;
Athirady Tamil News

இந்தியத் தலையீடா?

0

முருகானந்தன் தவம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு, அதனடிப்படையில் இரண்டு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்துள்ளதுடன், புதிய அமைச்சர் ஒருவரையும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.

மேலும், 5 பிரதி அமைச்சர்களின் பிரதி அமைச்சர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய ஜே.வி.பி.யின் தேசிய அமைப்பாளராகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இதுவரையில் பதவி வகித்த பிமல் ரத்நாயக்கவிடமிருந்து சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அமைச்சுப் பதவி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர அபிவிருத்தி அமைச்சு இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிமல் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அமைச்சு அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த அனுர கருணாதிலக, புதிய அமைச்சரவை மறுசீரமைப்புக்கு
அமைய துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்

அத்துடன், அனுர கருணாதிலகவிடம் இருந்து நீக்கப்பட்ட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு பதவிக்கு பிரதி அமைச்சராக பதவி வகித்த வைத்தியர்
எச்.எம்.சுசில் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சுசில் ரணசிங்க வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, முன்னர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜயவீர மற்றும் எம்.எம்.ஐ.அர்கம் உள்ளிட்டோர் புதிதாக பிரதி அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் 22ஆக காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதுடன், 28ஆக காணப்பட்ட பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசின் இந்த முதல் முறையான அமைச்சரவை மாற்றத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்குரியவரான பிமல் ரத்நாயக்கவிடமிருந்து முக்கிய இரு அமைச்சுக்கள் மீளப் பெறப்பட்டுள்ளமை அல்லது பறிக்கப்பட்டுள்ளமைதான் தற்போது அரசு மட்டத்தில் பல்வேறு அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பிமல் ரத்னாயக்க அரசுக்குள் சர்ச்சைக்குரியவராகவும் பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தனம் மிக்கவராகவும் பதவி ஆசை கொண்டவராகவும் அதேநேரம், இனவாத சிந்தனைமிக்கவராகவும் பிரதமர் பதவியை பெறுவதற்காக உள் வீட்டு கலகம் செய்து வருபவராகவும், சட்டவிரோதமாக 323 கொள்கலன்கள் விடுவிப்பு சர்ச்சையில் சிக்கியவராகவும், குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்த

ஜே.வி.பியில் தனது மனைவியையும் எம்.பியாக்கி அழகு பார்த்தவராகவும், இந்தியாவுடன் பகையுடனும் வடக்கு அபிவிருத்தியில் இனவாத சிந்தனையுடனும் செயற்படுபவராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர்.இவ்வாறான நிலையில்தான்

ஜே .வி.பி. (தேசிய மக்கள் சக்தி) அரசில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் பாராளுமன்ற சபை முதல்வரும் போக்குவரத்து,
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்,சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் இருந்து சர்ச்சைக்குரிய துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் ஆகிய இரு அமைச்சுக்கள் மீளப்பெறப்பட்டு நகர அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிமல் ரத்நாயக்கவுக்கு பிரதமர் பதவியே இலக்காக இருந்தபோதும், ஜே .வி.பியின் பிரதியான தேசிய மக்கள் சக்தி மற்றும் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான ஹரிணி அமரசூரியவையே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் பிரதமராக நியமித்துள்ள நிலையில், பாராளுமன்ற சபை முதல்வராகவும் அமைச்சராகவும் முக்கிய பதவிகள் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டு அமைதிப்படுத்தப்பட்டார்.

எனினும், பிமல் ரத்நாயக்க பிரதமர் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டுமென
ஜே.வி.பியின் சில முக்கியமானவர்களுடன் இணைந்து கட்சித் தலைமைக்கு
நெருக்கடி கொடுத்து வருகின்றார்.

கட்சிக்குள்தான் நெருக்கடி கொடுக்கின்றார் என்றால், சபை முதல்வர் என்ற கோதாவில் சர்வாதிகாரத்தனமாக அவர் பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கும் தொல்லைகள், நெருக்கடிகள், அடாவடித்தனங்கள் அடக்கு முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வாறான நிலையில், எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறையிடும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் உரிமைகளை பாராளுமன்றத்தில் சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க முடக்கினார்.

