;
Athirady Tamil News

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் சூறை!!

0

நைஜீரியாவில் ஊழலை ஒழிக்கும் விதமாக அந்த நாட்டு அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்த நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடைசி நாளாக 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதியை அறிவித்திருந்தது. பின்னர் அது பிப்ரவரி 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், போதுமான அளவில் புதிய நைரா நோட்டுகளை வங்கிகளால் புழக்கத்துக்கு கொண்டு வர முடியவில்லை.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதனால் பணப்புழக்கம் இல்லாமல் கடும் கொந்தளிப்புக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முக்கிய சாலைகளை மறித்தும், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போராட்டங்களில் வன்முறைகள் வெடித்து வருகின்றன.

கோபமடைந்த மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களை அடித்து நொறுக்கி சூறையாடி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வங்கிகளுக்கு தீவைத்த சம்பவங்களும் அரங்கேறின. நைஜீரியாவில் வரும் 25-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.