;
Athirady Tamil News

0

கலாநிதி ஜெகான் பெரேரா

தற்போதைய அரசாங்கம் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய கடப்பாட்டுடன் தெரிவு செய்யப்பட்டது.குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் இருந்து அவற்றை எதிர்பார்க்கிறது. அதன் காரணத்தினால்தான் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான வன்முறைச் செயல்களில் ஒன்றான 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டிருக்கிறது போலும்.

அந்த விசாரணைகள் தொடர்பிலான அண்மைய நிகழ்வுப் போக்குகளில் ஒரு கதை 279 பேரைப் பலியெடுத்த அந்த குண்டுவெடிப்புக்களில் பலியான ஆறு வயது சிறுமி ஒருத்தியின் தந்தை பற்றியது. ” அவள் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவளுக்கு 13 வயதாக இருந்திருக்கும்.

நீண்டகாலத்துக்கு உண்மையை அமுக்கி வைக்கமுடியாது. இப்போது அது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. எமக்கு முழுமையான உண்மையும் நீதியும் வேண்டும். எமது பிள்ளைகள் வீணாக இறந்ததாக போய்விடக்கூடாது”. என்று அவர் கூறியதாக செய்திகள் கூறின. அவரது வார்த்தைகள் தொடருகின்ற கவலையினதும் நினைவு மங்கிப்போக மறுப்பதனதும் வலியை உணர்த்தி நிற்கின்றன.

மற்றையவர்கள் செய்த அல்லது செய்யத் தவறியவற்றின் விளைவாக கொல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்குமுரியது. 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தபோது காணாமல்போன தங்களின் பிள்ளைகளுக்கு நடந்தது என்ன என்று கேட்பதற்காக வடக்கில் யாழ்ப்பாணத்திலும் ஏனைய நகர்களிலும் வருடக் கணக்காக வீதியோரங்களில் கூடிநிற்கும் தாய்மாரில் நீதிக்கான அந்த விருப்பத்தைக் காணமுடியும்.

கிழக்கில் 1990 செப்டெம்பர் 5 ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தற்காலிக அகதி முகாமிலிருந்து கூட்டிச் செல்லப்பட்ட 158 பேரும் திரும்பி வரவில்லை. அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்று இதுவரை தெரியாது.

ஆனால், அதிகாரத்தின் சூழ்ச்சித் திட்டங்களுக்குள் தனிப்பட்டவர்களின் அவலங்கள் மூழ்கடிக்கப்பட்டு விடுகின்றன என்பதே யதார்த்தமாகும். அரசாங்கங்களுக்கு அதிகாரத்தை தக்க வைப்பதில் அக்கறை. உறுதிப்பாடு, பொருளாதார மீட்சி அல்லது தேசியப் பெருமை ஆகியவற்றின் பெயரில் துன்பியல் அனுபவங்களை மறந்துவிடுமாறு சமூகங்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

இலங்கையில். பழைய வேதனைகள் மறக்கப்படவில்லை. கத்தாலிக்கத் திருச்சபையினதும் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களினதும் இடையறாத முயற்சிகளின் விளைவாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான கோரிக்கை மறைந்து போய்விடவில்லை. அலட்சியப்போக்கு, பகைமை மற்றும் அச்சுறுத்தல்களையும் தாண்டி அது நிலைத்து நிற்கிறது. இந்த கோரிக்கை தொடர்ந்து நீடிப்பதன் விளைவே ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைதைச் சாத்தியமாக்கியது.

அவரது கைது நடந்த அவலங்களை மறக்காமல் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். முன்னர் இராணுவப் புலனாய்வுக்கும் பிறகு அரச புலனாய்வு சேவைக்கும் தலைவராக இருந்த ஜெனரல் சாலேயின் கைது சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது. விடுதலை புலிகளின் கட்டமைப்புக்களை நிர்மூலம் செய்வதில் முக்கியமான பாத்திரத்தை வகித்ததாக பாராட்டப்படுகின்ற சாலே நாட்டின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் என்று கருதப்படுகிறார்.

நீடிக்கும் சந்தேகங்கள்

2019 ஏப்ரிலில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவையே தவிர, தீவிரவாத எண்ணம் கொண்ட இளைஞர்கள் சிலரால் ஏறுமாறாக செய்யப்பட்டவை அல்ல என்ற சந்தேகம் அவை இடம்பெற்ற நாளில் இருந்தே நீடித்து வந்தது. ” பெரியதொரு சதித்திட்டம் ” ஒன்று பின்னணியில் இருந்திருக்கிறது என்று ஆரம்பம் முதலிருந்தே விசாரணைகளில் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட சட்ட அதிகாரிகள் கூட சந்தேகப்பட்டார்கள்.

