;
Athirady Tamil News

‘சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது’ – ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்..!!

0

சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் தொடர் குற்றச்சாட்டு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதல்முறையாக, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளன. இந்தக் கடிதத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஸ்டிரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மத்தியில் ஆளும் மோடி அரசு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து, தீவிரமாக தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
* இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும்.
* சட்டம், சட்டமாகத்தான் இருக்க வேண்டும். அச்சமின்றி, சாதகமின்றி, செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது செய்யப்படுவதுபோல, தன்னிச்சையாக, தேர்ந்தெடுத்த நபர்கள் மீது, முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது நியாயமின்றி அதைச் செயல்படுத்த முடியாது.
* இப்படிச்செய்வதின் முக்கிய நோக்கம், அவர்களின் புகழை அழிப்பதும், பா.ஜ.க.வை கொள்கைரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கிற சக்திகளை பலவீனப்படுத்துவதும்தான்.
* மேலும், அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தின் பெருக்கம், வாழ்வாதாரம் இழப்பு, வாழ்க்கை-சுதந்திரம்- சொத்துக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்தல் ஆகிய அன்றாட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பு போன்ற பிரச்சினைகளில் உடனடி விவாதம் நடத்த விடாமல் மோடி அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.