;
Athirady Tamil News

அமெரிக்காவில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்: பறிபோன கருப்பினத்தவர் உயிர்

0

அமெரிக்கா ஓஹியோவில்(Ohio) காவல்துறையினர் தாக்கியதில் கருப்பினத்தவர் ஒருவர் மரணமடைந்துள்ள காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவில் கருப்பின மக்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் காவல்துறையினர் சிலர் அங்கிருக்கும் மதுபானக்கடை ஒன்றில் கருப்பினத்தவர் ஒருவரை வலுக்கட்டாயமாக கழுத்தில் மண்டியிட்டு கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கறுப்பினத்தவரான யூஜின் டைசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கார் விபத்து
குறித்த நபர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஒரு கார் விபத்தை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினருக்கு பயந்து அவசரமாக அருகில் இருந்த மதுபானக் கடைக்குள் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரை துரத்திச்சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்ய முற்பட்ட நிலையில் அச்சமயம் அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதில் காவல்துறையினர் குறித்த நபரை தரையில் சாய்த்து அவரது முன்னங்கழுத்தை தமது கால் முட்டியைக்கொண்டு அழுத்தி அவரினை கைகளில் விலங்கிட முற்பட்டுள்ளனர்.

காவல்துறையினர்
இதில் மூச்சுவிட திணறிய அந்த நபர் தன்னால் மூச்சு விட முடியவில்லையென தொடர்ந்து காவல்துறையினரிடம் கத்தியுள்ளார்.

ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத காவல்துறையினர் அவரை கைது செய்வதில் முனைப்பை காட்டியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த நபர் அசையாமல் இருக்க அவரை பரிசோதித்த காவல்துறையினர் அவரது இதயத்துடிப்பு குறைவதைக்கண்டு அவரின் கையுறைகளை அகற்றி அவருக்கு முதலுதவி கொடுத்துள்ளனர்.

சமூகவலைதளங்கள்
அதன் பிறகு ஸ்ட்ரெச்சரில்(stretcher) மருத்துவ அவசர ஊர்திக்கு(ambulance) ஏற்றி சென்ற நிலையில் அந்த காணொளியானது(Video) சமூகவலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த நபர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் காவல்துறையின் மிருகத்தனமான இப்போக்கைகண்டித்து இனப் பாகுபாடுகளுக்கு எதிரான எதிர்ப்புகளை மக்களிடையே தூண்டியுள்ளது.

மேலும் காவல்துறையினரால் கொல்லப்பட்ட இந்த நபர் கடந்த 13 நாட்களுக்கு முன்புதான் 24 வருட சிறை தண்டனையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.