;
Athirady Tamil News

முஸ்லிம் அரசியல்: தேவை ஓர் ‘அழுத்தக்குழு’ !! (கட்டுரை)

0

ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசத்தில், மக்கள் பக்கமிருந்து இயங்கும் அழுத்தக் குழுவொன்றின் பங்களிப்புகள், அசாதாரணமான அடைவுகளை பெற்றுக் கொடுக்கும் வினையூக்கிகளாக இருந்திருக்கின்றன.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாக மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும், மக்கள் ஆணையைப் பெற்றவர்களாக அரசாங்கம் காணப்பட்டாலும் தேர்தலுக்குப் பின்னர் அவர்களது போக்கு, திசை மாறுவதை நெடுகிலும் கண்டு வருகின்றோம்.

அந்தத் தருணத்தில், ஆட்சியாளர்களும் சரி, பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, நலன்களின் மோதலுக்கு ஆளாகின்றனர். அதாவது, சமூக நலனா, சொந்த அரசியல் நலனா என்ற என்ற தெரிவை, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

இலங்கை போன்ற நாடுகளில், பெரும்பாலும் ஆட்சியாளர்களுக்கும் பெரும்பான்மை – சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகளுக்கும், மக்கள் சார்பு அரசியல் என்பது முதன்மைத் தெரிவாக இல்லை என்பதற்கு, நாமே வாழும் சாட்சிகள். அதன் தாக்கத்தை நாம் பலதடவை அனுபவித்துள்ளோம்.

மிகக் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியான இழப்புகளைச் சந்தித்து வருவதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். முறையாக கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, நெறிமுறை சார்ந்த, பண்பாடுள்ள, மிதவாத போக்குடைய, அறிவார்ந்தமான ஓர் அழுத்தக்குழுவின் வெற்றிடம், முஸ்லிம் அரசியலில் நெடுநாளாகவே உணரப்பட்டு வருகின்றது.

இங்கே, ‘அழுத்தக்குழு’ என்பதைத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. மிகக் கவனமாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக நலனை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு, சமூக மட்டங்களில் இருந்தும் அழுத்தங்களை பிரயோகிக்கின்ற ஒரு சிவில் சமூக குழுவாக இது இருக்க வேண்டும்.

அரசியல் விஞ்ஞானம் படித்த மேதைகளாக அவர்கள் இருப்பதை விட, அரசியல் களநிலைமைகள் மற்றும் நடைமுறை யதார்த்தம் தெரிந்தவர்களாக இருப்பதே முக்கியமானது. ஒழுக்கமுள்ளவர்களாக, இங்கிதமும் நாகரிகமும் தெரிந்தவர்களாக பக்குவப்பட்ட ஒரு குழுவாக அது இருக்க வேண்டும்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள், உரிமைகள், அதன்பொருட்டு எடுக்கப்பட வேண்டிய நகர்வுகள் என்ன என்பதை, தொடர்ச்சியாக இக்குழு அவதானித்து வருவதுடன், அவற்றைச் செய்வதற்கான அழுத்தத்தை, அரசியல்வாதிகள் மீது வெளியில் இருந்து பிரயோகிக்க வேண்டும்.

அந்தக் குழு, சமூகத்துக்காக அதைச் செய்ய வேண்டுமே தவிர, அதற்கு மறைமுக நிகழ்ச்சி நிரலோ உள்நோக்கமோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், நாம் சொல்கின்ற அழுத்தக்குழு அதுவல்ல!

இலங்கை ஒரு பல்லின நாடு என்ற அடிப்படையை, எப்போதும் மறந்து விடக்கூடாது. ஆகவே, அரசியல் மீது அழுத்தம் செலுத்துகின்ற எந்தக் குழுவும் கடும்போக்கு, தீவிரபோக்கை பின்பற்ற முடியாது. முஸ்லிம்களுக்காக முன்னிற்றல் என்ற தோரணையில், இனவாதமாக, மதவாதமாக அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வால்பிடித்துக் கொண்டு நிற்பது பொருத்தமற்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள், தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. தேர்தல் காலத்தில் அவர்களுக்கு ஞானம் பிறப்பதும், தேர்தல் முடிவு வெளியான பிறகு அவர்கள் ‘ஞானசூனியங்கள்’ ஆகிவிடுவதும் நமக்குப் புதியதல்லவே! கால் நூற்றாண்டாக அதன் பிரதிபலனை முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

சரியான அழுத்தக் குழு என்பது, கலவரக் காரர்களோ, குழப்பவாதிகளோ, மறைமுக நிகழ்ச்சி நிரல்களை வைத்துக் கொண்டு சமூகம் பற்றிப் பேசுபவர்களோ அல்லர். அடுத்த முறை அரசியலில் குதிப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட அரசியல் அணியை வீழ்த்த காய் நகர்த்துபர்களும் அல்லர்.

சமூக நலன் கருதிய அரசியலை, மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுக்கின்றார்களா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து வருவதுடன், அந்த வழித்தடத்தில் இருந்து அரசியல்வாதிகள் விலகிச் செல்கின்ற போது, அதற்காகக் குரல் கொடுக்கும், வெளியில் இருந்து அவர்களை வழிப்படுத்தும் தரப்பினரையே இது குறிப்பிடுகின்றது.

