;
Athirady Tamil News

அதிமுக ஆட்சியின் ஊழல்களை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!

0

அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது. 60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது. 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது. தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.