;
Athirady Tamil News

உலக ஒழுங்கும் முஸ்லிம்களும்

0

மொஹமட் பாதுஷா

உலகில் நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற போது, உலக ஒழுங்கு ஏதோ ஒரு வகையில் மாறி வருவதை உணர்ந்து கொள்வது
கடினமான காரியமல்ல.

உலக ஆதிக்க அரசியலை ஆட்டிப்படைக்கின்ற நாட்டாமைகளின் கைகளில் இன்னும் பலமுள்ளது. அண்மையில் கூட, பலஸ்தீனம் தொடர்பான தீர்மானத்தை வீட்டோ மூலம் அமெரிக்கா நிராகரித்திருந்தது.

உலகம் பொதுவாக வலியுறுத்துகின்ற விடயங்களைக் கூட ஏற்றுக் கொள்ளாத ஆட்சியாளர்களும், அரசாங்கங்களும் இருக்கவே செய்கின்றன.
இலங்கை உட்பட பல உலக நாடுகளில் நடக்கின்ற ஆட்சி மாற்றங்கள் முதல் சிறிய சம்பவங்கள் வரை எல்லாவற்றுக்கும் பின்னால் நாட்டாமைகளின் அரசியல் இருந்தது, கொண்மே இருக்கின்றது.

இருந்த போதும், நவீன ஊடகங்களின் வளர்ச்சி, பூகோளமயமாக்கம், அறிவார்ந்த சமூகத்தின் சிந்தனை போன்ற காரணங்களினால், ஆட்சியாளர்களின் மீது மக்கள் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு நிலைமைகள் மாறி வருகின்றன.

தம்முடைய நிலைப்பாடு எதுவாக இருந்த போதிலும், தங்களது இராஜதந்திரம் என்னவாக இருந்தபோதும், மக்கள் என்ன நினைக்கின்றார்களோ அந்த ஒழுங்கில் ஆட்சியாளர்களும் பயணிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழல் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளது என்று கூறலாம்.

உதாரணமாக, ஐ.நா. கூட்டத்தொடரின் அமெரிக்க ஜனாதிபதிக்கு நடந்த சம்பவங்களும், இஸ்‌ரேலின் தெதன்யாஹூ பேசத் தொடங்கிய போது கணிசமான நாட்டுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் மண்டபத்தை விட்டு வெளியேறியதும் இந்த மாற்றத்தின் உந்துதலால் நிகழ்ந்தவை என்றும் குறிப்பிடலாம்.

எனவே, இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றும் அளவுக்குக் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எல்லா அரபு நாடுகளிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் கூட
இந்த தேவை உணரப்படுகின்றது.

தமிழ்ச் சமூகம் இந்தப் போக்கை ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர்.அரபுலகிலுள்ள ஆட்சியாளர்கள், ‘இஸ்லாத்தின் கொள்கைகளை கடைப் பிடிக்கின்றோம்’ என்று சொல்லிக் கொண்டு, இருந்தால் மட்டும் போதாது. நீதிக்காகக் குரல் கொடுக்கவும், அநீதிகளுக்கு எதிராக போராடவும் முன்வர வேண்டும். இது இலங்கை முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.

காசாவில் நடக்கின்ற மனிதப் பேரவலத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் மட்டுமன்றி, அமெரிக்காவின் சில மூலை முடுக்குகளில் கூட ஒன்று கூடுகின்ற வெள்ளைக்காரர்களுக்கு இருக்கின்ற உணர்வு கூட, அரபுரலக ராஜாக்களுக்கு இல்லாதிருக்க முடியாது.

இது இஸ்லாத்தின் பண்பும் அல்ல. உலகில் இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் பலமான ஒரு சமூகமாக வாழ்கின்ற போதிலும் கூட, நசுக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிராக அந்தக் கூட்டுப்பலம் முன்னிற்கவில்லை. காசாவில் கவச வாகனத்திற்கு முன்னால் ஒரு கூழான் கல்லோடு நிற்கின்ற சிறுவனை விட, முஸ்லிம் நாடுகளின் மொத்தப்பலமும் பெரியதாக தெரியவில்லை.

இதே நிலைமைதான் இலங்கையிலும் காணப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களிடையே பொதுவான விவகாரங்களைப் பொறுத்தமட்டில் மத, பிராந்திய, சாதி அடிப்படையில் முரண்பாடுகள் இல்லை எனலாம்.

ஆனால், அரசியல் அடிப்படையில் உள்ள முரண்பாடுகள் சமூகத்தின்
கூட்டுப் பலத்தை உறுதி செய்வதறகு பெரும் தடையாக உளளன.முஸ்லிம் கட்சிகள் என்று ஒரு தரப்பும், பெரும்பான்மைக் கட்சிகள் என்று ஒரு தரப்பும் பிரிந்து நின்று முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள்கின்றன. அதுவும், என்.பி.பி. கட்சிசார் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் என்பது ‘எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான’ ஒன்றாக உருவெடுத்திருக்கின்றது.