ஐ. எஸ். ஐ.எஸ். இயக்கத்தினால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உரிமை கோரப்பட்டதுடன் அதன் தலைவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். உலகளாவிய தத்துவார்த்த போராட்டம் ஒன்றின் அங்கமே இந்த தாக்குதல்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், நன்கு அறியப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் விடுதலை புல.களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட ஏன் கைது செய்யப்படவில்லை என்ற முக்கிய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த முஸ்லிம் தீவிரவாதிகள் விடுதலை புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் போர் முடிவுக்கு வந்த பின்னர் அவர்களின் தேவை இருக்கவில்லை. இந்தியாவில் இருந்து திரும்பத் திரும்ப விடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கைகள் ஏன் அலட்சியப்படுத்தப்பட்டன என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.

தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர்களின் கவனக்குறைவை கண்டுபிடித்ததற்கு அப்பால் கடந்த ஏழு வருடங்களாக அரசாங்கங்கள் நகருவதற்கு தவறின. விசாரணைகள் முடக்கப்பட்டதுடன் முக்கியமான கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை. புலனாய்வு சமூகத்திற்குள் இருக்கும் (சில அரசியல்வாதிகளின் ஆதரவுடனான ) பிரிவினர் விசாரணைகளை மலினப்படுத்துவதற்கு முயற்சித்தனரா என்று பாராளுமன்றக் குழுவொன்று கேள்வியெழுப்பியது.

பல அரசாங்கத் தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கவனக்குறைவாக நடந்து. கடமை தவறியதாக கண்ட உயர்நீதிமன்றம் பெருந்தொகை தண்டம் விதித்தது. அரசு அதன் குடிமக்களுக்கு தவறிழைத்துவிட்டது என்று தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், கவனக்குறைவு என்பது ஒரு விடயம்.

வேண்டுமென்றே உடந்தையாகச் செயற்படுவது வித்தியாசமானது. ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய உண்மை கண்டறியப்படும் என்று வாக்குறுதி அளித்துக்கொண்டே 2024 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது. பொறுப்புக்கூறவதாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவே பகிரங்கமாக உறுதியளித்தார்.

குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்க, பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட பல வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டதால், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் வேறு நாடுகளில் இருந்து புலனாய்வுச் சேவைகள் தங்களது சொந்த விசாரணைகளை நடத்துவதற்காக இலங்கைக்கு வந்தன. அமெரிக்கா மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்தது. வெளிநாட்டில் இருந்து சதித்திட்டத்தை வழிநடத்திய வெளிச் சூத்திரதாரி ஒருவரை சர்வதேச விசாரணைகள் இதுவரையில் அடையாளம் காட்டவில்லை. உள்நாட்டில் இழைக்கப்பட்டிருக்கக் கூடிய தவறுகள் அல்லது உள்ளுக்குள் இருந்துகொண்டே உடந்தையாகச் செயற்பட்டிருக்கக்கூடியவர்கள் மீதே கவனம் தொடர்ந்து குவிக்கப்படுகிறது.

உண்மையில், விடுதலை புலிகளை நிர்மூலம் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தை வகிதததாக பரவலாக பாராட்டப்படுகின்ற முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவரை கைது செய்ததன் மூலம் அரசாங்கம் கணிசமான அரசியல் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த கைதை பாதூகாப்பு படைகளுக்குச் செய்யப்பட்ட ஒரு துரோகமாகவும் வெளிச்சக்திகளை சாந்தப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் எதிரணி அரசியல்வாதிகளும் தேசியவாதிகளும் குற்றஞ்சாட்டுகிறார்கள். தற்போது எதிர்நோக்கப்படுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் சவால்களில் இருந்து கவனத்தை திருப்பவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டதாக வேறு சிலர் கூறுகிறார்கள்.

