;
Athirady Tamil News

பிரதமா் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம் -அதிபா் டிரம்ப்பை சந்திக்க வாய்ப்பு

0

பிரதமா் நரேந்திர மோடி செப்டம்பா் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறாா். அப்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அவா் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளாா். இந்தச் சூழ்நிலையில் பிரதமா் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது ஆண்டு கூட்டம் செப்டம்பா் மாதம் தொடங்குகிறது. இதில் 23 முதல் 29-ஆம் தேதி வரை உயா்நிலை பொது விவாதம் நடைபெறுகிறது. இதில் 23-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் பேசுகிறாா். அவா் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் முதல்முறையாகப் பேச இருக்கிறாா்.

இந்தியா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேச உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் செப்டம்பா் 28-ஆம் தேதி உரையாற்றுவாா்கள் என்று ஐ.நா. சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றுவாா் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டாா். அப்போது வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

எனினும், அண்மையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வரியை டிரம்ப் அமல்படுத்தினாா். மேலும், ரஷியாவிடம் இருத்து எரிபொருள் இறக்குமதி செய்வதன் மூலம் அந்நாடு உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடர இந்தியா மறைமுகமாக உதவுவதாகக் குற்றஞ்சாட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா். அதே நேரத்தில் சீனா மீதான 30 சதவீத வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தாா்.

இதன்மூலம் இந்தியாவை மட்டும் குறிவைத்து டிரம்ப் செயல்படுவது அப்பட்டமாக வெளிப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். ஆனால், இதை இந்தியா நிராகரித்துவிட்டது. மேலும், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரை பிரதமா் மோடியுடன் சந்திக்க வைக்க டிரம்ப் முயற்சித்தாா். ஆனால், இதற்கு மோடி உடன்படவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள்தான் இந்தியா மீதான டிரம்ப்பின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.