;
Athirady Tamil News

இலங்கையும் 2,500 ஆண்டுகளைக் கடந்த இந்திய உறவும்!! (கட்டுரை)

0

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் 1800களில் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறையே 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன.

இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. இரண்டு நாடுகளும் இரு தரப்பு அறிவுசார், கலாச்சார, மத மற்றும் மொழியியல் ரீதியலான தொடர்புகளை கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் 2,500 வருட காலமாக பகிரப்பட்ட சமய மற்றும் கலாச்சார அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இலங்கை தனது கடல் எல்லையைப் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதால், முக்கியமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கடல்சாா் பாதுகாப்பு உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.

கடந்த வருடம் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இலங்கை பெப்ரவரி 4ம் திகதி தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியிருக்கிறது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கிய போது அதிலிருந்து கொஞ்சம் மீள்வதற்கு இந்தியா உதவி வழங்கியது. இருநாடுகளுக்கிடையில், வளர்ந்து வரும் வர்த்தகம், கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகள் பரந்தளவிலான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த காலங்களில் பல்வேறு மட்டங்களில் இருதரப்பு உறவுகளால் பலன்கள் கிடைத்திருக்கின்றன. இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான அபிவிருத்தி உதவித் திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி அந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயற்திட்டங்கள் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த உதவியுள்ளன.

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதின் தேவை இந்தியாவினால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் விஜயத்தின் போது இந்த விடயம் தொடா்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் நிலைப்பாடு, பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கு ஆதரவாக உள்ளது. ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்பிற்குள் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதைகளுடன் இது உருவாக வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்க்கிறது.

பொருளாதார ரீதியிலான நல்லுறவு, இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ( Indo-Sri Lanka Free Trade Agreement -ISFTA) போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் மூலம் இருதரப்பு உறவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, 2000 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISFTA), இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யப்படும் பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு வரியில்லா சலுகைகளை வழங்குகிறது. இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிக உத்வேகத்தை வழங்கியுள்ளது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (South Asian Association for Regional Cooperation- SAARC) மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) போன்ற கூட்டுத் தளங்களில் பங்கேற்புடன் இடம்பெறும் இருதரப்பு ஒத்துழைப்பு இரண்டு நாடுகளுக்கும் ஒரு புதிய உந்து சக்தியை வழங்கியிருக்கிறது.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய ஏழு நாடுகளின் ஒரு கூட்டமைப்பாகும். BIMSTEC உறுப்பு நாடுகளாக பங்களாதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற வங்காள விரிகுடாவைச் சார்ந்துள்ள நாடுகள் இடம்பெறுகின்றன.

பிராந்தியத்தில் பல நாடுகளுடன் கூட்டிணைந்து செயற்படுவதன் மூலம், மூலோபாய தளத்தில் புதிய ஆற்றல்களைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தெற்காசியாவில் பிராந்திய இணைப்புக்கான இந்தியாவின் அழைப்பும் அதன் “அண்டை நாட்டுக்கு முதல் முக்கியத்துவம்” (Neighbourhood First Policy of India) என்ற கொள்கையும் இலங்கைக்கு அதிக பலன்களை வழங்கியிருக்கின்றன.

கொவிட்-19 தொற்றின் உலகளாவிய பரவல், பல நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. கொவிட் 19 பரவலுக்கு பின்னரான காலம், நாடுகளுக்கிடையில், பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மறுவடிவமைக்கிற செயற்பாட்டை அவசியமாக்கியது. இந்த சந்தா்ப்பம் இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியது.

இன்று, வலுவான பொருளாதார வளர்ச்சியும், உலகளாவிய வர்த்தகத்தில் அதன் உயரிய பங்களிப்பும், இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காளியாக உயர வைத்துள்ளது.

1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, உலகின் பிரதானமான பெரிய சந்தையாகவும், ஐந்தாவது பெரிய பொருளாதார வளா்ச்சியைக் கொண்ட நாடாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இலங்கைக்கான வர்த்தக முதலீடுகளில் ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில், இலங்கை இந்தியாவிடமிருந்து பொருளாதார மீட்சியையே முதன்மையான முன்னுரிமையாக எதிா்பாா்க்கிறது. இரு நாடுகளும் தங்கள் இருதரப்பு உறவை மறு மதிப்பீடு செய்யவும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் முயன்று வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் தமது பரஸ்பர ஆதாயங்களை இலக்காகக் கொண்ட புதிய இணைப்பு மூலோபாயத்தை விரைவாக கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பையும் கொவிட்19 தொற்றுக்கு பின்னரான காலம் வழங்கியிருக்கிறது.

