;
Athirady Tamil News

தொழுகையில் ஈடுபட்டவர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்

0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், வீதியில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பலஸ்தீனியர் மீது இஸ்ரேலிய இராணுவத்தின் தயார்நிலை வீரர் ஒருவர் தனது வாகனத்தை ஏற்றித் தாக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த காணொளி காட்சிகளில், வழிபாட்டில் ஈடுபட்டவர் தரையில் வீழ்ந்ததும், சாதாரண உடையில் இருந்த அந்த வீரர் அவரை நோக்கிச் சத்தமிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு சைகை செய்வது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய காட்சிகள் கிடைத்துள்ளன.

அவர் ஒரு தயார்நிலை வீரர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரது இராணுவச் சேவை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவருடைய ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான பலஸ்தீனியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது அவர் வீடு திரும்பியுள்ள போதிலும், தாக்குதலின் காரணமாக அவரது இரு கால்களிலும் வலி இருப்பதாக அவரது தந்தை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வீரர் தனது மகன் மீது மிளகுத் தூள் தெளித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“தாக்குதல் நடத்தியவர் அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்ட குடியேற்றவாசி. அவர் கிராமத்திற்கு அருகே ஒரு புறக்காவல் நிலையத்தை அமைத்துக்கொண்டு, மற்றவர்களுடன் சேர்ந்து அடிக்கடி குடியிருப்பாளர்களைத் துன்புறுத்தி வருகிறார்,” என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை தெரிவித்தார்.

அந்த இஸ்ரேலிய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு, ஐந்து நாட்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதே நபர் இதற்கு முன்னரும் அந்த கிராமத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரியவந்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, மேற்குக் கரையில் பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் வன்முறை இந்த ஆண்டு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.