;
Athirady Tamil News

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி

0

டெல் அவிவ்

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இதனால், விமானம், சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிப்படைந்து உலக அளவில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

மேற்காசியாவின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். கத்தாரில் மட்டும் 8 ஆயிரம் பயணிகளும், மத்திய கிழக்கின் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து கடந்த 4 நாட்களாக நடத்திய தொடர் தாக்குதலில் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்தனர். இதில் 181 குழந்தைகளும் அடங்கும். அவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதுதவிர, 100 குழந்தைகள் உள்பட 5,402 பேர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த 4 நாட்களாக நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் மொத்தம் 1,164 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், லெபனான் – 40 பேர், இஸ்ரேல் – 11 பேர், ஈராக் – 2 பேர், குவைத், யு.ஏ.இ. – தலா 3 பேர், பஹ்ரைன், ஓமனில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கான செய்தி அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. எனினும், ஈரானில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.