;
Athirady Tamil News

யாழ்ப்பாண கிணற்று நீரை குடிக்கலாமா ? ஆய்வு செய்து அறிவிக்க கோரிக்கை!!

0

யாழ் குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் ஆய்வு ரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் கேரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது.

அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது.

கடந்த சில காலத்திற்கு முன்பாக கிணற்று நீரில் ஒயில் கலந்துவிட்டது, நீர் மாசடைந்து விட்டது மற்றும் ஊற்றுக்கள் பயனற்றுவிட்டது என பல போராட்டங்கள் கலந்துரையடல்கள் என தொடர்சியாக இடம்பெற்றது. தற்போது இவை அமைதியாகிவிட்டது.

இதனை பயன்படுத்தி அன்று ஆரம்பித்த தண்ணீர் போத்தல் வியாபாரம் இன்று மரணசடங்குகள், வீட்டுவிழாக்கள், கலை நிகழ்வுகள் மற்றும் மண்டப விழாக்கள் என அனைத்து இடங்களிலும் கொடிகட்டி பறக்கிறது. போத்தல் தண்ணீரை பயன்படுத்தலாமா எங்கு எப்படி தயாராகுறது இவைதொடர்பில் வெளிப்படுத்தல்கள் இருக்கின்றனவா?

ஆரம்ப காலங்களில் ஆலயங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீரை விரும்பி குடிப்பார்கள் அதனை தீர்த்தம் என்றே குடிப்பார்கள். வீடுகளிலும் அவ்வாறே கிணற்றுநீரை பயன்படுத்தினார்கள்.

யாழ்ப்பாணத்து கிணற்று தண்ணீர் என்றாலே விரும்பி குடித்த காலம் மாறிவிட்டது. இன்று கிணற்றில் தண்ணீர் அள்ளினாலே பிரச்சினை என்கிறார்கள்.அந்தளவிற்கு போத்தல் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்து பணம் வீண்விரயமாகி வருகிறது.

எனவே யாழ்ப்பாணத்து கிணற்று நீரை பயன்படுத்தலாமா இல்லையா என்பது பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானத் துறையை சார்ந்தவர்கள், விவசாயத் துறைசார்ந்தவர்கள், பொருளியல் துறைசார்ந்தவர்கள், அரசியல் பிரதிநிதிகள் ஒன்று கூடி குடாநாட்டின் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தலாமா என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு சாதக பாதகங்களை அறிவிக்க வேண்டும்.

உண்மையாகவே மக்களின் பணத்தில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்ற உணர்வு இருந்தால் இந்த தேசமக்கள் மீது உணர்வு இருந்தால் தண்ணீருக்காக குரல் கொடுக்கவேண்டும்.

யாழ் குடாநாட்டு தண்ணீர் பழுதடைந்து விட்டது என பலரும் குரல் கொடுத்தார்கள் என்ன நடந்தது. வடக்குமாகாண சபை இருந்தது. முதலமைச்சர் உட்பட பல பிரதிநிகள் இருந்தார்கள் என்ன செய்தார்கள் கிணற்று நீருக்கு முடிவுதான் என்ன? இது தொடர்கதையா?. எனவே குறித்தவிடயம் தொடர்பில் துறைசார்ந்தவர்கள் அக்கறை எடுத்து இதற்கான சரியான முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.