;
Athirady Tamil News

பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் – வாதாட 15 நிமிடம்தான் கொடுக்கப்படுகிறது!!

0

ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான HRANA – வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22 வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார்.

தங்களது சுதந்திரத்திற்காகவும், ஈரானின் மதகுரு ஆட்சியிலிருந்து விடுபடுவதற்காகவும் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இரானின் அதிகார மையங்கள் எப்படி செயல்படுகிறது என்பதற்கு மொகமத் மெஹ்தி கராமின் கதை ஓர் உதாரணம்.

அதேப்போல் சமீபத்தில் பிரிட்டிஷ்- ஈரானிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்ற அலிரேசா அக்பரி என்பவர் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. பிரிட்டனின் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்ட இவர், எந்தவொரு வகையிலும் ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இவரிடம் வலுகட்டாயமாக வாக்குமூலம் வாங்கப்பட்டு, தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது இந்த நிலைமைதான் ஈரான் சிறையிலிருக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வருகிறது.
நான் மரணிக்கப்போவது அம்மாவுக்கு தெரிய வேண்டாம்!

இரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக இரான் காவல்த்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டார். அங்கு நடந்த விசாரணையின்போது தலையில் பலமாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்துதான் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு எதிராக இரானில் மீண்டும் போராட்டம் எழுந்துள்ளது.

இதனையடுத்து ஈரானின் துணைராணுவத்தைச் சேர்ந்த பாசிஜ் என்பவர் கடந்த நவம்பர்3-ஆம் தேதி கராஜ் பகுதியில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு மொகமத் மெஹ்தி என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தெஹ்ரான் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள கராஜ் நீதிமன்றத்தில் ஒரே நாளில் விசாரிக்கப்பட்டனர்.

இரானில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதுப்போன்ற வழக்குகளில் அந்த முறை சுதந்திரமாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

அப்படி வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் தோன்றும் மொஹமத் மெஹ்தி, `தான்தான் அந்த துணைராணுவ அதிகாரியை பாறையில் அடித்து கொன்றதாக ஒப்புகொள்கிறார்`. இந்த வழக்கை மொஹமத் மெஹ்தி தரப்பில் வாதாடுவதற்காக நியமிக்கபட்ட வழக்கறிஞர் இதற்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக மொஹமத் மெஹ்தியை மன்னிக்குமாறு நீதிபதியிடம் கேட்கிறார்.

அதனை தொடர்ந்து பேசும் மொஹமத் மெஹ்தி, `தான் முட்டாளாக்கப்பட்டதாக கூறிவிட்டு அமர்கிறார்`.அதன்பின்னர், குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டு, அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது.

பொதுவாக தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக வெளியே பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷால்லா கராமி, ஈரானின் எடிமட் நாளிதழிடம் பேட்டியளித்துள்ளார். அதில், `அப்பா எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாமென அப்பாவித்தனமாக மொஹமத் மெஹ்தி அழுதுக்கொண்டே கேட்டுக்கொண்டதாக` அவர் கூறியுள்ளார்.

மொஹமத் மெஹ்தியின் இறப்புக்கு பிறகு ‘1500 இமேஜஸ் (images) என்ற பெயர்கொண்ட சமூகவலைதள கணக்கு ஒன்று மொஹமத் மெஹ்தி எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது குறித்த பல தகவல்களை வெளியிட்டது.

அதில், ` தான் சுயநினைவை இழக்கும் அளவுக்கு தாக்கப்பட்டதாகவும், தான் இறந்துவிட்டதாக கருதிய சிறைக்காவலர்கள் தன்னை ஏதோவொரு இடத்தில் வீசிவிட்டு சென்றதாகவும், ஆனால் தான் அப்போது உயிருடன் பிழைத்திருந்ததாகவும்` தன் குடும்பத்தினர் மொஹமத் மெஹ்தி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அந்தரங்க பகுதியை தொடும் சிறைக்காவலர்கள், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தததாகவும் கூறியுள்ளார்.

எடிமெட் நாளிதழிடம் பேசிய மொஹமத் மெஹ்தியின் தந்தை, `இந்த வழக்கில் தன் மகனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞரை தொடர்புக்கொள்ள தான் பலமுறை முயற்சி செய்ததாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு ஒருதடவை கூட கிடைக்கவில்லையெனவும்` தெரிவித்துள்ளார்.

