;
Athirady Tamil News

சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு தொடங்கியது!!

0

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் பிப்ரவரி 24-ந் தேதி (நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான உத்தி வகுக்கப்படும், கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நவராய்ப்பூரில் உள்ள ராஜ்யோத்சவ் ஸ்தலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. காங்கிரஸ் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, காரியக்கமிட்டிக்கு மாற்றாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவால் அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, ” காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துக்கூறுவதுடன், கூட்டாக முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்ன முடிவு செய்தாலும், அதுதான் என் முடிவு. அதுதான் ஒவ்வொருவரின் முடிவும் ஆகும்” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:- ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள நிலையில், பாராளுமன்ற அமைப்புகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அரசியல் நடவடிக்கைகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. 1885-ம் ஆண்டில் இருந்து (காங்கிரஸ் கட்சி தோன்றியதில் இருந்து) இதுவரை கட்சியின் 84 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் நூற்றாண்டில் இந்த மாநாடு நடைபெறுவது சிறப்பு ஆகும். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநாடுகளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் பல எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில முடிவுகள் மைல்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- காங்கிரஸ் காரியக்கமிட்டி தேர்தல்கள் குறித்து வழிகாட்டும் குழு சுதந்திரமாக விவாதித்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட கிட்டத்தட்ட 45 பேரும், காரியக்கமிட்டி உறுப்பினர்களை கட்சித்தலைவர் நியமிக்க ஒருமனதாக தீர்மானித்தார்கள். பல உறுப்பினர்கள், காரியக்கமிட்டி தேர்தலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

வழிகாட்டும் குழுவின் ஒருமித்த முடிவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் அனைவரும் ஆதரிப்பார்ககள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். காங்கிரஸ் மாநாடு, கட்சியின் சாசனத்தில் 32 விதிகளில் 16 திருத்தங்களை கொண்டு வருவது பற்றி முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்களுக்கும், கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கும் காங்கிரஸ் காரியக்கமிட்டியில் பிரதிநிதித்துவம் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிற்பகல் 2½ மணிக்கு ராய்ப்பூர் வந்தனர். சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு மேளதாளத்துடன், பாரம்பரிய நடனங்களுடன் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் சோனியாவும், ராகுலும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.