;
Athirady Tamil News

அரசியலாகிப்போன மே தினம் !! (கட்டுரை)

0

புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இதுவும் ஒருவகையில் மேதினத்துக்கான செய்திதான். இது மகிழ்ச்சியான செய்தியும்கூட! தொழிலாளர் தினத்துக்கிடையில் இது நடைபெறுமானால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மே தினத்தைக் கொண்டாடுவார்கள். இல்லையானால் ஏக்கத்துடன் எதிர் கொள்வார்கள்.

அரசியல் ஆதாயத்துக்காகவே மே தினம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை இப்போது காண்கிறோம். அத்தோடு இன, மத, மொழி என இன்னோரன்ன வேறுபாடுகளுடனும் தொழிலாளர் தினம் தற்போது நடைபெறுகின்றமையையும் காணலாம். அதனாலேயே அரசியலாகிப்போன மேதினம் என்கிற பார்வை தொக்கிக் கொள்கிறது.

தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து ‘தொழிலாளர்கள்’ என்னும் ஒற்றைச் சொல்லில் ஒன்றிணைந்து, உணர்வுடன் போராட வேண்டும் என்பதே தொழிலாளர்தினம் எனும் மேதினத்தின் தாரக மந்திரமாகும். ஆனால் நடப்பவை என்னவோ வேறுதான்.

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதாரம், சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. உலகின் அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே முதலாம் நாள் கொண்டாடுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டெம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்ற வழமை காணப்படுகிறது. பல நாடுகளில் மே முதலாம் திகதி தேசிய விடுமுறை தினமாக உள்ளது.

தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மேதின அறைகூவலானது, இலங்கையின் இன்றைய நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கானதாக மாறிப்போயுள்ளது. இதனையே அதிகமான அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தங்களுடைய மே தின அறைகூவல்களாக தயார் செய்கின்றன. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் பொருளாதார நெருக்கடி மக்களுக்கு வாழ்வாதாரம் குறித்து கடும் சுமையைக் கொடுத்திருக்கின்ற நிலையில், நாளை மே தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வோர் அரசியல் கட்சியும், தொழிலாளர் அமைப்புகளும் தமது அறைகூவல்களுக்காகத் தயாராகி வருகின்றன. அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோசம் இம்முறை தொழிலாளர் தினக் கோசங்களில் முக்கியமானதாக இருக்கிறது. ‘கோட்டா வீட்டுக்குப் போ’ கோசம் நாட்டின் தலைநகரில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இது எப்போது ஓயும் என்பது தெரியாமலேயே இருக்கிறது.

இருந்தாலும் இந்தத் தொழிலாளர் தினத்திலேனும் நல்லதொரு முடிவு கிட்டவேண்டுமென்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அது நடைபெறவேண்டும்.
“உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அவர்களின் உரிமைகளைக் கோரி தோற்றம் பெற்ற தொழிலாளர் தினம், அரசியல் கட்சிகளையும் தொழிற் சங்கங்களையும் வெகுஜன அமைப்புகளையும் தனி மனிதர்களையும் ஒன்று சேர்த்தது என்பது தான் வரலாறு. 2019ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த வருடத்தில் மே தினத்தைக் கொண்டாட முடியாத நிலை உலகளவில் ஏற்பட்டது. ஆனாலும் மே தினத்தை தொழிலாளர்கள் அனைவரும் அமைதியுடன் நினைவு கூர்ந்திருந்தனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடியுடன், அந்த நிலைமை இவ்வருடத்தில் சற்று மாற்றம் பெற்றிருக்கிறது.

சிக்காக்கோவில் வெடித்த உரிமைப்புரட்சி முழு உலகையுமே மிரட்சி கொள்ள வைத்தது என்னவோ உண்மை. 8 மணி நேர வேலை என்ற தொனிப்பொருளை இலக்காக கொண்டு ஆரம்பமான தொழிலாளர் போராட்டம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா என்று விரிவடைந்து 18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் தொழிலாளர் விடுதலைக்கான உணர்வலைகளைப் பரப்பியது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டங்கள், நாடுகளைக் கடந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் வெற்றிகளால் தொழிலாளர்களுக்கான தினம் ஒன்று உருவாக்கமும் பெற்றது.

இருந்தாலும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வின் வெற்றியாக உள்வாங்கப்படவேண்டிய மே தினத்தை முதலாளி வர்க்கம் தமது மேலாதிக்கத்தின் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் உரிமைகளை நிலை நிறுத்துவதற்காக நமது நாட்டில் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தொழிலாளர்களுடைய உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன. தொழிற்சங்கம் சார்ந்த அரசியல் முறைமை நடைமுறையிலிருப்பதால் இந்த அவல நிலைமை இருப்பதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

அதேநேரத்தில், தொழிலாளர்களுக்குத் தங்களுடைய உரிமைகள் தொர்பிலான அறிவின்மையும் தொழில் உறுதிப்பாட்டின் அச்சங்கள் காரணமாகவும் ஆபத்தான நிலைகளும் ஏற்படுகின்றன. மே தின இலட்சியமும் நோக்கமும் அதன் பெறுபேறுகளும் சிதைவடைந்து போயுள்ள நிலைமையில், நாம் இம்முறையும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இதை மாற்றியமைக்க மனம் வைக்காத தொழிலாளர் அமைப்புகளும் புரிதல் இல்லாத மக்களும் இருக்கும் வரைக்கும், மே தினம் பழித்துச் சொல்லும் தினமாகவே இருக்கப்போகிறது என்பது மாத்திரம் உண்மை.

