;
Athirady Tamil News

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!!

0

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள தொழில்களை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதனை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதனை அடையாளங்காண்பதன் மூலம், தற்போதைய நெருக்கடியை வெற்றிகொள்ளவும் , உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை கண்டறிவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுதல், சேவை மற்றும் ஏற்றுமதி துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்துதல்,உள்நாட்டுக் கைத்தொழிலுக்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளைக் கொண்டு வருதல் மற்றும் முன்னணி தொழில்துறையினருடன் வலையமைப்பை ஏற்படுத்துதல் என்பன இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

சைபர் பௌதீக கட்டமைப்பு (Cyber-Physical Systems), இணையத் தகவல் ( (Internet of Things), இணைய சேவைகள் (105), ரோபோ தொழில்நுட்பம் ((Robotics), பாரிய தரவு (Big Data), கிளவுட் கணனி மற்றும் உற்பத்தி (Cloud Computing & Manufacturing), மேம்படுத்தப்பட்ட யதார்த்தம்(augmented reality) மேம்படுத்தப்பட் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற தொழில் நுட்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் என்பன இந்தக் கண்காட்சி ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.

பல்வேறு துறைகளினூடாக டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியை அடைவதன் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள சமூகப்படித்தரங்களைச் சேர்ந்த இனக் குழுக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கி, அதன் ஊடாக சமூகத்தை வலுப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கண்காட்சியின் ஏற்பாடுகள் யாவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் நிதி, வெளிவிவகாரம், கைத்தொழில், கல்வி, போக்குவரத்து, வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட 13 அமைச்சுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய வழிநடத்தல் குழுவினால் முன்னெடுக்கப்படும்.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை முதலீட்டுச் சபை, வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.