;
Athirady Tamil News

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா?- மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை..!!

0

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்பு கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இதற்கிடையே கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

அதே நேரம் ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். ராகுல் காந்தியின் மவுனத்தை தொடர்ந்து உட்கட்சி தேர்தலை நடத்தி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மேலிடம் அக்டோபர் 17-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு வெளியானதும் கேரளாவை சேர்ந்த சசிதரூர் எம்.பி. ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியானது.

தலைவர் பதவிக்கு போட்டி எழுந்ததை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகல்கள் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை நியமிக்க கோரி மாநில கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டால், தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி கொள்வதாக சசிதரூர் திடீரென அறிவித்தார்.

அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலும், அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வந்தார். இந்த யாத்திரை தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதயாத்திரையை ஒரு நாள் நிறுத்திவிட்டு உடனடியாக டெல்லி வருமாறு ராகுல் காந்திக்கு சோனியா அழைப்பு அனுப்பினார். இதையடுத்து நாளை மறுநாள் (23-ந் தேதி) ராகுல் டெல்லி செல்ல உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் 24-ந் தேதி தொடங்க இருப்பதால், ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் ராகுலை தலைவராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதால் அவர்களின் விருப்பப்படி ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அவசர ஆலோசனையில் இறங்கி உள்ளனர். ராகுல் காந்தி டெல்லி சென்று, சோனியாவை சந்தித்த பின்னரே இது தொடர்பான உண்மை நிலவரம் தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.