உலகத்தின் மேம்பாடும், வளர்ச்சியும் தொழிலாளர்களின் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. இருந்தாலும், அதனை உணராத முதலாளி வர்க்கத்தின் செயற்பாடுகளால் தோன்றும் அரசியலும், மக்களான தொழிலாளர்களை ஏமாற்றும் கட்சிசார் அரசியல்களுமே உலகில் மாத்திரமல்ல, நமது நாட்டிலும் காணப்படுகின்றன. முதலாளி வர்க்கம் தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கும் கலாசாரம் மிகவும் மோசமானதே. அடிமட்ட கூலித் தொழிலாளர்கள் முதல், முகாமைத்துவ நிலை வரையில் தொழிலாளர்களாக ஒற்றுமைப்படுகின்ற நிலைமை தோன்றும் போது ஓரளவுக்கேனும் தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்ற தன்மை உருவாகலாம்.

இலங்கையில் காணப்படுகின்ற தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் அல்லது அரசியல் கட்சிகளின் கீழே இயங்குகின்ற நிலைமையானது தொழிலாளர்களது உரிமைகளை வென்றெடுப்பதிலும் அவற்றினைத் தக்கவைத்துக்கொள்வதிலும் பாரதூரமான ஆபத்துடையதாகும். ஆனாலும் அவற்றின் அங்கத்தவர்களாகிய தொழிலாளர்கள் அதனை உணர்ந்து கொள்வதில்லை என்பதே வெளிப்படை.

அடுத்து தொழிலாளர்கள் சார் பாகுபாடும் பாரபட்சமும் குறித்த விடயம் பார்வைக்குட்படுத்தப்படுகிறது. தொழிலாளர் என்று வருகின்றபோது ஆண், பெண் என்ற பாகுபாடும் பாரபட்சமும் காணப்டுகின்றமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் தொழில்களைத் தக்கவைத்துக்கொள்ளுதல், முன்னேற்றங்களைப் பெற்றுக்கொள்ளுதல், கல்வித்தராதரங்களை உயர்த்திக்கொள்ளுதல் என பல விடயங்களில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில்தான் தொழிலாளர்களது உரிமைகள் சார்ந்த கற்கைகளும் அது தொடர்பான அறிவூட்டல்களும் முக்கியம் பெறுகின்றன. தொழிலாளர்களாகிய அடிமட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினை தங்களுக்கு முக்கியமானதாகப் பார்க்கின்ற வேளை அவர்களின் உரிமைகளை மறந்துவிடுகிறார்கள். அல்லது அவ்வாறான உரிமைகள் இருக்கின்றனவா என்பதே தெரியாமலிருந்துவிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் தொழில்சார் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புகளும் நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. அத்துடன், அவை முக்கியமாகத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசியல் தரப்பிடமிருந்தேயாகும்.

இந்த இடத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மரபுகளை ஆவணத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டாமென சர்வதேச தொழிற்சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தமை நினைவில் கொள்ளப்படவேண்டும். தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ‘இன்ரஸ்ரி ஓல்’ தொழில்துறை சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்த அமைப்பானது இலங்கை உட்பட 140 நாடுகளில் 50 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பாகும். இலங்கையின் தொழில் சட்டம், சர்வதேச தொழிற்சட்டங்கள் காணப்பட்டாலும் தொழிலாளர்களது உரிமைகள் மீறப்படுவது சாதாரணமே என்பது இதன் மூலமான உதாரணமாகும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரச் சிக்கல் நிலையானது உண்மையில் வசதிபடைத்தவர்களையும், நடுத்தர மக்களையும் பாதித்ததோ இல்லையோ பெருந்தொகையாக இருக்கின்ற தொழிலாளர் வர்க்கத்தினை வெகுவாகப்பாதித்திருக்கிறது. மக்களிடம் காணப்படுகின்ற அச்சமானது என் குடும்பத்தின் வாழ்நிலை என்ன என்பதே ஆகும். இவற்றுக்கான தீர்வினை யார் கொண்டுவருவார்கள் என்றே இம்முறை தொழிலாளர் வர்க்கம் ஏக்கத்துடன் மேதினத்தினை கொண்டாடுகிறது என்று சொல்வதனைவிடவும் எதிர் கொள்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நீண்டகாலமாக நெருக்கடிகளையே எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் நிமிர்ந்து நிற்க, இம்முறையேனும் மீட்சி கிடைக்கட்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.