;
Athirady Tamil News

கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் வழங்கும்: டி.கே.சிவக்குமார்!!

0

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தனித்தனியாக யாத்திரை நடத்தி வருகிறது. மேலும் 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரஜா சக்தி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை நேற்று ஹாசன் மாவட்டத்தில் நடந்தது. ஹாசன் தண்ணீருஹல்லா பகுதியில் பிரஜா சக்தி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் வந்தனர். டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு ஹாசன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரேன் மூலம் அவர்கள் 2 பேருக்கும் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மேடைக்கு சென்று டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் பிரஜா சக்தி யாத்திரை பொதுக்கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் நகரில் முக்கிய பகுதிகள், சர்க்கிள்களில் காங்கிரஸ் கட்சியின் பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:- ஹாசனில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்து ஒரு குடும்பத்தினருக்கு (ஜனதாதளம்(எஸ்) கட்சி) அச்சம் ஏற்படும். இங்குள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

இதற்கு இங்கு திரண்டிருக்கும் மக்களே சாட்சி. தற்போதைய பா.ஜனதா ஆட்சியால் பெண்கள் அவதிப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவை விலக்கி வைக்கவே விரும்புகிறது. இதனால் தான் கடந்த முறை காங்கிரசை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால், ஓராண்டில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம் குமாரசாமி தான். பா.ஜனதா அரசு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது.

கொரோனா சமயத்தில் கூட இந்த அரசு பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தது. விலைவாசி உயர்வு, மக்களின் பிரச்சினை பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை. ஆட்சி அதிகாரம், பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். அனைவரும் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.

ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் வழங்கும். லஞ்சம், ஊழலை ஒழிக்க மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். 200 யூனிட் மின்சாரத்தை எப்படி வழங்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை அனைவரும் பார்ப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.