;
Athirady Tamil News

தேங்காய் மூலம் நிலத்தடி நீரோட்டம் பார்ப்பது ஏமாற்று வேலையா? உண்மை என்ன? (கட்டுரை)

0

நிலவில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை அறியும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், இன்றளவும் கிராமப்புறங்களில் உள்ளங்கையில் தேங்காயையோ, ஒரு குவளை தண்ணீரையோ வைத்து நிலத்துக்கு அடியில் தண்ணீரைத் தேடும் பாரம்பரிய, அறிவியல் அடிப்படை இல்லாத முறைகள் பின்பற்றப்பட்டுகின்றன.

தொலைதூர கிராமப்புறங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கு, தங்கள் வயல்களில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிய புவியியலாளர்களை அழைக்க நேரமோ பணமோ இருப்பதில்லை.

இதனால், பல விவசாயிகள், தங்கள் வயல்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க, கள ஆய்வாளர்களை அழைத்து வருகின்றனர். வயலில் நீர் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தில் ‘தண்ணீர்ப் புள்ளி’ (Water Point) என்ற ஒரு விஷயத்தைப் போட்டு அங்கு குழி தோண்டுகிறார்கள்.

இப்படித் தண்ணீர்ப் புள்ளி போடுபவர்கள், தேங்காயையோ, ‘Y’ வடிவ வேப்பங் குச்சி, தண்ணீர் நிரம்பிய இரு பாத்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தி ‘தண்ணீர் இருக்கும் தடயத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்’.

இத்தகைய முறைகள் உண்மையில் அறிவியல்பூர்வமானவையா?

இவற்றைப் பற்றி புவியியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதனை நம்பும் விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

இவர்களை எந்த அளவுக்குக் களத்தில் நம்பலாம் என்பது போன்ற விஷயங்களை பிபிசி தெலுகு ஆய்வு செய்தது.

தனக்குத் தெரிந்த சில முறைகள் மூலம் நிலத்டி நீரோட்ட தடயங்களை அடையாளம் கண்டுபிடிப்பவர்களில் சுரேந்தர் ரெட்டியும் ஒருவர். சித்தூர், திருப்பதி மாவட்டங்களில் பல விவசாயிகளுக்கு நீர்நிலைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயியின் வயலில் நிலத்தடி நீரோட்டம் கண்டுபிடிக்க தேங்காய், Y வடிவ வேப்பங்குச்சி அல்லது தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்.

தேங்காயின் குடுமி விரல்களை நோக்கி இருக்கும்படி அதனை உள்ளங்கையில் வைத்துகொண்டு வயலில் இவர் நடக்கும்போது, அந்தத் தேங்காய் நிமிர்ந்து நிற்கும் இடமெல்லாம் நிலத்துக்கு அடியில் தண்ணீரின் சுவடு இருப்பதாக நம்பப்படுகிறது.

இல்லையெனில், அவர் தன் உள்ளங்கையில் ஒரு Y-வடிவ வேப்பங்குச்சியுடன் நடக்கிறார். தண்ணீரின் சுவடு இருக்கும் இடத்தில், அந்தக் குச்சி நேராக எழுந்து நிற்கும்.

“நான் எங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கலாம் என்பதைப் பார்க்கிறேன். இதை நான் சொந்தமாகக் கற்றேன். நிலத்தடி நீரோட்டம் ஆற்றலால் தீர்மானிக்கப்படுகிறது. எத்தனை அடிக்குக் கீழே தண்ணீர் உள்ளது என்பதை தெங்காய் எழும்புவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்,” என்கிறார் அவர்.

இயந்திரங்கள் மூலம் சரிபார்த்தாலும் புவியியலாளர்களால் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது, ஆனால் தான் கண்டறிந்த 99% இடங்களில் வெற்றிகரமாக நிலத்தடி நீரோட்டம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார் சுரேந்தர் ரெட்டி. பல்லாண்டு காலமாக இந்த வேலையைச் செய்து வருவதாகச் சொல்கிறார் இவர்.

