நாட்டில் நல்லது நடப்பதை சிலர் விரும்புவதில்லை: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர் ரெயில்நிலையம் மறுஉருவாக்கத்திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் என ரூ.5,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கான விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு. முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்னிலையில் வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் சாடினார். அவர் கூறியதாவது:- நாட்டில் உள்ள சிலர் (காங்கிரசார்) சிதைக்கப்பட்ட சித்தாந்தத்துக்கு இரையாகி விட்டனர். அவர்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். அவர்கள் நாட்டில் நடக்கிற எந்த நல்லதையும் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் சர்ச்சையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறார்கள். எல்லாவற்றையும் ஓட்டு அடிப்படையில் பார்ப்பவர்களால், நாட்டை மனதில் கொண்டு திட்டங்களைத் தீட்ட முடியாது.
இந்த சிந்தனை காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுககு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது. நவீன கட்டமைப்பு வசதிகளை அடிப்படை அமைப்புடன் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. தேவையான அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளை ஏற்கனவே தொடங்கியாகி விட்டது என்றால், டாக்டர்களுக்கு பற்றாக்குறை இருக்கக்கூடாது. எல்லா வீடுகளிலும் ஏற்கனவே தண்ணீர் கிடைக்கத் தொடங்கி இருந்தால், ஜல்ஜீவன் திட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தொலைநோக்குத்திட்டத்துடன் ராஜஸ்தானிலும் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
நவீன கட்டமைப்பு வசதிகள் நகரங்கள், கிராமங்களை இணைப்பதை அதிகரிக்கும். வசதிகளை ஏற்படுத்தும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். வளர்ச்சியை முடுக்கி விடும். வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை காண வேண்டும் என்று நாம் பேசுகிறபோது, இந்த நவீன கட்டமைப்பு வசதி, புதிய சக்தியாக உருவாகும். நாட்டில் எல்லா வகையிலான உள்கட்டமைப்புகளிலும் இதுவரையில்லாத வகையில் பெரும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதிவேகமாக பணிகள் நடைபெறுகின்றன. உள்கட்டமைப்புகளுக்காக முதலீடுகள் செய்கிறபோது, அது வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் நன்மைகள் மக்களுக்குப் போய்ச்சேருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.