அதுமட்டுமன்றி, அமைச்சராகவும் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே நடந்து கொண்டார். இதனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் கீழ் பணியாற்ற வந்த பல அதிகாரிகள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யும் நிலையும் தற்போது வரை தொடர்கின்றது.

அதுமட்டுமல்ல, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவப்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட 323 கொள்கலன்களை எவ்வித பரிசோதனைகளுமின்றி
விடுவித்த சர்ச்சையில் துறைமுகங்கள் அமைச்சராகவும் இருந்த பிமல் ரத்நாயக்கவே பிரதான நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பினால் அனுரகுமார அரசு பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதுடன், எதிர்கட்சிகளினால் கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டும் வருகின்றது. அக்கொள்கலன்கள் சிலவற்றில் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதனால் கட்சித் தலைமை பிமல் ரத்நாயக்க மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளது ஜே .வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் வெளிநாட்டுக் கொள்கையில் குழப்ப நிலை இருந்து வரும் நிலையில்,

சீனா-இந்தியாவுடனான உறவில் கத்தி மீது நடக்கும் நிலையிலேயே அனுரகுமார அரசு இருந்து வருகின்றது. ஆனால், சீன சார்பு கொள்கையுடைய ஜே.வி.பியின் முக்கியஸ்தரான பிமல் ரத்நாயக்க, இந்தியாவை பகிரங்கமாகவே எதிர்த்தார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் முரண்பட்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வு, இராப்போசன விருந்துபசாரம் போன்றவற்றை ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முக்கிய அமைச்சர்கள் புறக்கணித்தனர். அதில் இவரும் ஒருவர்.

அதுமட்டுமன்றி, கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டத்தில், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, அதானியின் கொழும்பு
மேற்கு துறைமுக அபிவிருத்தி, திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்திய பிரதமர் வரும்போது வெளியிடலாமென்று பேசப்பட்டபோது, அவற்றையெல்லாம் நிராகரித்து, அப்படிச் செய்யமுடியாதென கூறி, அந்த கூட்டத்தில் இருந்து ஜே.வி.பி. அமைச்சர் ஒருவர் நடப்பு செய்திருந்தார் என செய்திகள் வெளி வந்திருந்தன.

தற்போது அவ்வாறு இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வெளிநடப்பு செய்தவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க என்ற தகவல்கள் வெளிவருகின்றன .

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி ஆகிய இரண்டையும், நான்கு மாதத்திற்குள் நிறைவு செய்து காட்டுவோம் என்று முன்னர் அறிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இன்று இவை இரண்டையும் அபிவிருத்தி செய்ய மாட்டோம் என அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்தே பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் பாராளுமன்றத்திலும் இதனை உறுதிப்படுத்தினார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய உதவியாக வழங்க முன்வந்த
63 மில்லியன் டொலர்களையும் அவர் நிராகரித்தார். இதனால் இந்திய
தரப்புக்கள் அமைச்சர் பிமலரத்நாயக்க மீதும் அரசு மீதும் கடும் அதிருப்தி கொண்டிருந்தன.

இதன் ஒரு கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இந்திய விரோத செயற்பாடுகள் தொடர்பில் இந்திய தூதுவர் மட்டத்தில் ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னர் தற்போது துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றுள்ள அனுர கருணாதிலகவுடன் இந்திய தூதுவர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சு பதவி பறிப்பில் இந்தியா பின்னணியில் இருந்ததாகவும்
தகவல்கள் உள்ளன.

தற்போது தகவல்கள் வெளிவரும் நிலையில், அது தொடர்பில் அரசு தரப்பு மறுத்து வந்தாலும், இந்திய தூதரக வட்டாரங்களோ இந்திய அரசு தரப்புக்களோ எந்த வித மறுப்புக்களையோ விளக்கங்களையோ வெளியிடாமை இந்த தகவலை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.