சிறுவர் இல்ல மாணவர்களின் வாழ்விடத் திட்டம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்: க.இளங்குமரன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் பல மாணவர்கள் சொந்தமாக வீடோ காணியோ இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அந்நிலையில் அவர்களுக்குச் சொந்தமாக வாழ்விடத்தையும் காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்கும் இத்திட்டம் அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மாவட்ட உபகுழுக் கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு என்பது நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாத்து, அவர்களின் நல்வாழ்வையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்ட அமைச்சாகும். எதிர்காலத் தலைமுறையினருக்கு சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கமும் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
தற்போது நாட்டில் உருவாகிவரும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பாதிப்புகளைக் குறைத்து, சிறுவர்களின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், சிறுவர் இல்லங்களில் வளர்ந்து கல்வி கற்று வெளியேறும் மாணவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீடமைப்புத் திட்டம் மிகவும் பாராட்டத்தக்கதொரு முன்னெடுப்பாகும்.
இந்நிதியுதவியின் மூலம் அவர்கள் வீடுகளை நிர்மாணிக்கவோ அல்லது காணி இல்லாதவர்கள் காணியைக் கொள்வனவு செய்யவோ வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் பல மாணவர்கள் சொந்தமாக வீடோ காணியோ இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்குச் சொந்தமாக வாழ்விடத்தையும் காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்கும் இத்திட்டம் அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தச் சிறப்பான திட்டத்தை முன்னெடுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருக்கு யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு பல்வேறு துறைகளுக்கும் அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டச் செயலகம், பிரதேச மட்ட நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் மாகாண சபை உள்ளிட்ட திணைக்களங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, அடிமட்ட மக்களின் வாழ்வாதார மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு மேலும் வலுச்சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நம்புகின்றேன். அந்த முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
