15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்; மக்கள் வெளியேற்றம்
நாட்டில் சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப் பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர கூறினார்.
சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகள்
மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று (08) மாலை 4 மணிக்கு 4 மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியிடப்பட்ட வெளியேற்ற சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை, 5 மாவட்டங்களில் உள்ள 31 பிரதேச செயலகப் பிரிவுகள் 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையின் கீழ் ஆபத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது.