அரசாங்க அதிபர் – ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்க அதிபருக்கும் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (15.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக, கிராம அலுவலர்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக, கிராம அலுவலர்களால் விரிவாக அரசாங்க அதிபருக்குதெரிவிக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட கிராம அலுவலர்கள் தமது பிரதேச செயலக ரீதியாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், தீர்வுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான தங்களுடைய அதிருப்தி நிலைமையினையும் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டம் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் எனவும், இவ்வாறான பல சந்தர்ப்பங்களிலும் கிராம அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடப்பெயர்வு வேளையிலும் சுனாமி, கொரோனா இடர் நிலைமை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, தற்போதைய வெள்ள அனர்த்தம் ஆகிய நிலைமைகளில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றியவர்கள் எனவும், இவ் அனர்த்த சூழ்நிலையிலும் கிராம உத்தியோகத்தர்கள் சிறப்பாக சேவையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பயனாளிக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் எனவும், இதுவே அனைவரினதும் கரிசனையாகவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற தெளிவான விடயம் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதே போன்று ஒவ்வொரு பிரதேச செயலாளார் பிரிவின் கீழ் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இவ்வாறு ஒரே நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இதன் அடிப்படையில் பல்வேறு சிரமங்கள், துன்பங்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் துன்பப்படக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக கிராம அலுவலர்கள் இரவு பகல் பாராது மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர் என்பதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன், ஆனாலும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த அலுவலர்களையும் குறை சொல்லும் நிலை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது எனவும், அனைவரும் சரியான பயனாளிக்கு கொடுப்பனவு சென்றடைவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் தெளிவுபடுத்தப்பட்டது.