சமீப காலமாக, பல உயர்மட்ட கருத்து பரிமாற்றங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இராஜதந்திர செயற்பாடுகள் இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்திருக்கிறது. பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, இலங்கையும் இந்தியாவும் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளன.

இலங்கை, இந்தியாவில் மூன்று தூதரகங்களைக் கொண்டுள்ளது. அதாவது புதுதில்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயம், சென்னையில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் மும்பையில் ஒரு துணைத் தூதரகத்தையும் கொண்டிருக்கிறது. அதே போல, இந்திய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலும், அதன் துணைத் தூதரகங்கள் கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் செயற்பட்டு வருகின்றன.

கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பிராந்திய உதவி மற்றும் எதிர்கால ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக இரண்டு தரப்பிலும் ஆர்வம் அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் இந்த நகா்வுகள், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அடிப்படையையும் வழங்கியிருக்கின்றன.

இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளும் தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் (South Asia Co-operative Environment Programme – SACEP) கீழ் செயற்பட்டு வருகின்றன. இது 1982 இல், தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டணியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அது தவிர, தெற்காசிய பொருளாதார ஒன்றியம் (South Asian Economic Union) மற்றும் கொமன்வெல்த் நாடுகள் ஆகியவற்றின் ஒப்பந்தங்களிலும் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

சீனாவை சாா்ந்து வளா்ந்து வரும் இலங்கையின் அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடா்பான பல்வேறு பிராந்திய விவகாரங்கள் காரணமாக, கடந்த காலங்களில், இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர உறவுகளில் பதற்றங்களும், பின்னடைவுகளும் உருவாகி இருந்ததும் மறுப்பதற்கில்லை.

மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணையில் மீன்பிடித் தகராறுகள் மற்றும் 13வது திருத்தத்தை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் மூலம் இந்த பதற்றங்கள் அடிக்கடி தீவிரமடைந்தும் வந்திருக்கின்றன.

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள 13வது திருத்தச் சட்டம், 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் இந்த 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை தொடா்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீா்வாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்ட மூலம் தமிழ் மக்களுக்கான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கிய நகா்வாக இந்தியாவால் பார்க்கப்படுகிறது.

இலங்கையும் இந்தியாவும் நீண்டகாலமாக பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளன. இந்தியா இலங்கையின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக உள்ளது. பொருளாதார வளா்ச்சியின் இலக்கை முன்னோக்கிய இந்த நகா்வில், இரு நாடுகளும் பொருளாதார உறவுகளை உறுதிப்படுத்தவும், பிராந்திய ரீதியாக தங்கள் பொருளாதார முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும் ஆற்றல்களைக் கொண்டுள்ளன.

இரு நாடுகளும் தமக்கிடையில் 1997ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் பொருளாதார உறவுகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இரு நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வா்த்தக ரீதியிலான தொடா்புகள் மேலும் விஸ்தரிக்கப்படுகின்றன.

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களில் பாரதி எயார்டெல் லங்கா (தொலைத்தொடர்பு), க்ரிஷ் குழுமம் (ரியல் எஸ்டேட்), லங்கா அசோக் லேலண்ட் (ஆட்டோமொபைல்), லங்கா ஐஓசி பிஎல்சி (பெட்ரோலியம்), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (நிதிச் சேவைகள்), தாஜ் மற்றும் ஐடிசி ஹோட்டல்கள் (விடுதி மற்றும் சுற்றுலா), டாடா கம்யூனிகேஷன்ஸ் லங்கா லிமிடெட் (தொலைத்தொடர்பு), மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் (கட்டட நிா்மாணம்). போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும்.

இலங்கையும் இந்தியாவும் தங்களுடைய மத, கலாசார, பாரம்பரியம் தொடர்பான நெருக்கமான சுற்றுலா இணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த காலங்களில் இலங்கைக்கான உல்லாச பிரயாணிகளின் மொத்த வருகையில் 18% வீதத்தை இந்திய பயணிகள் கொண்டிருந்ததாக தரவுகள் கூறுகின்றன. இலங்கையா்களின் சுற்றுலாப் பயணத்தின் சிறந்த தளமாக இந்தியா உள்ளது. ஒப்பீட்டளவில், கடந்த காலப்பகுதியில் இந்தியாவிற்கான இலங்கை சுற்றுலாப் பயணிகள் வருகை 3.3% வீதமான அமைந்திருந்ததாக தரவுகள் கூறுகின்றன. இது சுற்றுலாத் துறை ஊடாக இரண்டு நாடுகளும் பிராந்திய ரீதியில் ஒத்துழைப்பையும், நல்லெண்ணத்தையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த இரு நாடுகளின் புவியியல் ரீதியிலான நெருக்கத்தைப் பயன்படுத்தி, நன்கு நிறுவப்பட்ட சுற்றுலா இணைப்புகள் மூலம் மேலும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்த முடியும். உலகின் தலைசிறந்த பயண இதழ்களில் ஒன்றான லோன்லி பிளனட், 2013, 2018 மற்றும் 2019களில் உலகளவில் சுற்றுலாத் தளங்களில் இலங்கையை முதலிடமாக தொிவு செய்தது. இலங்கையின் இயற்கை அழகும் அதன் வரவலாற்றுத் தளங்களும் ஒரு பயணத் தலமாக சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

