;
Athirady Tamil News

கருத்துச் சுதந்திரமும் நாட்டாஷாவும் ஞானசாரரும் !! (கட்டுரை)

0

பௌத்த மதத்தை அவமதிக்கும் சதியொன்று செயற்பட்டு வருவதாகவும், அதன் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இயங்குவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதன் பிரகாரம், ஏற்கெனவே சேபால் அமரசிங்க என்ற சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன்பின்னர், மகாநாயக்க தேரர்களிடம் சேபால் அமரசிங்க மன்னிப்பைக் கோரியதை அடுத்து, விடுதலை செய்யப்பட்டார்.

கிறிஸ்தவ மத போதகரான ஜெரோம் பெர்னாண்டோவும் அதே குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், அவர் வெளிநாட்டுக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார். இப்போது அவர் தம்மைக் கைது செய்வதை தடைசெய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அத்தோடு, நகைச்சுவை மேடைப் பேச்சாளரான நாட்டாஷா எதிரிசூரிய என்ற பெண், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் புத்தரை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னர், “சம்பந்தப்பட்ட தனது நகைச்சுவை நிகழ்ச்சியால், எவரும் புண்படுத்தப்பட்டு இருந்தால், மன்னித்து விடுங்கள்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்களில், சேபால் அமரசிங்கவும் நாட்டாஷாவும் பௌத்தர்களாவர். சேபால் தமது ‘யூடியுப்’ உரையொன்றின் போது, கண்டியிலுள்ள தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். ஒரு சமயத் தளத்தை குறிப்பிடுவதற்கு பொருத்தமற்ற சொல்லொன்றை பாவித்தமையே அவர் செய்த குற்றமாகும்; அதை நியாயப்படுத்த முடியாது.

ஜெரோம் பெர்னாண்டோ, தமது சமய பிரசங்கத்தில் புத்தரையும் இயேசு நாதரையும் ஒப்பிட்டு பேசியிருந்தார். ஆங்கிலத்தில் குறித்த உரையை நிகழ்த்திய அவர், புத்தர் enlightment என்ற நிலையை (புத்தத்துவத்தை) அடைந்ததாகவும் ஆனால் இயேசுவோ light (ஒளி) ஆகவே இருக்கிறார் என்றும் பேசினார். எனவே, புத்தரும் இயேசுவையே அடைந்ததாகவும் அவர் வாதாடினார். இதன் மூலம், புத்தர் சிறுமைப்படுத்தப்பட்டுவிட்டார் என்பதே பௌத்தர்கள் சிலரது வாதமாகும்.

உண்மையிலேயே, ஜெரோம் பெர்னாண்டோவின் வாதமே பிழையானது. ஏனெனில், அவ்வாறு ஆங்கிலத்தில் மட்டுமே வாதிட முடியும். புத்தத்துவத்தை light என்ற அடிச் சொல் வரும் விதத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிட் முடியும். ஆயினும் புத்தத்துவம் என்ற எண்ணக்கருவுக்கும் light (ஒளி) என்ற எண்ணக்கருவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே அவர் light என்ற சொல்லை பாவித்து புத்தரையும் இயேசுவையும் ஒப்பிட்டமை எவ்வித தத்துவார்த்த அடித்தளமும் இல்லாத விடயமாகும். அதேபோல் சமயங்களையும் சமயத் தலைவர்களையும் பகிரங்க மேடையில் ஒப்பிடுவதே மனங்கள் புண்படும் செயலாகும்.

நாட்டாஷா திறமையான நகைச்சுவை பேச்சாளர். அவரது சர்ச்சைக்குரிய உரை கடந்த ஏப்ரல் மாதம் பிஷப் கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டதாகும். ஆனால் அது கடந்த மாதம் இறுதியிலேயே வைரலாகியது. பிள்ளை வளர்ப்பதில் குடும்பங்களுக்கிடையில் இருக்கும் போட்டியின் காரணமாக சில தாய்கள் தமது பிள்ளைகளை பிற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தமது பிள்ளைகளை குறைகூறுவார்கள். பெண்கள் இவ்வாறு கூறுவதை சுட்டிக் காட்டிய நாட்டாஷா, தாய்மார்களின் இந்தப் பழக்கத்தால் புத்தருடைய இளம் பருவத்தில் ஏனைய பிள்ளைகள் என்ன பாடுபட்டு இருப்பார்கள் என்று கூறி அதனை விவரித்தார்.

