;
Athirady Tamil News

ரூ.35 கோடி செலவில் 15 கோவில்களில் ராஜகோபுரம், 18 கோவில்களுக்கு புதிய தேர்- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !!

0

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும். விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், கும்பகோணம் கீழப்பழையாறை சோமநாத சுவாமி கோவில், ஈரோடு, வேலாயுதசாமி கோவில், நாமக்கல் தோளூர் நாச்சியார் கோவில், வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் ரூ.26 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் கட்டப்படும். திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில், திருவாருர் பூவலூர் சதுரங்க வல்லப நாதசாமி கோவில் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி கோவில் உள்பட 18 கோவில்களுக்கு ரூ.9.20 கோடி மதிப்பில் புதிய மரத்தேர்கள் செய்யப்படும். சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மருதமலை கோவில் உள்பட 5 கோவில்களில் ரூ.200 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். மேலும் 108 ஆன்மீக நூல்கள் வெளியிடப்படும்.

ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மீக பயணத்துக்கு இந்த ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள். கட்டணமில்லா இலவச திருமண உதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.4 ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 756 கோவில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.