“புவியியலாளர்களுக்கு எங்களைப் போல இந்த விஷயம் தெளிவாகத் தெரியாது. அதனால்தான் விவசாயிகள் புவியியலாளர்களை அதிகம் நம்புவதில்லை. விவசாயிகள் பெரும்பாலும் அவர்கள் கண்களால் பார்ப்பதை மட்டும் நம்புகிறார்கள்,” என்று சுரேந்தர் ரெட்டி கூறினார்.

“ஓரிடத்தில் தண்ணீர் இருக்கும்போது கையிலிருக்கும் தேங்காயோ வெப்பங்குச்சியோ எழுந்து நிற்கும் என்று நினைக்கிறோம். இரண்டு அல்லது மூன்று தண்ணீர்க்கோடுகள் சந்திக்கும் இடத்தில், தேங்காயோ, குச்சியோ சுழலும். அங்கு அதிக தண்ணீர் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் சுரேந்தர் ரெட்டி.

அறிவியல் முறைகள் மூலம் மட்டுமே தண்ணீரின் தடயத்தை துல்லியமாக கண்டறிய முடியும் என்கிறார் சுப்பாரெட்டி.

திருப்பதியைச் சேர்ந்த புவியியலாளர் மற்றும் நிலத்தடி நீர் ஆலோசகர் சுப்பாரெட்டி, தேங்காய், வேப்பங் குச்சிகள், மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மூலம் தண்ணீரின் தடயங்களைக் கண்டறியும் முறைகள் அறிவியல் பூர்வமானவை அல்ல என கூறுகிறார்.

“தேங்காயைத் தவிர, வேப்பங்குச்சி மற்றும் பிற மரக்குச்சிகள் ஆகியவற்றை தண்ணீரின் தடயங்களைக் கண்டறியப் பயன்படுத்துகிறார்கள். அவை எழுந்து நிற்கும் இடத்தில் தண்ணீர் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அங்கே குழி தோண்டச் சொல்கிறார்கள். ஆனால் இவை அறிவியலற்ற முறைகளாகவே கருதப்பட வேண்டும்,” என்கிறார் சுப்பாரெட்டி.

மேலும் சிலர், தங்கள் கைகளில் நீர்க்கோடு இருப்பதாகவும், கடவுள் அவர்களின் கனவில் தோன்றி தண்ணீர் எங்கே இருக்கிறது என்று சொல்வதாகவும் சுப்பாரெட்டி கூறுகிறார்.

ஆனால், அறிவியல் முறைகள் மூலம் மட்டுமே தண்ணீரின் தடயத்தை துல்லியமாக கண்டறிய முடியும் என்கிறார் சுப்பாரெட்டி.

ஏராளமான நீர் ஆதாரங்கள் இருக்கும்போது, எந்த முறையிலும் தோராயமாகத் தண்ணீரைக் கண்டுபிடிக்கலாம். அறிவியலற்ற முறைகள் மூலம் சொல்லப்படும் இடங்களில் தோண்டினாலும் தண்ணீர் வரும். விவசாயிகள் அந்த முறைகளை நம்புவதற்கு இதுவே காரணம் என்கிறார் சுப்பாரெட்டி.

“சில பகுதிகளில் இதே போன்ற நடைமுறைகள் உள்ளன. தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வைக்கப்படும் எந்த நீர் புள்ளியும் அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. சில சவாலான இடங்களில், அதாவது ஆயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறு போட்டாலும் தண்ணீர் வாராத சில பகுதிகளில், இதுபோன்ற முறைகளால் தண்ணீற்றைக் கண்டறிய முடியாமல் போக வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் சுப்பாரெட்டி.

எனவேதான் புவியியல் வல்லுநர்கள் அறிவியல் முறைகள் மூலம் இதுபோன்ற பகுதிகளில் தண்ணீரை கண்டுபிடிக்க முயன்றும் தண்ணீர் வரவில்லை, அப்படிப்பட்ட இடத்தில் குழி தோண்டினால் பணம் விரயமாகும் என அவர்களே விவசாயிகளுக்கு அறிவுரை கூறுகின்றனர், என்கிறார் அவர்.

