டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 42 பேர் மீட்பு
டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள 12 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் அதிகாலை 5:45 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தனர். உடனே கட்டடத்திலிருந்து 42 பேரை தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
சம்பவ இடத்தில் 18 தீயணைப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி அன்வாருல் இஸ்லாம் தெரிவித்தார். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரும்பாலான கடைகளின் பூட்டுகளையும் ஷட்டர்களையும் உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தீயை அணைக்கும் பணியில் தாமதமானது.
அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய துணிகள் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகளும் வணிக உரிமையாளர்களும் கூறினர். எனினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் டாக்காவில் பல மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும். முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதி, தலைநகரில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்.