புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் – விஜய் பேச்சு
திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார்.
தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம்
புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய விஜய், “ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நமக்கு அப்படி கிடையாது. நாம எல்லோரும் ஒன்னுதான்.
வேற வேற வீட்ல, வேற வேற ஊர்ல, வேற மாநிலத்துல இருக்கிறதுனால நாம் எல்லாரும் சொந்தங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? அது எப்படி முடியும்?
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகானு நம்ம வகையறா எங்க இருந்தாலும் அவங்க நம்ம உறவுதான்.
வேறு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பாரபட்சம் பார்க்காமல் புதுச்சேரி அரசு நடந்துள்ளது. புதுச்சேரி அரசுக்கும், CM Sir அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.
இதை பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்.
1977 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னாடியே 1974 ஆம் ஆண்டிலே இங்கே அவர்களின் ஆட்சி அமைந்தது.
நமக்காக வந்தவர் எம்ஜிஆர், அவரைத் தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்கனு அலெர்ட் பண்ணதே புதுச்சேரி மக்கள்தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மளால மறக்க முடியுமா?
தமிழ்நாடு போலவே என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்திருக்கும் புதுச்சேரி மக்கள். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன். இது எனது கடமை.
புதுச்சேரியை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு
புதுச்சேரி அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.
புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது.
இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” என பேசியுள்ளார்.