நிலத்தடி நீரின் தடயத்தைக் கண்டறிய உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகளில் மிந்தடைக் கணக்கெடுப்பும் (electrical resistivity survey) ஒன்று

நிலத்தடி நீரோட்டத்தின் தடயங்களைக் கண்டுபிடிப்பதில் அறிவியல் முறைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சுப்பாரெட்டி கூறுகிறார். நிலத்தடி நீரின் தடயத்தைக் கண்டறிய உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகளில் மிந்தடைக் கணக்கெடுப்பும் (electrical resistivity survey) ஒன்று என்கிறார் அவர்.

“மின் தடையைக் அளவிடும் மீட்டர் மூலம் ஆய்வு செய்யும் போது, பூமி அடுக்குகளின் மின் எதிர்ப்பு அளவை மதிப்பிடுவோம். இதன் விளைவாக வரும் மதிப்புகளின் அடிப்படையில் ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இதன் முடிவுகள் சாதகமாக உள்ளதா இல்லையா என்பதை சரிபார்த்து, தண்ணீரின் தடயங்கள் இருப்பதை உறுதிப்படுத்துவோம்,” என்றார் சுப்பாரெட்டி.

நிலத்தடி நீரோட்டத்தின் தடயங்கள் இருக்கும் ஆழத்தைக் கண்டறிய ஒரு மென்பொருள் கூட பயன்படுத்தப்படும். இந்த முறைகளில், பூமியின் முதல் அடுக்கு எவ்வளவு ஆழத்தில் உள்ளது, இரண்டாவது அடுக்கு எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு கடினமான பாறை எங்கு உள்ளது. அதற்குமேல் துளையிடக்கூடாது என அறிவியல் முறையில் முடிவு செய்யப்படுவதாகக் கூறுகிறார் சுப்பாரெட்டி.

மேலும், ஊசல் (pendulum) முறை மற்றும் எல் ராட் (L Rod) ஆகிய முறைகள் முழுமையான அறிவியல் முறைகள் அல்ல என்றார். இந்த இரண்டு முறைகள் மூலம், நீர் தடயங்களின் திசையை அடையாளம் காண முடியும், ஆனால் நீர் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதை சரியாகச் சொல்ல முடியாது என்கிறார்.

மின் தடையைக் அளவிடும் மீட்டர் மூலம் ஆய்வு செய்யும் போது, பூமி அடுக்குகளின் மின் எதிர்ப்பு அளவை மதிப்பிடப்படுகின்றன

நிலத்தடி நீரோட்டத்தின் தடயங்களைக் கண்டறியும் முயற்சிகள் பண்டைய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறுகிறார் சுப்பாரெட்டி. நிலத்தின் புவியியல் அம்சங்களின்படி, சிலர் நீரின் தடயங்களை கணிக்கின்றனர், என்கிறார்.

“இந்து நம்பிக்கைகளின்படி, வராஹமிஹிரர் நிலத்தடி நீர் ஆதாரங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பற்றிய ஒரு நூலை எழுதினார். இந்த நூலில் ‘உயிரியல் குறிகாட்டிகள்’ (bio-indictaors) குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் நாவல், சரக்கொன்றை, வெள்ளை மருது, ஆவாரை போன்ற மரங்கள் தண்ணீர் இருக்கும் இடத்தில் செழித்து வளரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. புவியியல் வல்லுநர்களும் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டறிந்து, அத்தகைய பகுதிகளில் தண்ணீர் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள். குட்டைகள் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஓரளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரியல் குறிகாட்டிகளையும் புவியியலாளர்கள் கருத்தில் கொள்கிறார்கள்,” என்கிறார் சுப்பாரெட்டி.

தேங்காயை வைத்து தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிபவர்களோடு, புவியியலாளர்களும் வரவழைக்கப்பட்டு அனைவரும் ஒருமித்ததாகச் சொல்லும் இடத்தில் குழி தோண்டப்பட்டதாகக் கூறுகிறார் விவசாயி முனிகிருஷ்ணா

இதுகுறித்து பிபிசி திருப்பதியைச் சேர்ந்த விவசாயி முனிகிருஷ்ணா ரெட்டியிடம் பேசியது.

அவர் கூறுகையில், ஆழ்துளை கிணறுகள் தோண்டும்போது, தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிய இரண்டு அல்லது மூன்று பேரை வரவழைப்பதாகச் சொல்கிறார்.