ஈஸ்டருக்கு அப்பால்

ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கத்தோலிக்கத் திருச்சபை புதிதாக முடுக்கிவிடப்பட்டிருக்கும் விசாரணைகளுக்கு ஆதரவை வெளிக்காடியிருக்கிறது. குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையை பக்கச்சார்பான கட்சி அரசியல் களத்துக்கு அப்பால் கொண்டு செல்வதற்கும் உண்மை மற்றும் நீதிக்கான தேடலை முன்னெடுப்பதற்கும் கத்தோலிக்க திருச்சபையின் ஈடுபாடு உதவ.யிருக்கிறது. ஆனால், உண்மைக்கான இந்த தேடலை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. இந்த தாக்குதல்கள் கடுங்

கொடியவையாக இருந்தாலும், அவற்றுக்கு அப்பாலும் உண்மைக்ககான தேடலை விரிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

ஒரு அட்டூழியத்தை விசாரிக்கின்ற அரசு அதேவேளை மற்றைய அட்டூழியங்களை அலட்சியம் செய்தால் அது சில உயிர்கள் மற்றைய உயிர்களை விடவும் முக்கியமானவை என்று சமிக்ஞை காட்டுவதாக அமையும். இது இனத்துவ மற்றும் மத அடிப்படைகளில் பிளவுபட்டிருக்கும் ஒரு நாட்டில் ஆபத்தான ஒரு செய்தி. உண்மையை கண்டறிவதற்கான முயற்சிகள் நெருக்கடியான சூழ்நிிலைகளில் போராடியவர்களுக்கு செய்யப்படும் துரோகமாக. அயையாது. சட்டத்தின் ஆட்சி சகலருக்கும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதாகவே அது இருக்கும். சந்தேகத்தில் இருந்து நிறுவனங்களை விடுவிப்பதன் மூலமாக அவை பலப்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கை மீண்டும் ஏற்படுத்தப்படுகிறது.

இலங்கையின் நவீன வரலாறு தீர்வுகாணப்படாத பல குற்றச்செயல்கள் நிறைந்ததாக இருக்கிறது. இனப்போரின்போது இடம்பெற்ற பெருமளவு கொலைகள், ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் நீதிவிசாரணைக்கு புறம்பான கொலைகள் தொடர்பில்

பொறுப்புக் கூறப்படவில்லை. போரின்போது தேவாலயங்களும் அனாதை இல்லங்களும் விமானக்குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின. முகாம்களில் இருந்து கூட்டிச் செல்லப்பட்டவர்களும் சரணடைந்தவர்களுமாக நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய்விட்டார்கள். இவற்றுக்கெல்லாம் பதில் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.

காணாமல் போனவர்களின் தாய்மார் காணாமல் போகவில்லை. தங்களது பிள்ளைகளை மறக்க முடியாதவர்களாக, அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிய அந்த தாய்மார் வீதியோரங்களில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிடிவாதம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பிரதிபலிக்கிறது. இரு தரப்பிரும் ஒரே கேள்வியையே கேட்கிறார்கள்.

யார் இதற்கு பொறுப்பு? ஏன்? இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை நீண்டகாலமாக தவிர்த்த இலங்கை கடந்த காலத்தை மீண்டும் திறப்பது உறுதிப்பாட்டுக்கு ஆபத்தானதாக அமையும் என்றும் எதிர்காலத்தின் மீது கவனத்தைக் குவிப்பதே வெற்றிக்கான பாதையாகும் என்றும் வாதிடுகிறது.

ஆனால், நினைவும் உண்மை மற்றும் நீதிக்கான வேட்கையும் மறைந்துவிடுவதில்லை. கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய கோட்பாடுகளாக உண்மைக்கும் நீதிக்கும் முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக அரசாங்கம் பொது நிறுவனங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துவதை ஆரம்பிக்க முடியும்.

இதற்கு என்ன நடந்தது என்பதை விசாரிப்பதும் ஏன் பொறுப்புக்கூறல் மறுக்கப்படுகிறது என்பதை அறிவதும் அவசியமானதாகும். காயங்களை குணப்படுத்துவது என்பது இறந்தவர்களை மறப்பதில் தங்கியிருக்கவில்லை. நீதி என்பது தண்டனை வழங்குவது மாத்திரமல்ல, பழைய நிலைக்கு கொண்டு வருவதுமாகும். அது பேசப்படாத சுமைகளை தூக்கிச் செல்லாமல் சமூகங்கள் முன்னோக்கிச் செல்ல அனுமதிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் , போர் இடம்பெற்ற வருடங்களில் காணாமல் போனவர்கள்,அரசியல் வன்செயல்களில் இழப்புக்களை சந்தித்தவர்கள் எல்லோரும் சமத்துவமாக நடத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ள இலங்கைக் குடிமக்களின் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே.இது உண்மை தொடர்பில் நிலையான ஒரு தராதரத்தை வேண்டிநிற்கிறது.ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் எங்கு இட்டுச் சென்றாலும் அதை நோக்கி முன்னெடுப்பதன் மூலமும் போர் வருடங்களின் தீர்வுகாணப்படாத குறாறங்களுக்கு தீர்வைக் காண்பதன் மூலமும் அரசாங்கம் நாட்டை மீட்சி நோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.