;
Athirady Tamil News

காணாமல்போனவர்களுக்கு நீதி : அடுத்த தலைமுறை போராட்டத்தை தொடருமா ? (கட்டுரை)

0

“முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவை நாங்கள் பார்த்தது போன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான எமது போராட்டம் அழிக்கப்படும் நாள் வரும்” என்கிறார் அருட்தந்தை சக்திவேல், இவர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீண்ட காலமாக குரல்கொடுத்துவருகிறார். மிகவும் தளதளர்த்த குரலில் விரக்தியுடன் இது தவிர்க்க முடியாதது என்ற மனோநிலையில் இவ்வாறு கூறுகிறார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல், காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் போராட்டங்களிலும் முன்னணியில் நிற்கின்றார். இவரை ஒரு நம்பிக்கை அளிக்ககூடியவராக நீதிக்காக போராடும் மக்கள் பார்க்கின்றனர்.

நீதி மறுக்கப்படும் நீதிக்கான குரல்கள் அழிக்கப்படும் ஆபத்து குறித்த அச்சங்கள் காணப்படுகின்ற நிலையில் அருட்தந்தை சக்திவேலின் வார்த்தைகள் ஏற்படவிருக்கும் ஆபத்தின் உணர்வை வெளிப்படுத்துகின்றன.

பல குடும்பத்தவர்கள் நீதி கேட்க ஆரம்பித்து ஒரு தசாப்தம் ஆகின்ற நிலையில் அருட்தந்தை சக்திவேல் ஒரு தலைமுறையின் உடல், உளப் பலம் குறைவடையத்தொடங்க புதிய தலைமுறையிரின் ஆர்வம் இழப்பதை அவதானித்துள்ளார்.

நாடாளவியரீதியில் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்காக குரல்கொடுக்கும் குடும்பங்கள் ஒரு தலைமுறை மாற்றத்தை சந்திக்கின்றன. அதேவேளை போராட்டங்களின் வலிகள் அவர்களை கடுமையாக பாதித்துள்ளன.

“எனது மகனைத் தேடி நான் பல இடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இதற்காக நான் எனது நகைகளையும் சொத்துக்களையும் விற்றுள்ளேன். ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கான பணம் எங்களிடம் தற்போது இல்லை” எனக் கூறும் அல்பிரெட் யோகாரதி கடந்த ஒரு தசாப்தகாலமாக தனது குடும்பத்தை எவ்வாறு சிதைவடைந்துள்ளது என தெரிவிக்க முயலும் போது அவரது கண்ணில் இருந்துவரும் கண்ணீரை கட்டுப்படுத்த முயல்கின்றார்.

“ நான் ஒரு ஆரம்பப்பாடசாலை ஆசிரியை. எனது மகனை தேடுவதற்காக அந்த வேலையை துறந்தேன். தற்போது மகனைத் தேடுவதே எனது தொழிலாக மாறிவிட்டது” என அவர் கூறுகின்றார்.

2008 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் குடிப்பதற்காக தண்ணீர் எடுக்கச்சென்ற யோகாரதியின் மூத்த மகன் தினு காணாமல்போனார். அப்போது அவருக்கு 16 வயது.

அதன்பின்னர் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள்அனைவரினதும் வாழ்க்கையையும் பாதித்தன.

கேள்விகளுக்கான பதில்களை கோரும் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட யோகரதியும் அவரது தாயாரும் கடந்த பத்து வருடகாலத்தில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டனர். இதற்காக அவர்கள் தங்கள் உடல்நலம், பணம் உள்ளிட்ட பலவற்றை தியாகம் செய்தனர்.

நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே உயிரிழந்த யோகரதியின் தாயார் நீதிக்கான போராட்டத்திற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்றார்.

யோகரதியும் அதேபாதையில் பயணம் செய்தார் அவரின் பூர்வீக சொத்துக்களும் பெறுமதியான பொருட்களும் சிறிது சிறிதாக காணாமல்போகத் தொடங்கின.

யோகரதியும் அவருடைய ஐந்து பிள்ளைகளும் மூத்த மகன் காணாமல்போன அதேபகுதியில் தற்போதும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வாழ்கின்றனர்.

தங்களின் பூர்வீக இடமான யாழ்ப்பாணம் முகமாலையில் குடியேறுவதற்காக காத்திருக்கும் அல்பிரெட் யோகரதியின் குடும்பம் தற்போது இடைநடுவில் சிக்குண்டுள்ளனர்.

கோழிவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மூலம் கிடைக்கும் சிறிய போதாத வருமானத்தின் மூலம் அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

(அல்பிரட் கோபின்ஷா (வலது) தனது சகோதரரின் படத்துடனும் கோபின்ஷாவின் தாயாரான அல்பிரட் யோகரதி தனது தாயின் புகைப்படத்துடனும் (இடது) மற்றும் கோபின்ஷாவின் சகோதரி (நடுவில்) )

“அண்ணா எங்களுடன் இருந்திருந்தால் நாங்கள் இங்கு இருந்திருக்க மாட்டோம். எங்களுடைய சொந்த இடமான முகமாலைக்கு சென்றிருப்போம். அண்ணா இந்த இடத்தில்தான் காணாமல் ஆக்கப்பட்டார் என்பதால் நாங்கள் இங்கு நிலமொன்றை வாங்கி அண்ணா மீண்டும் வருவதற்காக காத்திருக்கின்றோம். அவருக்கு இந்த இடம்மாத்திரமே தெரியும். அதனால் அவர் இங்கு வருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கின்றோம்.” என்கின்றார் யோகாரதியின் 21 வயது மகளான கோபின்ஷா.

கோபின்ஷா தனது இளவயது வாழ்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தை பார்த்திருக்கின்றார்.போராட்டம் தனது தாயார் மீது ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்திருக்கின்றார்.

அவருடைய தாயார் போன்றவர்களின் தியாகங்கள் கோபின்ஷா போன்ற இளையவர்களிடம் நீண்டகால வடுக்கள் மற்றும் வெறுப்பின் அறிகுறிகளை ஏற்படுத்தியுள்ளன.

“ பொருளாதார நெருக்கடி நிலவியவேளை ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கான பணம் எங்களிடம் இருக்கவில்லை. அம்மாவின் நகைகளை அடகுவைத்தே நாங்கள் எங்கள் நாளாந்த வாழ்க்கையை கொண்டுசென்றோம். பணம் இல்லாததால் நாங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்லவில்லை. எங்களிடம் பணம் இல்லை என்பதால் எவரும் எங்களை தேடிவருவதில்லை ” என்கின்றார் கோபின்ஷா.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ள ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான குமணன், அல்பிரெட் குடும்பத்தை போல நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்களின் வாழ்க்கை காணப்படுவதை அவதானித்துள்ளார்.

(அல்பிரட் யோகரதி, தனது மகன் காணாமல்போன இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் வீட்டில் வருமானத்திறாகாக ஆடுகளை வளர்க்கிறார்.)

“ பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மிகவும் வறியநிலையில் உள்ளனர். ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அவர்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர். அவர்களது பொருளாதார நிலைமை மிகவும் துன்பகரமானதாக காணப்படுகின்றது. குடும்பத்திற்காக உழைத்தவர்கள், குடும்பத்தின் தூண்களாக இருந்தவர்கள் துரதிஸ்டவசமான சூழ்நிலையில் காணாமல்போயுள்ளதால் தற்போது இளையவர்கள் குடும்பத்தை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்கின்றார் குமணன்.

அல்பிரெட்டின் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இன்னுமொரு குடும்பம் நீதிக்காக போராடுவதன் அழுத்தத்தையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது.

(அண்ணனை தொலைத்த விரக்தியுடனும் கவலையுடனும் காணப்படுகிறார் நாகரத்தினம் தமிழ் நிலா (18) )

“எங்களுடைய மூத்த சகோதரி மாத்திரம் வேலைசெய்கின்றார். எங்கள் தந்தைக்கு வயதாகிவிட்டது. அவரால் வேலை செய்ய முடியாது” என்கின்றார் ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் இளையவரான நாகரத்தினம் தமிழ்நிலா.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் 2009 ஆம் ஆண்டில் தமிழ்நிலாவின் மூத்த சகோதரன் காணாமல்போனார்.

இவர்களுடைய 50 வயதான தாயார் பரிமளாதேவி இதயநோய் மற்றும் ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிக்காக போராடி வருகின்றார். நோய் காரணமாக அவர் நீதிக்கான போராட்டங்களின் போது பல தடவைகள் மயங்கி விழுந்துள்ளார்.

நீதிக்கான தனது தாயாரின் இடைவிடாத போராட்டமே இதற்கு காரணம் என தமிழ்நிலா தெரிவிக்கின்றார்.

“போராட்டங்களில் தொடர்ந்து போராடியதால் எனது தாயார் நோயாளியானார்” எனத் தெரிவிக்கும் தமிழ்நிலா “அம்மாவிற்கு மருந்துவேண்டுவதற்கு எம்மிடம் பணமில்லை” எனத் தெரிவிக்கின்றார்.