தேங்காயை வைத்து தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிபவர்களோடு, புவியியலாளர்களும் வரவழைக்கப்பட்டு அனைவரும் ஒருமித்ததாகச் சொல்லும் இடத்தில் குழி தோண்டப்பட்டதாகக் கூறுகிறார்.

‘‘முதலில் ஒரே இடத்தில் 9 ஆழ்துளை கிணறுகள் தோண்டியபோது 8 இடங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. நிறைய பணத்தை இழந்தோம். மற்றொரு கிணற்றில் ஒரு அங்குலம் தண்ணீர் தான் கிடைத்தது. சிலர் தேங்காயை வைத்துச் சோதிப்பார்கள். சிலர் வேப்பங்குச்சியை வைத்துப் பார்ப்பார்கள். முன்னதாக, நிறைய அழ்துளைக் கிணறுகள் தோண்டிச் சேதம் அடைந்தோம். அதனாலதான் இப்போது இரண்டு மூன்று பேரைக் கூப்பிட்டு, எல்லாரும் ஒருமித்துச் சொல்லும் இடத்தில் ஆழ்துளைச் கிணறு தோண்டுகிறோ,” என்கிறார் முனிகிருஷ்ணா ரெட்டி.

அவர் கூற்றுப்படி, அறிவியலற்ற முறைகளுடன், சில சமயங்களில் புவியியலாளர்கள் கூறிய புள்ளிகளும் தோல்வியடைந்திருக்கின்றன.

“10 ஏக்கர் நிலம் இருந்தால் அந்த 10 ஏக்கரிலும் தண்ணீர் கிடைப்பது கடினம். அதனால்தான் சுரேந்தர் ரெட்டி மாதிரி யாரையாவது கூப்பிட்டால் சுலபமாக நடந்து போய் தண்ணீர்ப் புள்ளியைக் கண்டுபிடிப்பார்கள். மீண்டும் புவியியலாளரைக் கூப்பிட்டு அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தைக் காட்டுவோம். அவர்களும், அங்கு தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தினால், அங்கு ஆழ்துளை கிணறு தோண்டுவோம்,” என்கிறார் முனிகிருஷ்ணா ரெட்டி.

1910-ஆம் ஆண்டு முதல் நிலத்தடி நீரைக் கண்டறியும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றன

சில சமயங்களில் வேப்ப மரங்களும் உயிரியல் குறிகாட்டியாக கருதப்படுவதாகக் கூறுகிறார் சுப்பாரெட்டி.

“வேப்ப மரங்கள் ஆரோக்கியமாக வளர்ந்திருந்தால், அவற்றின் கிளைகளும், இலைகளும் ஒரு பக்கமாக வளைந்திருந்தால், அது அருகில் எங்கோ தண்ணீர் வாய்க்கால் இருப்பதற்கான அறிகுறி. அத்தகைய பகுதியில் உபகரணங்கள் எங்கு அமைக்கப்பட்டுள்ளன என்பதும் முக்கியம். இது அந்தப் பகுதியில் உள்ள புவியியலாளரின் அறிவு மற்றும் அனுபவத்தைப் பொறுத்தது,” என்கிறார் அவர்.

சில சமயங்களில் பாறைகள் சவாலாக அமைவதாகவும், புவியியலாளர்களால் மட்டுமே இதுபோன்ற இடங்களில் நீர் ஆதாரங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் கூறினார்.

1910-ஆம் ஆண்டு முதல் நிலத்தடி நீரைக் கண்டறியும் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதாகவும், விமானத்தில் இருக்கும்போது கூட நீர் இருப்பதற்கான தடயங்கள் என்ன என்பதைக் கண்டறிய ஆய்வுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

திருப்பதி எஸ்.வி.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் முனைவர் சுரேஷ் கூறுகையில், அறிவியல் முறைகளை 100% நம்பலாம், என்றார்.

“இதை அறிவியல் ரீதியாகச் செய்தால், வெற்றி விகிதம் நன்றாக இருக்கும். புவி இயற்பியல் முறை, காந்த முறைகள், மின் எதிர்ப்பு முறை போன்றவை பெரும்பாலும் நிலத்தடி நீரின் தடயங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன,” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.