;
Athirady Tamil News

40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் – அசோக் கெலாட் அதிரடி!!!

0

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுக்க சுமார் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இண்டர்நெட் பேக் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் மாத இறுதியில் கொண்டாடப்பட இருக்கிறது. “சிரஞ்சீவி திட்டத்தின் கீழ், நாங்கள் அனைத்து மகளிரையும் குடும்ப தலைவிகளாக்கி இருக்கிறோம். 1 கோடியே 35 லட்சம் பெண்கள் அவர்களது வீட்டின் குடும்ப தலைவிகள் ஆகியுள்ளனர். இந்த பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும்.”

“ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை ராஜஸ்தானில் உள்ள பெண்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறோம்,” என்று அனுமன்கர் மாவட்டத்தை அடுத்த ராவட்சர் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் நிவாரண முகாமில் தங்கியிருந்த மக்களிடையே பேசும் போது மாநில முதல்வர் கெலாட் தெரிவித்தார். முன்னதாக 2022 பட்ஜெட் அறிவிப்பின் போது மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் இலவச ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி முக்கியமந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட இருக்கிறது.

எனினும், ஒரே சமயத்தில் இத்தனை ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாது என்பதால், இந்த திட்டத்தை ஒரே சமயத்தில் முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி மொத்தத்தில் 1 கோடியே 37 லட்சத்து 82 ஆயிரத்து 951 குடும்பங்கள் சிரஞ்சீவி காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வரை ஒரு ஆண்டு முழுவதுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.