சிலவேளைகளில் மனிதாபிமான அடிப்படையில் அயலவர்கள் தாயாருக்கு மருந்து வாங்கித்தருவார்கள் எனகுறிப்பிடும் தமிழ்நிலா, நான் சிறிய வயதிலிருந்து எனது காணாமல்போன அண்ணனை பார்க்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

அண்ணன் காணாமல்போன பின்னர் எனது தாயார் பல இடங்களுக்கும் சென்று அவரை தேடிவருகின்றார். நீண்ட நாட்கள் தேடியும் எனது சகோதரனை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து தேடினாலும் அவரை கண்டுபிடிப்போமா என யோசிக்கின்றோம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அவரது தாயார் பரிமளாதேவி தன்னுடை நிலை குறித்து கவலை வெளியிடுகின்றார். “எனது மகன் இன்று உயிருடன் இருந்தால் நான் கூலிக்காக வீட்டுவேலைகளுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை” என தெரிவிக்கும் அவர் போராட்டங்களில் கலந்துகொள்வதற்கு பணம் தேவை என்கின்றார்.

நீதிக்கான எங்களது போராட்டத்திற்கு பொருளாதார பிரச்சினைகளே பெரும் நெருக்கடியாக உள்ளன எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அல்பிரெட் யோகரதி நீதிக்கான தளராத உறுதிப்பாட்டை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் அதேவேளை நாகரத்தினம் பரிமளாதேவி எதிர்காலம் குறித்த உணர்வுகளை வெளிப்படுத்தாதவராக காணப்படுகின்றார். 2009 ஆண்டின் துக்கமான அந்த நாளின் அழுத்தத்தினால் தனது குடும்பம் சிதைவடைவதை பார்த்துள்ளதன் காரணமாக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

தனது உணர்வுகளை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாதவராக அவர் காணப்படுகின்றார்.

“எனது மரணத்தின் பின்னர் எனது பிள்ளைகள் தங்கள் சகோதரனை தேடுவார்களா தெரியாது” என அவர் தெரிவிக்கின்றார்.

“நான் எனது சிந்தனைகள், எண்ணங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வது குறித்து தயக்கத்துடன் உள்ளேன்” எனக் கூறும் பரிமளாதேவி எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகின்றதோ தெரியாது என்ற அச்சத்துடன் உள்ளார்.

(எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், காணாமல் போன தனது மகனின் புகைப்படத்துடன் காணப்படுகிறார் தாயாரான நாகரத்தினம் பரிமளாதேவி )

யுத்தத்தின் வடுக்கள், பாதிப்பு என்பது புதிய தலைமுறையிடம் தென்படுவதாக தெரிவிக்கின்றார் கல்வியாளரும் ஆற்றுகைப் படுத்தல் நிபுணருமான கிறிஸ்டி பாலேந்திரன்.

“நீண்டகாலமாக அவர்கள் அதிர்ச்சி மன அழுத்தம் காரணமாக உளவியல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் போராட்டத்தை தவிர்க்கின்றனர் .” என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள், சகோதரர்களுக்கு நிகழ்ந்தது தங்களுக்கும் நிகழக்கூடும் என அச்சம்கொண்டுள்ளனர். நான் இவ்வாறான பல இளையவர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் அந்த அழுத்தம் காரணமாக பல நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கியுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும் நீதிக்கான போராட்டம் மெல்லமெல்ல இறந்துபோய்க்கொண்டிருப்பதற்கு பெற்றோர்களின் மிகவும் துயரமான அனுபவம் மாத்திரம் காரணமல்ல.

அச்சுறுத்தப்படுவதும் ஒரு காரணம் என தெரிவிக்கும் கிறிஸ்டி பாலேந்திரன், புலனாய்வாளர்கள் விசாரணைக்காக பின்தொடரலாம் எனவும் குறிப்பிடுகின்றார்.

வெளியில் பகிரப்படாத அச்சுறுத்தப்படும் சூழல் தமிழ்நிலா முன்னெடுக்க விரும்பும் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களைப் போன்ற இளம் தலைமுறையினரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதன் காரணமாக அம்மா என்னை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதில்லை என்கின்றார் தமிழ்நிலா. இதனால் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்கின்றார்.

முல்லைத்தீவில் யுத்தத்திற்கு பின்னரான நிலைமை பதற்றமானதாகவே காணப்படுகின்றது.

முன்னர் அமைதியான ஒரு பகுதியாக காணப்பட்ட இடம் தற்போது கடுமையான இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களின் பிரசன்னம் திரும்பும் இடமெல்லம் தெரிகின்றது.

தாம் கண்காணிக்கப்படுவது குறித்த உணர்வை அல்பிரட் குடும்பத்தினர் பகிர்ந்துகொள்கின்றனர்.

“சிலர் எங்களிடம் வந்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் தங்களை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்தி கடுமையான தொனியில் கதைப்பார்கள் இதன் காரணமாக நாங்கள் தற்போது ஆர்ப்பாட்டங்களுக்கு செல்வதில்லை” என யோகரதியின் இரண்டாவது மகன் அல்பிரட் ஜெயந்தன் ( 28) தெரிவிக்கின்றார்.

“நாங்கள் போராட்டங்களுக்குப் போனால் பிரச்சினைகளை எதிர்கொள்வோம் நாங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதன் காரணமாக நாங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதில்லை” என்கின்றார் ஜெயந்தன்.

காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மேலும் விபரிக்கின்றார் செயற்பாட்டாளர் குமணன்.

“பாதுகாப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல்கள், நெருக்கடிகள் குறித்த தற்போதைய சூழ்நிலையில் தாங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டால், எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி வருமோ என இளைஞர்கள் அச்சம் கொண்டுள்ளனர் ” என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த தலைமுறையின் மனதில் இந்த எண்ணம் ஆழமாக காணப்படுகின்றது என தெரிவிக்கும் குமணன் கட்டுக்கதைகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்படலாம் அதன் காரணமாக தங்களின் அப்பாவிகளான முதிய வயதுடைய பெற்றோர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது என்கின்றார்.

தொடரும் இந்த சம்பவங்களும் துன்புறுத்தல்களும் இளையவர்களின் மனதை பாதித்துள்ளன. இவ்வாறான தொடரும் அச்சம் காரணமாக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட விரும்பினாலும் அதில் இணையாமலிருக்கின்றனர் எனவும் குறிப்பிடுகின்றார்.

(காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கண்டன ஊர்வலம் : தொடர் போராட்டங்கள் )

இந்த ஏமாற்றங்கள் அனைத்து நீதிக்கான போராட்ட இயக்கத்திற்குள் ஊடுருவத் தொடங்கியுள்ளதால் போராட்டங்கள் மந்த நிலையை வெளிப்படுத்துகின்றன என கருதுகின்றார் கிறிஸ்டி பாலேந்திரன்.

“போராட்டத்தில் கலந்துகொள்ளும்போது புலனாய்வாளர்கள் படமெடுத்தல், அச்சுறுத்துதல், உணர்வுரீதியாக பாதிக்கப்படுதல்,பொருளாதாரநெருக்கடிகள், வறுமை, அரசாங்கத்தின் ஒடுக்குமுறை போன்றவை அவர்களின் போராட்டத்திற்கு தடைகளை ஏற்படுத்தலாம்” எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தங்களுடைய பக்கத்திலிருந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை ஒரு தவறு என்பதை அருட்தந்தை சக்திவேல் ஏற்றுக்கொள்கின்றார்.

காணாமல்போனவர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடர்கின்றது. ஆனால் நீதிநிலைநாட்டப்படவில்லை என தெரிவிக்கும் அவர் நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் போராட்டம் நீர்த்துப்போகும் என்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தையே இதற்காக குற்றம்சாட்டவேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இலங்கை அரசாங்கம் நீதியை வழங்காமல் காலத்தை இழுத்தடித்துச்செல்கின்றது. திட்டமிட்ட போராட்டத்தை மழுங்கடிக்க அவர்கள் முயல்கின்றனர். எங்களுக்கு போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதற்கான திட்டம் எதுவுமில்லை என்கின்றார் அருட்தந்தை சக்திவேல்.

அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கும்போது அவர்கள் எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றார்கள் என கேள்வி எழுப்பும் அவர், தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட்ட பெற்றோர்களில் 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர் உயிரிழந்துள்ளமை எங்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்திற்கு இந்த போராட்டத்தை எடுத்துச்செல்வது குறித்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் செயற்பாட்டாளர் குமணன் போன்றவர்கள் மாற்றுவழிகள் மூலம் இந்த போராட்டம் புத்துயுர் பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அடுத்த தலைமுறையின் போராட்டம் தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கும் அவர் இறுதியாக நீதிக்கான விசாரணைகள் இடம்பெறும்போது பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் கதைகளை தங்கள் கையில் எடுக்கும்போது இளையவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வார்கள் என குறிப்பிடுகின்றார்.

போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வது இளையவர்களின் கடமை. அவர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்த போராட்டத்தை உலகறியச்செய்யலாம், கலை விவரணசித்திரங்கள், புகைப்படக்கண்காட்சிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கும் குமணன், இந்த வழிமுறைகள் ஊடகங்கள் மூலமே காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அநீதி உலகின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. இதனை இளம் தலைமுறையே செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.

(காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் போராட்டம் )

அல்பிரட் மற்றும் நாகரத்தினம் குடும்பங்களை பொறுத்தவரை இளையவர்கள் தங்கள் சகோதரர்கள் திரும்பிவருவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.

நான் எவரது அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.போராட்டத்தில் பங்கெடுக்கத் தயாராக உள்ளேன் என நாகரத்தினம் தமிழ்நிலா அச்சமின்றி கூறுகின்றார்.

ஆனால் இந்த போராட்டம் எதிர்காலத்தில் எவ்வாறு தொடரப்போகின்றது என்பது விடையில்லா கேள்வியாக காணப்படுகின்றது.

வீ.பிரியதர்சன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.