ஆனால், மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் யாருமே உலகில் அல்லது நாட்டில் மக்கள் சார்பு ஒழுங்கில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை தமது சமூகத்திற்காக பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முன்வரவில்லை என்பது பட்டவர்த்தனமானது.

எங்கள் நிலைப்பாடுதான் சரி, எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம், ஒரு அறிவிலி வட்டத்திற்குள் அவர்களைக் கட்டிப்போட்டுள்ளது.உதாரணமாக, இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள், அபிலாஷைகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயப் பரப்புக்களில் ஒரு சமூகமாக முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பான ஒரு கூட்டு ஆவணம் அல்லது வேலைத்திட்டம் முஸ்லிம் அரசியல் தரப்பினரிடம் கைவசம் இல்லை.

ஆட்சியாளர்களிடம் கூட்டாகப் பேசி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து
வைப்பதற்கான முனைப்புகள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் எடுக்கப்படுவது குறைந்து விட்டது,அதேநேரம், கட்சி சார்பு அரசியலை விட்டு வெளியில் வந்து சமூகம் சார்ந்த விடயங்களை உலகின் கண்களுக்கு முன்வைக்கின்ற போக்கும் முஸ்லிம் சமூகத்திற்குள் இல்லாமலேயே போய்விட்டதெனலாம்.

குறிப்பாக, போரினால் பாதிப்புற்ற மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்ட நாடுகள். நிலப் பரப்புக்களைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை என்பது உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியதா? என்பது நிச்சயமில்லை.. உலக ஒழுங்கை மீறிச் செயற்படும் தரப்புக்களும், கட்டுக்கடங்காத உலக நாட்டாமைகளும், ஆட்சியாளர்களும், அமைப்புக்களும் இருக்கின்ற சூழலில், அது நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.

இருப்பினும், ஐ.நாவைப் போல, மனித உரிமைப் பேரவையும் வேறு பல மனித உரிமை சார் உலக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதோ ஒரு புள்ளியில் ஆறுதலாக இருக்கின்றன. இப்படியாவது நமக்காகப்
பேசுவதற்கு ஒரு தளம் இருக்கின்றது என்ற நிம்மதியை அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றன என்பதை மறுக்கவியலாது.

இந்தப் பின்புலத்தில், உள்நாட்டு முஸ்லிம்களின் விடயங்களைச்
சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் முஸ்லிம் சமூகம் ஒரு அடியைக் கூட முன்னெடுத்து வைக்கவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று, நமது பிரச்சினைகளை உள்நாட்டுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளாமல், வெளித் தரப்பை நாடுவதால் பயனில்லை. அது தேசிய ஒற்றுமைக்கு நல்லதல்ல என்ற அபிப்பிராயத்தை பல முஸ்லிம் அரசியல்வாதிகள் கொண்டுள்ளனர். இதில் நிறையவே நியாயங்கள் உள்ளன.

இரண்டாவது காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தின் தயார்நிலை இல்லாத தன்மையாகும். அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் புலம்பெயர் முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து
செயற்படுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் அவற்றின் வரலாறு பற்றி அறிந்த பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது பதவியில் இல்லை. இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் ஆவணங்கள், வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை.
பிரச்சினைகள் பற்றிய சரியான புரிதல் கிடையாது. எனவே சமூகத்தின் பிரச்சினைகளை பொதுத் தளத்தில் முன்வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதில்லை.

தமிழர்கள் சர்வதேச சமூகத்தை நம்பி எதனைச் சாதித்தார்கள் என்று கேட்டால், பதில் இல்லை. ஆனால் அவர்களது முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைகளை உலக அரங்கிற்குக் கொண்டு வந்துள்ளன.

ஆனால், குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயதக் குழுக்களால் இவ்வாறான மீறல்கள் இழைக்கப்பட்டன, இனவாதிகள், ஆட்சியாளர்களால் எவ்வாறான அநியாயங்களை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ளது என்று வெளியில் சொல்வதற்குக் கூட முஸ்லிம் சமூகம் முயற்சிக்கவில்லை.

இந்த முறையும் ஜெனீவா கூட்டத்தொடரில் எல்லா விவகாரங்களும் பேசப்பட்டன. ஆனால், இலங்கை முஸ்லிம்களின் விவகாரம் மட்டும் எந்த இடத்திலும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை என்பது இதற்கு இன்னுமொரு உதாரணமாகும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றவர்கள் தொடக்கம் சாதாரண முஸ்லிம் பொதுமகன் வரை ஒட்டுமொத்த சமூகத்திடமும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

உலக ஒழுங்கில் மாறிவருகின்ற நிலைமைகளைப் புரிந்து கொண்டு சர்வதேச அரங்கிலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசாமல், உள்நாட்டில் அரசாங்கத்துடனும் பேசி தீர்வு காணாமல் இருப்பதன் மூலம், கடைசியில் செய்யப் போகின்றீர்கள்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.