;
Athirady Tamil News

நுண் மற்றும் மீநுண் நெகிழிகள் (Micro & Nano Plastics): எம்மை ஆட்கொள்ளும் கண்ணுக்குப் புலப்படாத ஆபத்து

0

நவீன வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நெகிழிகள் பிணைக்கப்பட்டுள்ளது – பேக்கேஜிங் மற்றும் ஆடை முதல் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் வரை. ஆனால் ஒரு காலத்தில் ஒரு அதிசயப் பொருளாகக் கொண்டாடப்பட்டது இப்போது மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. நெகிழிகள் உடைவதால், அவை நுண் நெகிழிகள் (1 μm–5 மிமீ) மற்றும் மீநுண் நெகிழிகள் (<1 μm) என துண்டாகிறது. இந்த துகள்கள் மிகவும் சிறியவை, அவை மனித கண்ணில் இருந்து தப்பிக்கின்றன இருப்பினும் அவற்றின் தாக்கம் மிகப்பெரியது.

நுண் நெகிழிகள் எப்படி உருவாகின்றது?

நுண் நெகிழிகள் இரண்டு முதன்மை வழிகள் மூலம் சுற்றுச்சூழலுக்குள் நுழைகிறது:

• முதன்மை துகள்கள் (Primary Particles) – அழகுசாதனப்பொருட்கள், தொற்று நீக்கிகள் மற்றும் தொழில்முறை தேவைகளை நோக்காக கொண்டு தயாரிக்கப்படுகின்றன (Cai et al., 2021).

• இரண்டாம் நிலை துகள்கள் (Secondary Particles) – சூரிய ஒளி, வெப்பம், இயந்திர சிராய்ப்பு அல்லது நுண்ணுயிரிகளால் பெரிய நெகிழிகள் சிதைவடையும் போது உருவாகும் (Chamas et al., 2020).

புற ஊதாக்கதிர்களால் தூண்டப்படும் ஒளிப்பிரிகையாக்கத்தின் விளைவாக சிக்கலான பிணைப்புகள் உடைக்கப்பட்டு, அதிக வீரியம் வாய்ந்த சிறு துகள்கள் விளைவாக கிடைக்கப்பெறுகின்றது (Delre et al., 2023). விளைவாக கிடைக்கப்பெறப்பட்ட இந்த சிறு துணிக்கைகள் காற்று, நீரோட்டங்கள், மற்றும் கடலோட்டத்தி கலந்து எண்ணிப்பார்க்க இயலாத தொலைவுகளை, மலைகளை மற்றும் துருவப்பகுதிகளைக்கூட மிக இலகுவாக அடைந்துவிடுகின்றன (Allen et al., 2019; Ryan et al., 2023).

நெகிழிகளை உருவாகும் மூலப்பொருட்கள், உயிரினங்களினுள் அவற்றின் இருப்பு மற்றும் விளைவுகள் – Thompson et al., 2024

மண், நீர் மற்றும் மனித உடலுக்குள்ளான நெகிழியின் ஊடுருவல்

இன்று, நுண் நெகிழிகள் எல்லா இடங்களிலும் உள்ளது – மண், ஆறுகள், நிலத்தடி நீர், கடல்கள், மழை, நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் நாம் உண்ணும் உணவு (Viaroli et al., 2022; Huang et al., 2021). அவற்றின் இயக்கம் உள்ளூர் நீர், நில பயன்பாடு மற்றும் வானிலை முறைகளைப் பொறுத்தது (Viaroli et al., 2022).

மண், ஒரு காலத்தில் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது, இப்போது உலகளவில் அதிகளவான நெகிழி அடையாளப்படுத்தப்பட்ட பூமியின் பாகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆடைக்கழிவுகள், டயர்கள், உரம் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றிலிருந்தும் நெகிழி மண்ணை அடைகின்றது.

இன்னும் ஆபத்தானது, மீநுண் நெகிழிகள், அவை உயிரியல் சவ்வுகளைக் கடக்கும், உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும், வீக்கத்தைத் தூண்டும் மற்றும் திசுக்களில் குவிந்துவிடும் (Lai et al., 2022; Wang et al., 2022).

அவை அளவில் சிறியதாக உள்ளதால் இலகுவாக நச்சுகள் மற்றும் கன உலோகங்களை அகத்துறிஞ்சுகின்றதோடு மட்டுமல்லாது, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள்ளும் மனித உடலினுள்ளும் கொண்டுசெல்லும் காவிகளாக செயல்படுகின்றன. (Pérez-Reverón et al., 2023; Guo & Wang, 2021).

ஏன் நெகிழிகளைக் கண்டறிதல் மற்றும் அடையாளப்படுத்தல் மிகவும் கடினமாக உள்ளது?

