புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கெதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணை
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும், 150க்கு மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து போராடியிருந்தனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளரின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக அதாவது சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரினால் தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் மாணிக்கவாசர் இளம்பிறையன், உப தலைவர் கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் ஏனைய இரு பொதுமக்களின் பெயர் குறிப்பிட்டு வழக்கு தாக்கல் மேற்கொண்டு கடந்த 07- 10- 2025 அன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டு வழக்கு நடைபெற்றிருந்த நிலையில் நேற்றைய தினம் ( 09-12-2025 ) இரண்டாவது தடவையாக விசாரணை நடைபெற்றதோடு எதிர்வரும் 10-03-2026 அன்று குறித்த வழக்கின் விசாரணை இடம்பெறும் என்று ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வீதியை மறித்து போராடியதாக பொலிசாரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் சட்டத்தரணிகளான அஜித் சங்கர் , கௌரி சங்கர் ஆகியோரும் நிதி மன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.