சத்தீஸ்கரின் 39 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!
சத்தீஸ்கரில், செயல்பட்டு வந்த 39 மாவோயிஸ்டுகள் உள்பட 41 பேர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் 39 பேர் உள்பட 41 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி பி. ஷிவதார் ரெட்டி முன்னிலையில் நேற்று (டிச. 19) சரணடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் நவீன ரக துப்பாக்கிகள் உள்பட 24 ஆயுதங்களை, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் பதவிகளுக்கு ஏற்ப அவர்களின் மறுவாழ்விற்காக அரசு திட்டங்களின் கீழ் தலா ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மறுவாழ்வு நிதிகளில் இருந்து ரூ. 1.47 கோடி சரணடைந்துள்ள 41 மாவோயிஸ்டுகளுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து மாவோயிஸ்டுகளும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.