பரவலான ஆராய்ச்சியாளர்கள் நெகிழிகளின் மாசுபாட்டு ஆவணப்படுத்தியிருந்தாலும், நெகிழியை மாதிரி எடுப்பதற்கும், முன்கூட்டியே அவற்றை அடையாளம் காண்பதற்கும் மற்றும் அடையாளம் காணப்பட்டவற்றை சரியான முறையில் அகற்றவும் இன்னும் தரப்படுத்தப்பட்ட உலகளாவிய நெறிமுறை இல்லை (He et al, 2018; Chia at al., 2022).

சுற்றுச்சூழல் மாதிரிகள் கரிமப் பொருட்கள், தாதுக்கள், இழைகள் மற்றும் உயிரியல் குப்பைகள் ஆகியவற்றின் குழப்பமான கலவையாகும் – சிறிய நெகிழி துகள்களை தனிமைப்படுத்தி அகற்றுவது என்பது மிகவும் சவாலானது.

தற்போதைய சவால்களாக காணப்படுபவை:

1. கரிம மற்றும் கனிம பொருட்களிலிருந்து நெகிழியை பிரித்தல்

2. நெகிழியை சரியாக கண்டறிய இயலாத தன்மை (Less precision) – உ+ம்- நெகிழி காணப்படும் சந்தர்ப்பத்தில் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக கிடைக்கப்பெறல் (False negative)

3. 1 மைக்ரானுக்குக் குறைவான துகள்களை துல்லியமாக அளவிடுதல்

4. மேம்பட்ட கருவிகளின் அதிக விலை மற்றும் சிக்கலான தன்மை (Thomas et al., 2024)

கண்ணுக்கு தெரியாதவற்றை புலப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மேற்குறிப்பிட்ட சவால்கள் இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அறிவியல் முன்னேற்றம் காணப்படுகிறது.

எஃப்டிஐஆர்(FTIR – Fourier Transform Infrared Spectroscopy), ராமன் மைக்ரோஸ்கோபி (Raman Microscopy), ஏஎஃப்எம்-ஐஆர்( AFM-IR – Atomic force microscope-infrared spectroscopy) மற்றும் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Mass spectrometry) போன்ற மேம்பட்ட நிறமாலைக் கருவிகள் நுண் மற்றும் மீநுண்துல்லியமான கண்டறிதலை சாதகமாக்கியுள்ளன (Silva et al, 2018; Ivleva, 2021) .

நானோ தொழில்நுட்பம் சார்ந்த செறிவூட்டல் நுட்பங்கள் – காந்த நானோ துகள்கள் (Magnetic Nano Particles), நானோ ஃபைபர் மென்சவ்வுகள் (Nanofibre Membranes) மற்றும் உலோக-கரிம கட்டமைப்புகள் (Metal organic frameworks) ஆகிய தொழில்நுட்பங்கள் நெகிழியை வேறுபிரிக்கும் திறனை மேம்படுத்துகிறன (Juraij et al., 2023, Modak et al., 2023)

இயந்திர கற்றலும்(Machine learning) ஒரு சக்திவாய்ந்த பங்காளியாக உருவாகி வருகிறது.

AI-அடிப்படையிலான வகைப்படுத்திகள் படங்களையும் கதிர்களையும் விரைவாக பகுப்பாய்வு செய்யகின்றன, துல்லியத்தன்மையை மேம்படுத்துகின்றதோடு பகுப்பாய்வு நேரத்தைக் குறைக்கவும் உதவுகின்றன (Hufnagl et al., 2019; Xie et al., 2023).

இவை எதிர்காலத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன?

விஞ்ஞானிகள் ஒரு செய்தியை ஒப்புக்கொள்கிறார்கள்: நுண் நெகிழிகள் மற்றும் மீநுண் நெகிழிகள் இனி தொலைதூர அச்சுறுத்தல்கள் அல்ல – அவை ஏற்கனவே நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.

அவற்றின் நிலைத்தன்மை, இயக்கம் மற்றும் உயிரினங்களுடனான தொடர்பு ஆகியவை கீழ் குறிப்பிடப்பட்டவற்றுக்கான அவசரத் தேவையை உணர்த்துகின்றன

1. சிறந்த கழிவு மேலாண்மை

2. கடுமையான விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் (Casella et al, 2024)

3. தரப்படுத்தப்பட்ட உலகளாவிய சோதனை நெறிமுறைகள்

4. மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்களில் முதலீடு

5. பொது விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம்

நுண் நெகிழிகள் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவற்றின் தாக்கம் மிகப்பெரியது.

கற்பவற்றவற்றையும், அறிந்தவற்றையும் புரிந்துகொள்வது முதல் படி – அந்த அறிவில் செயல்படுவது அடுத்த படி.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” [அதிகாரம் – கல்வி, குறள் – 391] என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,

கல்வி அறிவோடு மட்டும் நின்றுவிடாது வாழ்வியலிலும் நெகிழியின் பாவனையை குறைக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்படுவோம்.

கலைவிழி வரதநாதன்
உதவி விரவுரையாளர், விலங்கு விஞ்ஞானத்துறை
விவசாய பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.