பின்னர் இரானில் மிகவும் திறன்வாய்ந்த மனித உரிமை வழக்கறிஞராக அறியப்படும் மொஹமத் ஹோசேன் அகாசியை தனது மகனுக்காக வாதாடுமாறு அழைத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மொஹமத் தரப்பில் வாதாடுவதற்காக பலமுறை மனு அளித்திருக்கிறார் ஹோசேன் அகாசி. ஆனால் அவையனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் ஈரான் மக்கள்

இந்த நிலையில் காரஜ் பகுதியில் மொஹமத் ஹொசைனி என்னும் மற்றொரு இளைஞர் இரானின் போலியான சட்ட நடவடிக்கைகளால் தூக்கிலிடப்பட்டார். இவருக்கு பெற்றோர்கள் இல்லை. அதனால் இவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்காக நியாயம் கேட்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் என யாரிமில்லாத சூழலில், ஈரானைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் சமூக ஊடகங்களில் ‘We are all Mohammad’s family’ என்று பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

அந்த சமயத்தில் மொஹமத் ஹொசைனி bipolar disorder என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று பிபிசியின் பாரசீக சேவை நிறுவியிருந்தது.

இத்தகைய சூழலில், தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு தனக்கென ஒரு வழக்கறிஞர் வைத்துகொள்வதற்கு மொஹமத் ஹொசைனிக்கு அனுமதி கிடைத்திருந்தது.

அவரின் வழக்கறிஞரான அலி ஷரிப்சாதே அர்டகானி, மொஹமத் ஹொசைனியை சிறையில் சென்று சந்தித்தது குறித்து, பின்னாளிள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில், `நான் சிறைக்கு சென்றபோதெல்லாம் அவர் அழுதுக்கொண்டே இருந்தார். தான் அனுபவித்த சித்ரவதைகள் குறித்தும், கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு தான் துன்புறுத்தப்பட்டது குறித்தும், காவலர்களால் தலையில் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்தது குறித்தும் அவர் என்னிடம் பேசினார்` என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், சித்ரவதைகளின் மூலம் மட்டுமே அவரிடம் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன எனவும் அலி ஷரிப்சாதே அர்டகானி கூறுகிறார்.

இதுகுறித்த ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்வதற்கு கடந்த ஜனவரி 7ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அந்த தேதியில் ஆவணங்களை சமர்ப்பிக்க அலி ஷரிப்சாதே அர்டகானி நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்தபோது, மொஹமத் ஹொசைனி ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்து அதிர்ந்து போகிறார்.

அதன் பின்னர் அலி ஷரிப்சாதே அர்டகானியும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளியில் வந்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்படுபவர்கள் எந்தவொரு தவறும் செய்யாத சமயத்தில், வலுகட்டாயமாக அவர்கள் குற்றத்தை ஒப்புகொள்வதற்கு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு எதிராக இரானின் மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பிபிசி பாரசீகத்திடம் பேசிய ஒருவர், `பாதிக்கப்படுபவர்களுக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக , அவர்களை குற்றத்தை ஏற்றுகொள்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்` என்றார்.

இதுத்தவிர ஈரானில் மேலும் 109 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக இரானின் மனித உரிமை அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன.

அதில் 60 வயது நிறைவடைந்தவர்களை அடையாளம் காண முடிகிறது எனவும், தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் சராசரியாக 27 வயதை ஒத்தவர்கள் எனவும், அதில் 3 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் அமைப்பு சாரா நிறுவனங்கள் கூறுகின்றன.

`மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷல்லா கராமி தனது மகனின் கல்லறையில் மண்டியிட்டு அழுகிறார். கருப்பு சட்டை அணிந்த தனது மகனின் புகைப்படத்தை தனது கைகளில் ஏந்திக்கொண்டு மற்றொரு கையால் அவர் தனது கழுத்தை இறுக்கி பிடித்துக்கொள்கிறார்`. ஈரான் மக்களின் போராட்டங்களின் மற்றொரு துயரமான காட்சியாக இது இப்போது சமூக ஊடகங்களில் பரவிக்கிடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.