;
Athirady Tamil News

அனர்த்தங்களைப் புரிந்து கொண்டு கூட்டாக மீண்டெழ வேண்டிய காலம்

0

மொஹமட் பாதுஷா

நாட்டில் மீண்டுமொரு இயற்கைப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது. ‘டிட்வா’ புயல் என தொடங்கி வடக்கு, கிழக்கில் மழையாகவும் பின்னர் மலையகத்தில் மழையுடன் நிலச்சரிவாகவும், தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்காகவும் ஒருசில நாட்களுக்குள்ளேயே இந்த அனர்த்தம் கணக்கிட முடியா அழிவுகளையும் சொல்ல முடியா இழப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுவரை காலமும் இலங்கை சந்தித்திராத விதத்தில், மலைநாடு, கரையோரம் என நாடு தழுவிய அழிவொன்றை இயற்கை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது. மரணங்களையும், அழிவுகளையும் இன்று வரை சரியாக இற்றைப்படுத்த முடியாதபடி இழப்புக்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

இந்த கட்டுரை எழுதப்படும் வரை 627 மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. தேடப்படுகின்ற 300 மேற்பட்டவர்களில் கணிசமானோரும் இந்தப் பட்டியலில் உள்வாங்கப்படக் கூடும். 17 இலட்சம் மக்களை நேரடியாக இது பாதித்துள்ளது. சுமார் 50 ஆயிரம் வீடுகள், வதிவிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அநேகமானவை சுக்குநூறாக சிதைவடைந்துள்ளன. வாகனங்கள், கடைகள், பொதுச் சொத்துக்கள், விளை நிலங்கள் என அழிந்தவற்றுக்குக் கணக்கில்லை.

இன்னும் நிவாரணப் பணிகளும், அதிகாரிகளும் சென்றடையாத அளவுக்கு துண்டிக்கப்பட்ட கிராமங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அப்படியானால், உண்மையான இழப்புக்கள் நிச்சயம் இதைவிடக் கூடுதலாகவே இருக்கும்.

நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில், கடல் சுனாமிப் பேரலையாக உருவெடுத்து இவ்வாறு ஊருக்குள் புகுந்து ஒரு கோரத் தாண்டவத்தை ஆடியதோ, அதுபோலவே நீரும் நிலமும் நம்ப முடியாத விதத்தில் மலைப் பாங்கான பிரதேசத்திலும் மட்டமான நிலத்திலும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இயற்கையின் முன்னே, அதாவது இறைவனின் பார்வையில் மனித தொழில்நுட்பமும் அறிவியலும் விஞ்ஞானமும் எதுவுமே செய்ய முடியாதபடி கைக்கட்டி, ஸ்தம்பித்து நின்றதை நாம் கடந்த 10 நாட்களும் மீண்டும் ஒருமுறை அனுபவத்தில் கண்டோம்.

இலங்கை வரலாற்றில் அரசியல் குழப்பங்கள், இனவாத நெருக்கடிகள், மோதல்கள் கடந்த நூறு வருடங்களாகத் தொடராக நடந்து வருகின்றன. அதேபோல், 20 தொடக்கம் 25 வருடங்களுக்கு ஒரு தடவை நாட்டில் முழுமையாகவோ அல்லது பெருமளவுக்கோ சேதத்தை ஏற்படுத்தும் இயற்கை பேரிடர் ஒன்று நடந்ததற்கான சான்றுகள் உள்ளன.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 21 வருடங்களில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2021 கொரோனா தொற்று, 2022 பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளால் துவண்டு போயிருந்த நாடு, மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்ற ஒரு காலகட்டத்தில் இந்தப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது.

இது இலங்கைக்குப் பல விதத்திலும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீள்வது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனாலும், அதனைச் செய்வதுதான் காலத்தின் கடப்பாடாகும்.

மழை, வெள்ளம், மண் சரிவு, மலைச் சரிவு, சகதி கலந்த வெள்ளப் பெருக்கு, ஆறுகள் கரைபுரண்டமை, நீர்த்தேக்கங்கள் திறந்து விடப்பட்டமை போன்ற பலதரப்பட்ட காரணங்களினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கின்றது.

மலையகத்திலும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் மக்கள் தொடர்பாடல், மின்சாரம், இணைய வசதியின்றியும் அவதிப்பட்டனர்.

குறிப்பாக, பலர் தமது உறவினர் உயிருடன் இருக்கின்றனரா? என்பதைக் கூட தொடர்புகொண்டு அறிய முடியாதபடி தொடர்பாடல் துண்டிக்கப்பட்டமை பல்வேறு தாக்கங்களை உண்டுபண்ணியது எனலாம்.

இதற்கு முன்னர் ஒருபோதும் மண்சரிவு ஏற்பட்டிராத இடங்களிலும் மண்சரிவு இடம்பெற்றிருக்கின்றது. நினைத்துப் பார்த்திராத இடங்களில் நீர் ஆறுபோல் ஓடியிருக்கின்றது. கற்பனை கூட செய்ய முடியாத உயரமான பிரதேசங்களிலும்
கூட 10 -15 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற தடம் உள்ளது.

