மாற்றுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். ஏனெனில், பாராளுமன்றம் என்பது அரசியல் பழிவாங்கலுக்கான மேடையல்ல; அது மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய உயரிய மக்கள் பிரதிநிதித்துவ மன்றமாகும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு முன்பு அதன் கொள்கையைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்! எதிர்ப்பதற்கு முன்பு மாற்றுத் தீர்வுகள் வெளிப்பட வேண்டும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.