;
Athirady Tamil News

ஸ்டெராய்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்- கொரோனா சிகிச்சையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!

0

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டெராய்டு மருந்துகள் வழங்குவதை டாக்டர்கள் தவிர்க்க வேண்டும். ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் சீக்கிரமாக பயன்படுத்துவது, அதிக டோஸ் அல்லது தேவையானதை விட அதிக நேரம் பயன்படுத்தும் போது கருப்பு பூஞ்சை போன்ற 2-ம் நிலை நோய் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் நோயாளிகள் காச நோய் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா சிகிச்சை முறை லேசான, மிதமான மற்றும் கடுமையான என 3 வகையில் பிரிக்கப்பட்டு உள்ளது. மூச்சுத்திணறல் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் லேசான பாதிப்பில் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பரிசோதனை

அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதே வேளையில் லேசான அறிகுறி ஏற்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் சிரமம் அல்லது 5 நாட்களுக்கு மேல் கடுமையான இருமல் இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

90 முதல் 93 சதவீதம் இடையே ஏற்ற இறக்கமான ஆக்சிஜன் செறிவூட்டலுடன் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படலாம். அவர்கள் மிதமான பாதிப்பு கொண்டவர்களாக கருதப்படுவார்கள். அது போன்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

நிமிடத்துக்கு 30-க்கு மேல் சுவாச விகிதம், மூச்சுத் திணறல் அல்லது 90 சதவீதத்துக்கு குறைவான ஆக்சிஜன் செறிவூட்டல் உள்ளவர்களை கடுமையான பாதிப்பு என்று கருத வேண்டும். அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டும்.

மிதமானது முதல் கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு இல்லாதவர்களுக்கும் அறிகுறிகள் தோன்றிய 10 நாட்களுக்குள் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட மருந்துகள் அல்லது ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

அதேவேளையில் ஆக்சிஜன் ஆதரவு இல்லாமல் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், நிதிஆயோக் உறுப்பினரும், கொரோனா தடுப்பு பணிக்குழு தலைவருமான வி.கே.பால் கூறும் போது, ‘கொரோனா 2-வது அலையின் போது ஸ்டெராய்டு மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஸ்டெராய்டு போன்ற மருந்துகளின் அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாடு குறித்த தனது கவலையை அவர் வெளியிட்டிருந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.