சிங்கள அரசியலில் அழுத்தக் குழுக்கள் நிறையவே இருக்கின்றன. சில குழுக்களின் பின்னணியில் வேறு செயற்றிட்டங்கள் இருந்தாலும் கூட, பொதுவில் பெரும்பான்மை சமூகத்துக்குப் பாதகமான தீர்மானங்கள் வருகின்ற போது, அவற்றை எதிர்ப்பதற்கும் சிங்கள மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் எந்த எல்லை வரையும் செல்லத் தயாரான பல குழுக்கள் உள்ளன.

அதேபோன்று, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தக் குழுக்களை காணலாம். உண்மையாகச் சொன்னால், அழுத்தக் குழுக்களின் காரணமாகவே, தமிழர் அரசியல் என்பது ஒரளவுக்கேனும் சமூகம் சார்ந்ததாக தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான குழுக்களின் பிடி தளர்கின்றபோது, தமிழர் அரசியல் தளம்புவதையும் காண முடிகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சமூகங்கள், பல்கலைக்கழக கல்வியியலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புகள், சுய இலாபத்துக்காக அல்லாமல் சமூகத்துக்காக மட்டும் குரல்கொடுக்கிள்ற சில புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால், இப்படியோர் ஏற்பாடு முஸ்லிம் சமூகத்துக்குள் இல்லை. எனவே, முஸ்லிம் தலைவர்கள், பாராளமன்ற உறுப்பினர்களின் அரசியல், தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பதற்கு நாம் அனைவரும்தான் சாட்சிகளாக உள்ளோம். சமூக வலைத்தளங்களில், முட்டாள்தனமாக கருத்து வெளியிடுவது, காத்திரமான அழுத்தமாக அமையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், ஒரு கட்சியில்த்தான் போட்டியிட வேண்டும் என்று கூற முடியாது. அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஆனால், சமூகத்துக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது, பகை மறந்து அனைத்து முஸ்லிம் தரப்புகளும் ஓர் இடத்தில் சந்தித்து, சமூகம் குறித்த முடிவுகளை எடுப்பதுதான் அவசியமாகும்.

ஆனால், வாக்களிக்கின்ற முஸ்லிம் மக்கள், ஒருபோதும் அரசியல்வாதிகளை தட்டிக்கேட்பதில்லை. மாறாக, ‘எங்கள் தலைவர் எதையாவது செய்தால், எங்களது எம்.பி முடிவு எடுத்தால், அது சரியாக இருக்கும்’ என்று முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால், மக்களின் பக்கத்தில் இருந்து எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படுவதில்லை.

ஊர் வாரியாக இருக்கின்ற பள்ளிவாசல்களிலும் பாடசாலைகளிலும் அரசியல் இப்போது புகுந்து விளையாடுகின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூக நலனுக்கான நகர்வுகளை எடுப்பதற்கான அழுத்தத்தை பள்ளிவாசல்களோ, உலமா சபை போன்ற சமூக அமைப்புகளோ கொடுக்கவில்லை.

இலங்கை அரசியலில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியலாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஆயினும் கூட, முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்தும் விடயத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகமோ, முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்ற புத்திஜீவிகள், படித்தவர்களோ காத்திரமான அழுத்தங்களை, வழிப்படுத்தலை வழங்குவதில்லை.

ஒவ்வொரு கட்சியின் முகாமுக்குள்ளே நின்று கொண்டு, சமூக நலன் பற்றிப் பேசுகின்றவர்களே அதிகமுள்ளனர். அதைவிடுத்து, சமூகம் என்ற பொதுவெளியில் நின்று கொண்டு, சரியை சரி என்றும் பிழையை பிழை என்றும் சொல்லி, வேறு எந்த உள்நோக்கமும் இல்லாமல், முஸ்லிம் அரசியலை வழிப்படுத்த ஓர் ஏற்பாடு அவசியம்.

இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் ஒரு குழுவாக இயங்க வேண்டும் என்பதில்லை. ஆனால், முஸ்லிம் அரசியலை உன்னிப்பாக உற்றுநோக்கி வருவது மட்டுமன்றி, தேவையான போது நெறிப்படுத்தும் பணியை எங்கிருந்தாவது செய்து கொண்டிருக்க வேண்டும். முதலில் அவர்களுக்குத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.

அப்படியான ஒரு குழு, ஓர் ஏற்பாடு முஸ்லிம் அரசியலில் இல்லாத காரணத்தால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பப்படி போய்க் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான நகர்வுளை நியாயப்படுத்த கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதன் இழப்புகளை சமூகம் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றது.

இப்போதும் அழுத்தக் குழுவொன்றின் தேவை கடுமையாக உணரப்படுகின்றது. அதைக்கூட உணராத ஒரு கூட்டமும் உள்ளது. ஆனால், சமூக நோக்கம் கருதிய அழுத்தக் குழவை உருவாக்குவது, முஸ்லிம் சமூகத்துக்குள் இலேசுபட்ட விடயமும் அல்ல!

You might also like

Leave A Reply

Your email address will not be published.