சில பிரதேசங்களில் ஒரு சில நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்ததாக மக்கள் கூறுகின்றன. இதுபோல, வெள்ளத்தையும், அழிவுகளையும் நாம் இதுவரைக் கண்டதில்லை என்றுமுதியவர்கள் சொல்கின்றார்கள்.

எது எவ்வாறிருப்பினும், கெட்டதிலும் ஒரு நல்லது நடந்த கதையாக இலங்கைச் சமூகங்களுக்கு இடையிலான மனிதாபிமான உறவு இப்போது மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இன, மத, குல, பிரதேச பேதங்கள் இன்றி எல்லா
மக்களும் மனிதாபிமானத்தின் பெயரால் தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வதைக் காண முடிகின்றது.

என்னதான் இனவாதமும் அரசியலும் மக்களைப் பிரித்தாலும் கூட, இயற்கை மக்களை ஒரே கண்ணோட்டத்திலேயே நோக்குகின்றது என்பதையும். இயற்கையாகவே அதாவது அடிப்படையில் இலங்கை மக்களின் மனிதப் பண்பு எல்லாவற்றையும் விடப் பலமான வெள்ளம் என்பதையும் கண்கூடாகக்
கண்டு கொண்டிருக்கின்றோம்.

எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி இப்படியொரு நிலை ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், மீண்டெழுவதற்கான ஒரு கூட்டு முயற்சியுமே இப்போது தேவையாகவுள்ளது.

சமகாலத்தில், காலநிலை, புவியியல் சார்ந்த அனர்த்தங்கள் விடயத்திலும் பொறுப்புடனும் விழிப்புடனும் நடந்து கொள்வதால் இழப்புக்களைக் குறைத்துக் கொள்வது நம்மால் முடியுமாக இருக்கும்.

உலகப் பந்தில் நடக்கின்ற மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அமைந்துள்ள புவித் தட்டுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள், புவி வெப்பமடைதல், ஓசோன் படல தாக்கங்கள், இயற்கையை மாற்றியமைப்பதால் ஏற்படும் விளைவுகளில் சாதாரண மக்களும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

காலநிலை, வானிலை எதிர்வு கூறல்கள் நிலம், நீர் சார்ந்த விடயங்களுடன் கூட்டிணைக்கப்பட வேண்டும். உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். குறிப்பாக மக்கள் அரசாங்கம் விடுகின்ற அறிவுறுத்தல்களை மிகவும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

இம்முறை, மலைப்பாங்கான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது ஒருபுறமிருக்க உயரமான இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதுபோல தலைநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இலங்கைச் சூழலில் இயற்கை அழிவுகளுக்கு எந்த வகையான நிலப் பரப்பும் விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே நாம்தான் இயற்கைக்கு ஒத்திசைவாகவும், பாதுகாப்பான முறையிலும் வசிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

மலைப் பிரதேசங்களில் ஆபத்தான இடங்களில் வீடுகளைக் கட்டுவதை
மக்கள் முற்றாகக் கைவிட வேண்டும். நிலமற்ற மக்களுக்குப் பாதுகாப்பான இடத்தில் நிலத்தை வழங்க அரசாங்கம் நடவடிககை எடுக்க வேண்டும்.

கட்டிட அகழ்வாராய்ச்சி சார்ந்த அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தி ஒப்புதல்களை வழங்குவதுடன் புவியியல், அனர்த்த முகாமைத்தவம் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தொடராகக் கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீர் வழிந்தோடும் பகுதிகளை மறித்துக் குடியேற்றத் திட்டங்களும் அபிவிருத்தி திட்டங்களும் அமைக்கப்படக் கூடாது. முறையற்ற திட்டமிடலுடன் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

வாய்க்கால்களை, குளங்களை, நீரேந்து பகுதிகளில் மண்ணைப்
போட்டு நிரப்புகின்ற பொதுமக்கள், பண முதலைகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் இலஞ்சத்திற்காக ஒப்புதல் வழங்கும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

இயற்கையின் ஒழுங்கிற்குச் சவாலான திட்டங்களை முன்மொழிவோரும் அதற்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரிகளும் ஒரு பேரழிவுக்கு வித்திடுகின்றார்கள் என்ற அடிப்படையில் ஈவிரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.

தமது கிராமத்தில் நடந்த, நடக்கும் ஒவ்வொரு நிர்மாணம் தொடர்பிலும் பொதுமக்கள் கவனமாகச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கின்றது. எனவே, இது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.

2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது, இலங்கை இனி மீள முடியாது என கூறப்பட்டது. 30 ஆயிரம் உயிர்களையும் உடமைகைளயும் இழந்த நாடு
இனி பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என சொன்னார்கள்.
அதுபோலவே, கொரோனா, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலும் இலங்கை இனி எத்தியோப்பியா ஆகிவிடும் என்று சொன்னவர்களும் உள்ளனர்.

ஆனால், இதனையெல்லாம் இந்த நாடும் மக்களும் கடந்து வந்திருக்கின்றனர். எப்பாடுபட்டாவது இலங்கையர் என்ற கூட்டு உழைப்பின் மூலம் நாடு மீட்சி பெற்றதை மறுக்க முடியாது. அப்படியான ஒரு புள்ளியிலேயே இப்போது இலங்கை மீண்டும் வந்து நிற்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.