சித்தார்த்தன் பிறந்த உடன் எழுந்திருந்து ஏழு அடி நடந்து சென்றதாகவும் அவர் அவ்வாறு அடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் தாமரைகள் உதித்து அவரது பாதங்களை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அவர் பிறந்த உடனே “நானே உலகினில் உயர்ந்தவன்; நானே உலகுக்கு சிரேஷ்ட புருஷன்; நானே உலகினில் உன்னதமானவன்; இந்த ஆன்மாவுக்குப் பின்னர், நான் இனி பிறப்பதில்லை” என்று பாளி மொழியில், கவிதை வடிவில் கூறியதாகவும் கூறப்படுகிது. சித்தார்த்தன் பிறந்த சில நாள்களில், தாம் புத்தத்துவத்தை அடைவதை சமிக்ஞை மூலமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்காலத்து தாய்மார் சித்தார்தனோடு தமது பிள்ளைகளை எப்படியெல்லாம் ஒப்பிட்டு, அந்தச் சிறுவர்களை சித்திரவதை செய்திருப்பார்கள் என்று நாட்டாஷா நகைச்சுவையோடு விவரித்தார்.

“சுத்தோதனவின் மகன் பிறந்த உடன் நடந்து சென்றிருக்கிறார். இவனை கையில் தூக்கி வைத்துக் கொண்டாலும் கழுத்து சரிகிறது. சுத்தோதனவின் மகன் பிறந்தவுடன் கவிதையையும் பாடியிருக்கிறார். இவனுக்கு இன்னமும் குரலே வராது என்றெல்லாம் அந்தக் காலத்து தாய்மார், தமது பிள்ளைகள் மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து இருப்பார்கள்” என்று நாடக பாணியில் நாட்டாஷா கூறினார். அவர், உண்மையிலேயே பிள்ளைகளை ஒப்பிடும் தாய்மார்களையே கேலி செய்கிறார்.

ஆனால், அக்கால பெண்கள் இவ்வாறெல்லாம் கூறியிருப்பார்கள் என்று கூறும்போது, ‘பொடியன்’, ‘சின்னவன்’ போன்ற வாரத்தைகளால் சித்தார்தனை குறிப்பிட்டு இருப்பார்கள் என்றே கூறுகிறார். புத்தரின் சிறுபராயத்தை குறிப்படும் போது, இதுபோன்ற சொற்களை பாவிப்பது புத்தரை அவமதிப்பதாகும் என்பதே அவரை எதிர்க்கும் பெரும்பாலானவர்களின் வாதமாகும். அதேவேளை வேறு சிலர் இதன் மூலம் நாட்டாஷா சித்தார்த்தவின் அற்புதங்களையே சவாலுக்குள்ளாக்கியிருக்கிறார் என்று வாதிடுகிறார்கள்.

புத்தரின் காலத்தில் வாழ்ந்த தாய்மார்களே அந்த வார்த்தைகளை பாவித்ததாக நாட்டாஷா கூறினாரேயல்லாமல் அவர் சித்தார்த்த இளவரசனை அவ்வாறு குறிப்பிடவில்லை என்று சிலர் வாதிடலாம். ஆனால், அது நாட்டாஷாவின் வாயாலேயே வெளியாகிறது. எந்தவொரு சமயத்தவரும் தமது சமய ஸ்தாபகரையோ அல்லது சமயத்தலைவர்களையோ அவ்வாறான சொற்களால் குறிப்பிடுவதை கேட்க விரும்புவதில்லை. அது அவர்களது உணர்வுகளை பாதிக்கிறது.

1988 ஆம் ஆண்டு இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் (ஸல்) அவரது மனைவிமார்களையும் அவமதித்து சல்மான் ருஷ்தி என்ற எழுத்தாளர் எழுதிய Satanic Verses என்ற நாவலை இது எமக்கு நினைவூட்டுகிறது. அந்த நாவலில் வரும்; விபச்சாரிகளுக்கு அவர் நபிகளாரின் (ஸல்) மனைவிமார்களின் பெயர்களையே சூட்டியிருக்கிறார்.

