;
Athirady Tamil News

நாம் உயிருடனிருக்கும் வரை 13 ஐ எவராலும் நடைமுறைப்படுத்த முடியாது – ஜனாதிபதிக்கு தேரர் கால அவகாசம்!!

0

பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.

ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை இல்லாதொழித்துள்ளார். 2009 இன் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்காக 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை 9 பகுதிகளாக பிளவடையச் செய்வதே அவரது தேவையாகவுள்ளது. நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளைப் புறந்தள்ளி இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

அவர் கூறுவதைப் போன்று 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் 9 மாகாணங்களுக்கும் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர்களால் நாடு சீரழிவுக்குள்ளாக்கப்படும்.

எமக்கு தமிழ் மக்களுடன் எந்த பிரச்சினைகளும் இல்லை. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விடுத்து ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இது தொடர்பில் தீர்க்கமான முடிவினை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். எனவே அவர் தனது முடிவை மகா சங்கத்தினருக்கு அறிவிக்க வேண்டும்.

நாட்டில் இரத்த வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். பௌத்த மத குருமார்கள் விகாரையில் இருக்க வேண்டும் என்று சி.வி.விக்கினேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

விகாரையிலிருந்து கொண்டே மக்களின் ஒற்றுமைக்காக செயற்படுவோம் என்பதை அவரிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பௌத்த மதகுரு மார்களை முற்றாக இல்லாதொழித்தால் மாத்திரமே 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

ராஜபக்ஷாக்கள், மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க 13 தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.