;
Athirady Tamil News

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது ? -2 !! (கட்டுரை)

0

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்தவர் பி. எஸ். வீரப்பா. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பேசிய சபாஷ் சரியான போட்டி இன்று வரை பிரபலமாக இருக்கிறது…

கொழும்பு அரசியல் நிலவரத்தை எடுத்துக்கொண்டால் கூட சபாஷ் சரியான போட்டி என்று தான் கூற வேண்டும்.ஆனால் நாட்டின் இன்றைய நிலைமையில் அதனை ரசனையாக கூற முடியாத நிலைமை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் ரீதியான கருத்து முரண்பாடு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது…

இன்று உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை அலரி மாளிகையில் சந்தித்த பிரதமர் மஹிந்த ,ஜனாதிபதி முடிந்தால் தன்னை விலக்கட்டும் ,ஆனால் அப்படி நடக்குமென தாம் நினைக்கவில்லையென தெரிவித்திருக்கிறார்.

”ஊர்வலமாக சென்று ஜனாதிபதியிடம் நாங்கள் கோரிக்கை முன்வைக்கிறோம்.உங்களை பதவி நீக்க கூடாதென்று கேட்கிறோம்..” என்று சில உறுப்பினர்கள் கூறியபோதும் அதனை தடுத்துநிறுத்திய மஹிந்த யாரும் பதவிவிலக கூறாத நிலையில் இப்படி செய்வதில் அர்த்தமில்லையென்று தெரிவித்திருக்கிறார்.

என்னதான் நடந்தாலும் பிரதமர் பதவி விலக்கலில் கோட்டா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க மாட்டார் என்று மஹிந்த நம்புகிறார். பதவி விலகினால் நல்லதென சகோதரர்கள் கடந்த திங்கட்கிழமை பாச வார்த்தைகளில் கூறினாலும் அதனை உத்தியோகபூர்வமாக ஒரு தீர்மானமாக எடுத்து அறிவிப்பை மேற்கொள்ளமாட்டார்கள் என்று மஹிந்த நம்புகிறார்.

அந்த நெருக்கடி கோட்டாவுக்கும் இருப்பதால்தான் பெரும்பாலும் அவர் இடைக்கால அரசை அமைக்க அனுமதித்து அதன் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்ய இடம்கொடுத்தால் பிரதமர் மஹிந்தவின் பதவி வலுவில்லாமல் போய்விடும்.நடந்தால் அப்படி நடக்கட்டும் என்று மஹிந்தவும் விரும்புகிறார்.தம்பி ஜனாதிபதி அண்ணன் பிரதமரை பதவிநீக்கினார் என்ற அவச் சொல் வரலாறில் வந்துவிடக்கூடாதென்று விரும்புகிறார் மஹிந்த.

அடுத்தடுத்து கூட்டங்கள்

நாளை வியாழன் காலை ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அதன் பின்னர் ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி.நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இடைக்கால அரசமைப்பது பற்றி கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் ஜனாதிபதி. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சமரசம் செய்து இந்த கூட்டங்களில் பிரதமரையும் கலந்துகொள்ளச் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.ஆனால் அந்த ஏற்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன .இந்த கூட்டங்களுக்கு மஹிந்த செல்வாரா இல்லையா என்பதில் இன்னும் இறுதி முடிவில்லை.

சபாநாயகர் கரு ?

இடைக்கால அரசை அமைத்த கையோடு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்து அவரை நீக்கி ,புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய வை
கொண்டுவர முயற்சி எடுக்கப்படுகிறது.ஏற்கனவே நாடாளுமன்றில் அங்கம் வகித்திருப்பதால் ,தேசியப்பட்டியலில் அவரை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

52 நாட்கள் அரசியல் குழப்பத்தில் கரு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அவரை இந்த பதவியில் அமர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மைத்ரி பிரதமரா ?

இடைக்கால அரசொன்று வருமாயின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை அதில் பிரதமராக்க யோசனைகளை முன்வைக்கப்பட்டன.ஆனால் அவர் அதனை நிராகரித்து விட்டார்.டலஸ் எம்.பியின் பெயரே இதில் முன்னிலையில் இருக்கிறது.

நாடாளுமன்ற பேச்சு

நாடாளுமன்றம் வரும் 4 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் நாளை வியாழக்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டுகிறார் சபாநாயகர்.நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பது ,பிரதி சபாநாயகர் தெரிவு உட்பட்ட பல விடயங்கள் இதன்போது பேசப்படவுள்ளன.

கொழும்பு அரசியல் நிலைமைகள் இப்படி இருக்கையில் இடைக்கால அரசு ஏற்பாடுகளும் ராஜபக்சமாரின் மறைமுக ஏற்பாடுதானா என்று சமூக ஊடகங்களில் பேசப்படுவதை பார்க்க முடிகிறது.சில காலம் பின்னால் இருந்து ,ராஜபக்சக்கள் மீதான மக்களின் அதிருப்தி குறைந்த பின்னர் மீண்டும் ஆட்சியேற்பது ,இடைக்கால அரசினால் ஒன்றும் நடக்கவில்லையென மக்களிடம் கூறி மீண்டும் ஆட்சிக்குள் நுழைவதென்று திட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் பெரும் விவாதமே நடக்கிறது.

என்ன நடக்கும் ?

சரி.இப்படி பரபரப்பான விடயங்கள் கொழும்பில் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமர் இவ்வாரம் விலகாவிட்டால் நாடாளுமன்றம் கூட முன்னர் புதிய பிரதமரின் பதவிப்பிரமாணம் நடக்குமென என் அரசியல் நண்பர் ஒருவர் அடித்துக் கூறுகிறார்.

சரி.என்னதான் நடக்கும் என்று கேட்போமென்று இன்றுமாலை ஜனாதிபதி கோட்டாபயவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன். இங்கே பொதுவெளியில் சில விடயங்கள் குறித்து எழுதமுடியாதென்பதால் அந்த உரையாடலில் பேசப்பட்ட விடயங்களை இங்கு குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்.சாதாரணமாக உயர்மட்ட தலைவர்கள் என்னை நம்பி பேசும் விடயங்களை செய்தியாக்கி பரபரப்பாக்கும் வேலையை நான் எப்போதும் செய்ததில்லை.

நாட்டின் நிலைமை , அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் என்னவென்றே தெரியாத நிலைமை இருக்கிறது.எனவே அவை குறித்து ஊடகங்களை அழைத்து பேசுங்கள்,விளக்குங்கள் என்று ஒரு கோரிக்கை முன்வைத்தேன்.ஆம் அதை செய்வேன் என்றார்.

எப்படியோ ,ஜனாதிபதியுடன் நான் பேசும்போது உணரமுடிந்தது என்னவென்றால் , அவர் இந்த நெருக்கடிக்கான தீர்வை ஒரு வார காலத்திற்குள் தந்துவிடுவார் என்பதுதான்.

வெள்ளிக்கிழமை என்பது சம்பவங்களுக்கென்றே பெயர்போன நாளல்லவா ?

நன்றி – ஆர்.சிவராஜா

You might also like

Leave A Reply

Your email address will not be published.