நாட்டாஷாவின் உரையில் இடம்பெற்ற தவறு திட்டமிட்ட அவமதிப்பு அல்ல; அது ஒரு தற்செயல் என்றோ அல்லது சிந்திக்காமல் பாவித்த சொற்கள் என்றோ கூறலாம். ஆனால், சல்மான் ருஷ்தியின் நாவல் திட்டமிட்ட நிந்தனை என்பது தெளிவானது. எனினும் இலங்கையில் பலர் நாட்டாஷா செய்தது மத நிந்தனை என்றும் சல்மான் ருஷ்தி தமது கருத்துச் சுதந்திரத்தையே பாவித்துள்ளார் என்றும் வாதிடுகிறார்கள். இன்று மத நிந்தனையைப் பற்றிப் பேசுபவர்கள் பலர் ஞானசார தேரரின் மத நிந்தனைகளையும் வரவேற்றார்கள்.

நாட்டாஷாவும் கருத்துச் சுதந்திரத்தையே பாவித்தார் என்று பலர் வாதிடுகிறார்கள். அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றிய சிலர் நிந்தனைக்கும் மற்றவர்களை புண்படுத்துவதற்கும் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் உரிமை இருக்கிறது என்றும் வாதிட்டார்கள். மதங்களை கேள்விக்குள்ளாக்குவது உரிமையாகும் என்றும் அங்கு கூறப்பட்டது.

அரசியல் ரீதியாக மிகவும் மோசமான நிலையில் உள்ள இலங்கையின் ஆளும் கட்சியினர் மீண்டும் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக செபால், ஜெரோம், நாட்டாஷா ஆகியோரின் கூற்றுகளைப் பாவித்து துவேஷத்தை தூண்ட பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் காண முடிகிறது. நிந்தனைக்கும் உரிமை இருக்கிறது என்ற நாட்டாஷாவின் சில ஆதரவாளர்களின் கூற்றுகள் அந்த ஆளும் கட்சியினருக்கு தீனி போடுவதாகும்.

நல்ல நோக்கத்தோடு மத போதனைகளை கேள்விக்குள்ளாக்கி ஆராய்வதை எதிர்க்க முடியாது. ஆனால், அதனை பொருத்தமான இடத்திலும் நேரத்திலுமே செய்ய வேண்டும். உயிர்த்த ஞாயிறுத் தின பயங்கரவாத தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தவரின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததைப் போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கைகளைக் கேள்விக்குரியதாக்குவது சமய ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதாகும். புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் அன்று அவ்வாறு செய்தார்கள்.

அதேவேளை அறிவுபூர்வமான விவாதத்துக்கும் பகிரங்க விவதத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்தே இந்த விடயம் விவாதிக்கப்பட வேண்டும். பகிரங்க விவாதம் அறிவுபூர்வமானதல்ல. அது வன்செயல்களுக்கும் இட்டுச் செல்லலாம். பகிரங்க விவாதத்தின் போது எவரும் தவறாக இருந்தாலும் தமது பிடியை கைவிட விரும்புவதில்லை.

தமிழ்நாடு அரசாங்கம் 1982 ஆம் ஆண்டு நடராஜ சிலையொன்றின் உரிமையை கோரி இலண்டன் நீதிமன்றில் வழக்காடியது. விசாணையின் போது நீதிமன்ற ஊழியர் ஒருவர், சிலையின் காலால் அதனை தொங்கவிட்டுக் கொண்டு நீதிமன்ற அறைக்கு கொண்டு வந்தார். அதனைக் கண்ட நீதிபதி “உமக்கும் எனக்கும் இது வெறும் சிலையாக இருக்கலாம். ஆனால், இதனை கேட்டு வழக்காடும் தமிழ்நாட்டில் ஐந்து கோடி மக்களின் உணர்வுகளை மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.

கருத்துச் சுதந்திரத்துக்கான வரம்பையும் அந்த அறிவுரை சுட்டிக் காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.