;
Athirady Tamil News

முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை

0

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான
ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது.

அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன், அதன் அப்போதைய தலைவர் ரோஹன விஜேவீர தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. அனுரகுமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பியின் இன்றைய முன்னணி தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே.வி.பியில் இணைந்தவர்களாகவேயுள்ளனர்.

இலங்கையின் வடக்குக்கு ‘அமைதி காக்கும் படையை’ அனுப்பி வைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜே.வி.பி., இந்தியா, இலங்கையைப் பிரிக்கத் திட்டமிடுவதாகக் கூறி அதற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி மற்றும் படுகொலை வன்முறைகளை முன்னெடுத்தது.

வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது இதன் விளைவாக சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது, இராணுவ அணிவகுப்பு மரியாதையில் விஜயமுனி என்ற கடற்படை அதிகாரி தாக்க முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், குறித்த நபர் ஜே.வி.பி. பின்னணியைச் சேர்ந்தவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இத்தாக்குதலில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையிலேயே அண்மையில் இலங்கை வந்த இந்தியப் பிரதமர் மோடிக்கான இராணுவ அணி வகுப்பு மரியாதையில் மோடியின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெச்சரிக்கையாக அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடிக்குப் பாதுகாப்பை வழங்கினர்.

அப்போது, நாட்டில் ஜே.வி.பியின் படுகொலைகள், வன்முறைகள் உச்சம் தொட்ட நிலையில், ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்ற பின்னர், இரும்புக் கரம் கொண்டு ஜே.வி.பி. அடக்கப்பட்டது. இதன் பின்னர் ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994இல் மீண்டும் தலைதூக்கி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் சோசலிச கொள்கைகளைப் பெருமளவில் கைவிட்டு விட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் செல்வாக்கு

இழந்துபோன ஜே.வி.பி. 2015இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று இன்று ஆட்சியாளர்களாகியுள்ளனர்.

ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் இருந்த ஜே .வி.பி. – என்.பி.பி. ஆகியவற்றின் கொள்கைகளும் பிரசாரங்களும் கொடுத்த வாக்குறுதிகளும் ஆட்சி பீடமேறிய பின்னர் ஒட்டுமொத்தமாக மாறியதே இன்று இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கும் இவர்களின் ஆதரவாளர்கள் விசனப்படுவதற்கும் காரணமாகியுள்ளது.

அதிலும், இந்தியாவின் எதிர்ப்புணர்வாளர்களாகவே தம்மை இறுதிவரை காட்டி வந்த இவர்கள், இன்று இந்தியா மீது கொண்டுள்ள காதல் இவர்களின் கொள்கை. இரட்டைவேடம் தொடர்பிலான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதுவே ஜே.வி.பியில் இன்றுமுள்ள சில தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளர்களினால் ஜே .வி.பி.- என்.பி.பி. கட்சிகளிடையில் பிளவுகளும் முறுகல்களும் ஏற்பட்டுள்ளதை அண்மைய இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் அம்பலப்படுத்தியுள்ளது.

மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.)- தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றமை ஜே.வி.பி. – என்.பி.பிக்கிடையில் முதலில் புகைச்சலை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி அனுரகுமார தனது முதல் விஜயமாக சீனாவுக்குச் செல்ல வேண்டுமென விரும்பியபோதும், அயல்நாடு என்றவகையில் இந்தியாவுக்கு முதலில் செல்ல அனுரகுமாரவுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், அதற்கான அழுத்தமும் இந்தியாவினால் கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமாரவின் இந்த இந்திய விஜயம் தொடர்பில் ஜே.வி.பிக்குள் எதிர்ப்பலைகள் எழுந்ததுடன், நாட்டிலும் அனுரகுமார அரசுக்கு எதிரான விமர்சனங்கள், விசனங்கள் கிண்டல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், அனுரகுமாரவின் இந்திய விஜயத்தையும் அவரது உயர்மட்ட கலந்துரையாடல்களையும் அவரது கட்சிக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாகத் தேசிய மக்கள் சக்தி வெளிக்காட்டி பிரசாரங்களை முன்னெடுத்தது.

அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, அதானியின் கொழும்பு மேற்கு துறைமுக அபிவிருத்தி ,திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்தியப் பிரதமர் வரும்போது வெளியிடலாமென்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டபோது, அவற்றையெல்லாம் நிராகரித்தார் ஜே.வி.பி அமைச்சர் ஒருவர்.

இந்தியாவுக்கு அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பியின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது.

என்பது ஜே.வி.பியில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில்தான், அண்மைய இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே.வி.பிக்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளைத் தீவிரப்படுத்தி விட்டுள்ளது. இதன் வெளிப்பாடுகளாகவே இந்தியப் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வு, இராப்போசன விருந்துபசாரம் போன்றவற்றை ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் சில
முக்கிய அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

இன்று நாடொன்றின் பிரதமரையே கூடி நின்று வரவேற்க முடியாத நிலைமை
ஜே .வி.பி.-என்.பி.பி. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மோடியின் இந்த விஜயத்தின்போது, இலங்கை மற்றும் இந்தியா இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கைக்குப் புலனாய்வுத் தகவல் வழங்குவது, திருகோணமலையில் சக்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது, இலங்கை கடல் படைக்குப் பயிற்சி, விமானப் படைக்குப் பயிற்சி மற்றும் விமானங்களை வழங்குவது என்று 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் இலங்கை இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனூடாக ஒட்டு மொத்தத்தில் மோடி, இலங்கையை வளைத்து கைக்குள் போட்டுள்ளார். சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்கான முழு நடவடிக்கையில் இறங்கிய மோடிக்கு இது பெரும் வெற்றி அளித்துள்ளது.இதுவே ஜே.வி.பியிலுள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை இந்தியப் பிரதமரிற்கான வரவேற்பை, சந்திப்பை, இராப்போசன விருந்தை புறக்கணிக்க வைத்தது.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு சர்ச்சை உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. பிராந்திய பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும். மேம்பட்ட மற்றும் திறமையானவர்களின் உதவியைப் பெற வேண்டும். இல்லையெனில், நாம் முன்னேற முடியாது என்றும் அனுரகுமார கூறியுள்ளார்.

எமது அயல் நாட்டின் தலைவர் மோடி நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுச் சென்றுள்ளார்.ஆனால், எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

அரசு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை.அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில், மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால், நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

அதேபோன்று மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அனுராதபுரம் ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், ஜனாதிபதி அனுரகுமார, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்தத் திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று இந்தியாவிடம் இருந்து நாம் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.தற்போது இந்தக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதாக இந்தியப் பிரதமர் மோடி எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

எனவே, எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது என்று ஜே .வி.பி.யின் பொதுச் செயலாளரும் தே.ம.ச.யின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ரில்வின் சில்வா வும் இந்தியாவுடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகவே, இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசில் முரண்பாடுகளையும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டுள்ளதுடன் அதனை வெளியுலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித்தவித்து வரும் நிலையில் தற்போதைய இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயத்திற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஜே.வி.பியினரின் உள்ளம் கவர்ந்த சீன அரசு காட்டப்போகும் பிரதிபலிப்புக்கள் இலங்கையில் இந்திய-சீன தலையீடுகளின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே போகின்றன.

அனுரகுமார, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், முதல் நாடாக இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையில் ஏற்படுத்திய அதிர்வலைகளை விடவும் கடந்த 4ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு மீது அதிக எதிர்ப்பலைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தியாவுக்கு எதிரான ஜே .வி.பியின் கொள்கை தொடர்பிலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜே .வி.பி.-என்.பி.பி. கட்சிகளுக்குள் முரண்பாடுகளையும் பிளவுகளையும் அதிகரித்துள்ளது.

முருகானந்தம் தவம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.