ஆயுர்வேதம் தொடா்பான இலங்கையின் நீண்ட வரலாறு உடல், உள ஆரோக்கியத்திற்கான உலகளாவிய தேவையை உல்லாச பிரயாணிகளுக்கு வழங்குகிறது. இலங்கையின் இயற்கையான சுகாதாரப் பாதுகாப்பு முறைமைக்கான உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பிராந்தியத்தில் அதன் நம்பகத்தன்மையையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தியிருக்கிறது. எனவே, மத மற்றும் ஆயுர்வேத சுற்றுலா போன்ற வளா்ந்து வரும் சுற்றுலாப் பிரிவுகள் இரு நாட்டு முதலீட்டாளர்களுக்கும் சாத்தியமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

கொவிட்-19 காலப்பகுதியில், மருந்துப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறனை இந்தியா பெற்றது. இது இலங்கைக்கான இந்தியாவின் மனித நேய பங்கை வலுப்படுத்துவதற்கான மற்றொரு வாய்ப்பைக் கொடுத்தது. தடுப்பூசியை உற்பத்தி செய்வதிலும், இலங்கை உட்பட உலகம் முழுவதும் குறைந்த விலையில் அதனை விநியோகம் செய்வதிலும் இந்தியா முன்னணி வகிக்கும் ஆற்றலைப் பெற்றது. இந்தியாவுடனான நெருக்கமான உறவு, COVID-19 தடுப்பூசியை தடையின்றி பெறுவதில் சிறந்த வழியை இலங்கைக்கு வழங்கியது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சில சமயங்களில் பாதிப்படையும் சூழலை சந்தித்துள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பைத் தடுக்கும் வகையில் இந்த விவகாரங்கள் வளா்ச்சியடைந்தும் இருக்கின்றன.

இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக சீனாவுடன் பின்னிப்பிணைந்துள்ளதுடன், இந்தியாவின் பிராந்திய அரசியலில் போட்டியாக இருக்கும் சீனாவுடன் தனது நிலம் மற்றும் கடல் வளங்களைப் பகிா்ந்து கொள்வதை இந்தியா தனக்கு ஏற்படும் ஓா் அரசியல் அச்சுறுத்தலாக பாா்த்து வருகிறது. என்ற போதிலும், இரு நாடுகளும் ஆழமான வரலாற்று இணைப்புகளுடன் நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருந்து வருகின்றன.

அதே நேரத்தில், இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகள் இன்னும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருவதாக கருதப்படும் விடயங்களில் இலங்கை தூரநோக்கொடு செயற்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

தனது கடல் பிராந்தியத்தில் வெளியாாரின் தலையீடு அறவே இருக்கக் கூடாது என்று இந்தியா விரும்புகிறது. ஹம்பாந்தோா்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்ததால் பிராந்திய அரசியலில் ஒரு முறுகல் நிலை உருவானது. இலங்கையில் சீனாவால் கட்டமைக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம் போன்றவை பிராந்திய ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் சவால்களாகவும், அச்சுறுத்தலாகவும் இந்தியா பாா்க்கிறது. இந்த பிராந்தியம் எதிா்கொள்ளும் கடல்சாா் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.

இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றாகச் செயல்பட்டன. இந்தியா இலங்கைக்கு இராணுவ பயிற்சி மற்றும் இராணுவ தளபாட உதவிகளை வழங்கியுள்ளது. அரசியல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் வலுவான உறவுகளுடன் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நட்பை வளர்க்க உதவியது. இந்த உறவில் அவ்வப்போது சில ஏற்ற தாழ்வுகள் இருந்தபோதிலும், இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக நட்புறவையும் ஒத்துழைப்பையும் பேணுவதில் இரு நாடுகளும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.