;
Athirady Tamil News

சேலத்தில் கல்லூரி பஸ்சை ஓட்டும் இளம்பெண்!!

0

நவீன இந்த உலகத்தில் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அடுப்படியில் கிடந்த நிலை மாறி, அத்துபடி என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலும் சிலர் தங்கள் விரும்பிய துறையில் அசாத்தியமாக சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது. தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சில இடங்களில் பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பஸ் ஓட்டுகிறார்கள். சமீபத்தில் கோவையில் சர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுபோல் சேலத்திலும் முதல் முறையாக இளம்பெண் ஒருவர் மகளிர் கல்லூரி பஸ் டிரைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முதல் கல்லூரி பஸ் ஓட்டுனராக திகழ்ந்து வருகிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்வி பயில வரும் மாணவிகளுக்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை இந்த கல்லூரி பஸ்ஸை ஆண் டிரைவர்களே இயக்கி வந்தார்கள்.

பெண்கள் மட்டுமே படிக்கும் இந்த கல்லூரியில் தற்போது ஓமலூர் முத்து நாயகன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் தமிழ்செல்வி (வயது 28), என்பவரை, கல்லூரி நிர்வாகம் டிரைவாக நியமித்துள்ளது. இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மகளிர் கல்லூரி பஸ்சில் பெண் ஒருவரை டிரைவராக நியமித்திருப்பது மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழ்ச்செல்வி, கல்லூரி பஸ்சை தினமும் காலை, மாலையில் இயக்கி வருகிறார். இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:- எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன்.

அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன். நான் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். தற்பொழுது எனது 4 வயது குழந்தையை நாள்தோறும் தனது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளூரில் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்ற வந்துள்ளேன். டிரைவர் பணிக்கு பெண் ஒருவரை நியமித்து கல்லூரி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதன் மூலம் எனது வெகுநாள் கனவு நிறைவேறி உள்ளது. டிரைவர் என்பது ஒரு தொழில் தான். டிரைவர்களுக்கு உண்டான மரியாதை அனைவரும் தர வேண்டும்.

பெண்களுக்கு பெண்கள் தான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் வகையில் மகளிர் கல்லூரி பஸ் டிரைவர் பணியினை நான் நேசித்து பணியில் சேர்ந்து உள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார். மகளிர் கல்லூரியில் பெண் ஒருவர் டிரைவர் பணியில் சேர்ந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. அவருக்கு பாராட்டு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.