;
Athirady Tamil News

கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே!!

0

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் ‘ராஜபக்‌ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.