பால்கனியில் அமர்ந்திருக்க 16 மில்லியன் செலவழித்த ரணில் ; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
நாட்டில் கடந்த வருடம் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் உருவாக்கிய சம்பவமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அமைந்திருந்தது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது இடம்பெற்றிருந்தது.
பால்கனியில் ரணில்
இந்நிலையில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பால்கனியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்குகொள்ளவா 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணம் வீணடிக்கப்பட்டது என்ற கேள்வியும் வலுத்துள்ளன.
இவை இவ்வாறிருக்கையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் நடைபெற்று வரும் விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் முடித்து வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் நேற்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விஜயம் ஒரு உத்தியோகபூர்வ விஜயம் என நிரூபிக்க முயன்ற போதிலும், பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்போ அல்லது தலையீடோ அதற்கு இருக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ஒரு தனியார் நிறுவனம் எனவும் முறைப்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதி கூண்டில் அமர்ந்திருந்த முநை முதற்கொண்டு அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டு பின்னர் உடல்நிலை குறித்து முன்வைக்கப்பட்ட விடயங்கள் வரை நீதிமன்றத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.